TNPSC Thervupettagam

பகுத்துண்டு பல்லுயிர் காப்போம்

May 4 , 2019 2032 days 1218 0
  • மனிதன் தன் ஆறாம் அறிவைக் கொண்டு, ஐந்தறிவுள்ள உயிர்களுக்கு அடைக்கலம் தந்து அவற்றைப் பாதுகாப்பான் என்று கடவுள் நம்பினார். ஆதிமனிதனும் அப்படியே செய்துவந்தான்.
முன்னோர்களின் வாழ்க்கை
  • நமது முன்னோர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்து வந்தது. பஞ்சபூதங்களை வழிபட்டனர். சந்திர சூரியரையும், வருணனையும் வணங்கி வந்தனர். விநாயகனை ஆனைமுகத்தான் என்று கும்பிட்டனர். விஷமுடைய பாம்பையும்கூட நவக்கிரகங்களில் ஒன்றாக வைத்துப் பூஜித்தார்கள்.
  • நமது இலக்கியங்களும் இயற்கையின் அம்சங்களைப் போற்றியே எழுதப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பையே வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
இலக்கியங்கள்
  • இளங்கோவடிகளும் ஞாயிறு போற்றதும், என்றும், மாமழை போற்றதும் என்றும், இயற்கையை வணங்கியே சிலப்பதிகாரத்தை ஆரம்பித்திருக்கிறார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும், மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனும், தன் சதையைக் கொடுத்துப் புறாவைக்  காத்த சிபியும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் தோன்றிய  இந்தப் புண்ணிய பூமியில், இன்றைய மனிதர்களாகிய நாம், இன்று நம்மைச் சுற்றியுள்ள பல உயிர்களை ஆதரிக்கிறோமா இல்லையா? சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
  • பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை - என்கிறார் திருவள்ளுவர்.
  • கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலை சிறந்த அறமாகும் என்பதே இதன் பொருள்.
  • கிராமப்புறங்களில் சிறு வீடானாலும் சரி, பெரிய தோட்டமானாலும் சரி, நாய், பூனை, கோழி, ஆடு, மாடு என்று ஏதாவது ஒரு ஐந்தறிவு உயிரினம் இருக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு அவற்றுக்கும் உணவளித்து ஆதரவளிக்கின்றனர்.
நகர்ப் புறம்
  • நகரத்து மனிதர்களின் வீடுகள் பெரியவை, ஆனால் மனங்களோ குறுகியவை! அவற்றில் அவர்களைத் தவிர வேறு உயிர்களுக்கு இடமில்லை. வீடுகளோடு மனங்களையும் பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு மரம், செடி, கொடி வேண்டாம், மிருகங்கள் வேண்டாம். ஆனால், 24 மணி நேரமும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும்.
  • மரங்களின்றி மழையேது, நீரேது, மின்சாரமேது? அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புறாக்கள் உள்ளே வரக்கூடாது என்று வலை போட்டுக் கொள்கிறார்கள். நாயும், பூனையும் அலர்ஜி என்று குழந்தைகளை இவற்றின் அருகே அண்ட விடமாட்டார்கள்.
  • கிராமத்துக் குழந்தைகள் நாயோடும், பூனையோடும் கட்டிப் புரண்டு விளையாடி ஆரோக்கியமாக இருக்கையில் பாவம் நகரத்துக் குழந்தைகள் இவற்றை எட்ட நின்று ஏக்கத்தோடு பார்ப்பதோடு சரி. கிராமத்துக் குழந்தைகள் தேளோடும், பூரானோடும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்.
  • இவர்களும் அவற்றைத் தொந்தரவு செய்வதில்லை. அவையும் இவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நகரத்துக் குழந்தைகளோ தேளையும், பூரானையும் பாடப் புத்தகத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். பல்லிக்கும் கரப்பான்பூச்சிக்கும் பயப்படுகின்றனர்.
