- உணவு என்பது வாழ்வின் சாரம்; கலாச்சாரங்களின், சமூகங்களின் அடித்தளம். இந்தப் புவிக்கோளை வளர்த்தெடுக்கவும் செழுமையூட்டவும் நீடிக்கச் செய்யவும் மக்களை ஒன்றாகச் சேர்ப்பதற்கு சக்திவாய்ந்த வழிமுறை அது.
- நாம் வாழும் இந்த 2020-ல் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழல் இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது – கரோனா பெருந்தொற்றானது உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்துக்கும் மட்டும் அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை, உலகெங்கும் 69 கோடி மக்கள் ஏற்கெனவே எதிர்கொண்டிருந்த அச்சுறுத்தல்களையெல்லாம் இது ஒன்றுசேர்க்கிறது.
- கடந்த அக்டோபர் 16 உலகெங்கும் ‘உலக உணவு தினம்’ கடைப்பிடிக்கப்பட்டது. பட்டினியை ஒழிப்பதற்காகவும், உணவுப் பாதுகாப்பின்மையை ஒழிக்கவும் வளம்குன்றா வளர்ச்சி இலக்கு 2-ஐ அடையவும் நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதாக உறுதிமொழி எடுத்திருக்கிறோம்.
- சமீபத்திய தசாப்தங்களில் வேளாண் உற்பத்தி குறிப்பிடத் தகுந்த விதத்தில் அதிகரித்திருக்கிறது. எனினும், உலக அளவில் 200 கோடி மக்களுக்கு போதுமான, ஊட்டச்சத்து கொண்ட, பாதுகாப்பான உணவு கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமே.
- 2030-க்குள் பட்டினியற்ற உலகம் என்ற இலக்கையோ, உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளையோ எட்ட முடியாது என்பதையே இது குறித்த கணிப்புகள் காட்டுகின்றன.
- இந்தியா உணவு தானிய இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து உணவு தானிய ஏற்றுமதியாளர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இந்த பலமானது பெருந்தொற்றுக் காலம் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது.
- 2020 ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை 82 கோடி மக்களுக்கான உணவு தானியங்களை அரசு வெற்றிகரமாக அளித்திருக்கிறது; 9 கோடி பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு கிடைப்பதற்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்திருப்பதையும் இத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கூடவே, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சாகுபடி 3.4% அதிகரித்தது; சம்பா சாகுபடிப் பரப்பானது 11 கோடி ஹெக்டேர்களைத் தாண்டியது.
ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை
- கரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளின்போது உணவு மீதான கவனமானது இந்தியா எதிர்கொண்டிருக்கும் உணவு தொடர்பான சவால்களின் பல பரிமாணங்களை வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறது.
- கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு கணிசமாகக் குறைந்திருந்தாலும் 2016-2018-க்கான முழுமையான தேசிய ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பானது 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் நாட்பட்ட அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டிருப்பதாகவும் 15-49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ரத்த சோகை இருக்கிறது என்றும் தெரிவித்தது.
- ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் போன்ற முன்னெடுப்புகள் 6 வயதுக்கும் கீழே இருக்கும் 10 கோடிக் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி சமைத்த உணவைத் தருகின்றன; மதிய உணவுத் திட்டமும் இருக்கிறது.
- ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளை சரிசெய்வதற்கு அரசு ஆற்றும் பணிகளுக்கு இவை மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
- பருவநிலை மாற்றமானது வேளாண்-உயிர்ப் பன்மைக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருந்துவருகிறது, இது உற்பத்தியில் ஆரம்பித்து வாழ்வாதாரம் வரை எல்லாவற்றுக்கும் பாதிப்பு ஏற்படுத்திவிடும்.
- இந்தியா புதுமையான வகையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது – எடுத்துக்காட்டாக வறட்சியையும் வெள்ளத்தையும் தாக்குப்பிடிக்கக் கூடிய பலவிதமான விதைகள், வானிலை சார்ந்த வேளாண் அறிவிப்புகள், சிறுதானியங்களைப் பயன்படுத்தும்படி செய்யும் பிரச்சாரம், சிறு அளவிலான பாசனம் போன்ற மேம்பாடுகள்.
- எனினும், இந்த ஆண்டு, பருவநிலை சார்ந்த அதிர்ச்சிகள், வெட்டுக்கிளிகளின் தாக்குதல், வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர்கொள்வதை எப்படி விவசாயிகளுக்குச் சவால் மிக்கதாக ஆக்கியிருக்கின்றன என்பதைக் கண்டோம்.