  • இன்னும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நகரத்து மனிதர் சிலர் மெனக்கெட்டு பறவைகளுக்குச் சிறு பாத்திரங்களில் சோறும், நீரும் வைத்துவிட்டு அதைச் சாப்பிட வரும் அணிலையும், காக்கையையும் படம் பிடித்து வலைதளங்களில் எல்லாம் போட்டு ஏதோ செயற்கரிய செயலைச் செய்துவிட்டாற்போல் பெருமையடித்துக் கொள்கிறார்கள். கிராமங்களில் இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வு என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
  • யானையும், புலியும், சிறுத்தையும், பாம்பும், மனிதனும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். ஒரே ஆற்று நீரைத்தான் பகிர்ந்து குடிக்கிறார்கள். விலங்குகள் உலவும் நேரத்தில் மனிதர்கள் வெளியே வருவதில்லை, மனிதர்கள் நடமாடும் இடத்துக்கு விலங்குகள் வருவதில்லை, ஓர் எல்லை வகுத்துக் கொண்டு மனிதர்களும், மிருகங்களும், மரங்களும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். ஆனால்,  இங்கும் இப்போது நகரத்து மனிதனின், எல்லாம் எனக்கே வேண்டும் என்ற பேராசையினால் ஐந்தறிவு ஜீவராசிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன.
  • இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் யானை ஊருக்குள் நுழைந்தது கிடையாது. இப்போது மட்டும் யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? அவற்றுக்கு நியாயமாகத் தர வேண்டிய இடத்தையும், நீரையும், உணவையும் மனிதன் அபகரித்துக் கொண்டதால்தான்!
  • ஐந்தறிவு ஜீவன்களைத்தான் நாம் ஒதுக்குகிறோம். ஆறறிவுள்ள சக மனிதனையாவது ஆதரிக்கிறோமா?
  • கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லொ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் என்றார் திருவள்ளுவர்.
உதாரணம்
  • இல்லை என்று பிச்சை கேட்டு ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அவ்வாறு கேட்பதற்கு முன் அவமானத்தால் அவனுக்குப் பாதி உயிர் போய்விடும். அவன் கேட்டு மற்றொருவன் இல்லை என்று சொல்லும்போது அச்சொல்லைக் கேட்டு அவனது மீதி உயிரும் போய்விடும். இல்லை என்ற விஷம் போன்ற சொல்லைச் சொல்கின்றானே, அவனது உயிர் எங்கேதான் போய் ஒளிந்து கொள்ளுமோ என்று வியக்கிறார் திருவள்ளுவர்.
  • பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், சிக்னல்களில் காத்திருக்கும் போதும், வயதான, உடல் ஊனமுற்ற சிலர் கையேந்தி நம்மிடம் யாசிக்கும்போது, இந்தத் திருக்குறளை நினைவு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்து அவர்களது பசியைப் போக்க வேண்டும்.
  • இந்தப் பூமி நமக்கு மட்டும் சொந்தமல்ல, கடவுள் படைத்த அத்தனை ஜீவராசிகளுக்கும் சொந்தம் என்பதை நாம் உணர வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் பல்லுயிர்களைக் காக்க வேண்டும் என்றால், முதலில் அவற்றை நேசிக்க வேண்டும். சிறு செடிகளையும், மரங்களையும் வீட்டுக்கு முன் நட்டு வளர்த்துப் பேண வேண்டும். அவற்றைத் தேடி வரும் பறவைகளுக்குச் சிறிது சோறும் தண்ணீரும் வைப்பதை நம் அன்றாட வேலைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கோடையில் சாலையோரம் வீட்டுக்கருகில் மண்சட்டியைப் பதித்துத் தண்ணீர் ஊற்றி வைத்தால் அவை தெரு நாய்களின் தாகம் தீர்க்க உதவும். தினம் தினம் தவறாமல் சோறும், நீரும் வைத்துப் பாருங்கள். ஒருநாள் சிறிது தாமதமானால்கூட, அணிலும், காக்கையும் வந்து கூவி அழைத்து உணவு கேட்கும். மீனும், கறியும் சாப்பிட்டுவிட்டு மீதமிருக்கும் எலும்புத் துண்டுகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல், ஒரு கிண்ணத்தில் போட்டு வெளியே வைத்தால் பூனைக்கு உணவாகும்.
  • தொட்டியில் செடிகள் வைத்திருந்தால்கூட, அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கவனியுங்கள். தேங்கும் தண்ணீரைச் சிறு குளவிகளும், தேனீக்களும் வந்து குடிக்கும். மரங்களின் அசைவையும், மழையின் துளிகளையும், பறவைகளின் கீதங்களையும் சற்றே கவனித்து ரசிக்க நேரம் ஒதுக்குவோம். பல்லுயிரையும் நேசிக்கப் பழகுவோம். நம்மிடம் இருப்பதை அவற்றோடு பகிர்ந்து கொள்வோம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்