- அளவுக்கு அதிகமாக வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தீவிர உணவு உற்பத்தி முறைமைகளும், வளங்களைப் புதுப்பிக்க முடியாத வகையில் மேற்கொள்ளும் விவசாய நடைமுறைகளும் மண் வளம் குன்றுவதற்கும், நிலத்தடி நீர் வேகமாகக் குறைவதற்கும் வேளாண்-உயிர்ப் பன்மை வெகுவிரைவில் அழிவதற்கும் காரணமாகின்றன.
- இவையனைத்தும் மறுக்க முடியாத இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகின்றன: உணவை நாம் உற்பத்தி செய்யும் விதமானது வேளாண்சூழலியல் மூலமாகவும், வேளாண் துறையிலும் அது தொடர்பான துறைகளிலும் வளம்குன்றாத உற்பத்தி மேற்கொள்வதன் மூலமாகவும் மாற வேண்டும்; இரண்டாவதாக, எதையும் நாம் வீணடிக்கக் கூடாது – நாம் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.
- இதனால்தான் ஐநாவும், எங்கள் அமைப்புகளான எஃப்.ஏ.ஓ (உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு), ஐ.எஃப்.ஏ.டி. (வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம்), டபிள்யு.எஃப்.பி. (உலக உணவுத் திட்டம்) ஆகியவையும் அரசுடனும் குடிமைச் சமூகத்துடனும் வேளாண் அமைப்புகளுடனும் தனியார் துறையுடனும் சேர்ந்து இயங்கி வளம்குன்றா உணவுக் கட்டமைப்பை உருவாக்கப் பாடுபட முனைந்திருக்கிறோம்.
இந்தியாவுக்கு ஆதரவளித்தல்
- கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தின்போது எஃப்.ஏ.ஓ., ஐ.எஃப்.ஏ.டி., டபிள்யு.எஃப்.பி. ஆகிய மூன்று அமைப்புகளும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன; உணவு விநியோகச் சங்கிலி, வேண்டிய ஆள்படை நிர்வாகம் போன்ற வகைகளில் ஒத்துழைப்புக் கொடுத்தன; உணவு, மருந்துகள் போன்றவை கிடைக்கும்படி செய்தது இவற்றின் முக்கியப் பணியாகும்.
- இந்த முகமைகள் கள நிலவரம் என்ன என்பதைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தந்தன. இது முட்டுக்கட்டைகளைத் தவிர்க்கவும் ஆபத்தான பிரச்சினைகளை எதிர்கொண்டு முன்னேறவும் உதவியது.
- ஒரு உணவுக் கட்டமைப்பு என்பது என்ன? மக்களுக்கு உணவு தரும், ஊட்டம் தரும் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கும் சட்டகம்தான் அது: சாகுபடி செய்தல், அறுவடை செய்தல், உணவு தானியங்களைப் பதப்படுத்தி மூட்டைகளாகக் கட்டுதல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புதல், சந்தைப்படுத்தல், உணவை நுகர்தல் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது அது.
- வளம்குன்றாமல் இருக்க வேண்டுமென்றால், ஒரு உணவுக் கட்டமைப்பானது எல்லோருக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்துள்ள உணவைத் தர வேண்டும்.
- நாடுகள் பலவும் கரோனா பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை மேம்படுத்தவும் செயல்படுத்தவும் தொடங்கியிருக்கின்றன.
- இந்த சூழ்நிலையில் அறிவியல் அடிப்படையிலான புதுமையான தீர்வுகளை மேற்கொள்வதன் மூலம் மீள்தன்மை கொண்ட, வளம்குன்றாத உணவுக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இது ஒரு வாய்ப்பும் கூட.
- மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனோ ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து மீளவும், உணவுக் கட்டமைப்புகளை மீள்தன்மை கொண்டதாகவும் பெரியதாகவும் ஆக்கவும் உலக அளவில் அனைவரும் உதவ வேண்டுமென்று இந்த ஆண்டு உலக உணவு தினத்தின் அன்று நாங்கள் அழைப்பு விடுத்தோம்.
- அரசுகள், தனியார் துறை, குடிமைச் சமூகம், உள்ளூர்ச் சமூகங்கள் என்று அனைவரும் இதில் பங்காற்ற முடியும். அப்படிப் பங்காற்றுவதன் மூலம் நம் உணவுக் கட்டமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தலாம்; ஆகவே, தொடர்ச்சியான நிலையற்ற தன்மையிலும் பருவநிலை அதிர்ச்சிகளிலும் அவை தாக்குப்பிடித்து நிற்கும்; எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடிய, குன்றாத ஆரோக்கியமான உணவைத் தர முடியும்; உணவு விநியோகச் சங்கிலியாக இருக்கும் தொழிலாளர்களுக்கு நல்லதொரு வாழ்வாதாரத்தைத் தரமுடியும்.
- இதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
நன்றி: தி இந்து (22-10-2020)