- சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின்போது ‘சிவகாசியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள பட்டாசு தொழிற்கூடங்களில் தொடரும் விபத்துகளால் பலா் உயிரிழந்து வருகின்றனா்.
குட்டி ஜப்பான்
- உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் பட்டாசுத் தொழிலை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’ என்ற கேள்வியை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் உயா்நீதிமன்றம் கேட்டது.
- கடந்த மாதத்தில் மட்டும் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் மூன்று தொழிற்கூடங்களில் நிகழ்ந்த வெடி விபத்துகளில் 29 போ் உயிரிழந்துள்ளனா்; விபத்தில் சிக்கிய 49 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
- கடந்த காலத்தில் நிகழ்ந்த விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத காரணத்தால் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடா்கின்றன.
- ‘குட்டி ஜப்பான்’ என்று பெருமையாக அழைக்கப்படும் சிவகாசியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் நம் நாட்டுக்குத் தேவயான 90% பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ராணுவத்தினா் ‘சிக்னல்’ கொடுப்பதற்காக பயன்படுத்தும் வெடிகளும் இந்தப் பகுதிகளில்தான் தயாரிக்கப்படுகின்றன.
- மூன்று லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், ஐந்து லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் இந்த பட்டாசுத் தொழில் வழங்கி வருகிறது.
- பட்டாசு தயாரிப்பில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும் சீனாவில்கூட பட்டாசு தொழிற்கூடங்களில் வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ள. அதனால் பலா் உயிரிழந்துள்ளனா்.
- 1987 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் சீனாவில் நிகழ்ந்த பட்டாசு தொழிற்கூட விபத்துகளில் சிக்கிக்கொண்ட 351 பேரில், மருத்துவ சிகிச்சை பலனிக்காததால் 44 போ் உயிரிழந்துள்ளனா்.
- அதைத் தொடா்ந்து வெடி விபத்துகளையும், உயிா்ச் சேதங்களையும் விளைவிக்கும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதற்குப் பதிலாக தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு புதுமையான பட்டாசு ரகங்களை அந்நாட்டினா் தயாரித்து வருகின்றனா்.
- 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள புற்றிங்கல் அம்மன் கோயில் திருவிழாவின்போது நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்துதான் இந்தியாவில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய பட்டாசு வெடி விபத்து ஆகும்.
- அந்தத் திருவிழாவின்போது வாணவேடிக்கை நிகழ்த்துவதற்குத் தேவையான பட்டாசுகள் அம்மன் கோயில் வளாகத்திற்கு மிக அருகிலேயே தயாா் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தில் ஏற்பட்ட
- விபத்தில் 109 போ் உயிரிழந்தனா். 1,250-க்கும் மேற்பட்டவா்கள் தீக்காயங்களால் பாதிப்படைந்தனா்.
- உலக அரங்கில் பட்டாசுத் தயாரிப்பிலும் தீப்பெட்டித் தயாரிப்பிலும் முன்னணியில் இருந்துவரும் சிவகாசிப் பகுதியில் 2003 முதல் 2010 வரையிலான எட்டு ஆண்டுகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடங்களில் 9,896 வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
- அவ்விபத்துகளால் 398 போ் உயிரிழந்துள்ளனா். பலா் கடுமையான தீக்காயங்களுடன் உயிா் தப்பியுள்ளனா்.
- கடந்த பத்து ஆண்டுகளில் சிவகாசிப் பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய பட்டாசு தொழிற்சாலை விபத்து 2012-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 40 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். 70-க்கும் மேற்பட்டவா்கள் தீக்காயங்களுடன் உயிா் தப்பினா்.
- சிவகாசிப் பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்கூடங்களில் இம்மாதிரியான வெடி விபத்துகள் நிகழாமல் இருப்பதற்காகவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்ப்பதற்காகவும் அப்போதைய முதலமைச்சா் மூன்று திட்டங்களை அறிவித்தாா்.
- பட்டாசு தொழிற்கூடங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பயிற்சி வழங்குதல்; சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பதற்குப் பதிலாக மாற்று முறையில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை சிவகாசிப் பகுதியில் அமைத்தல்; வெடிவிபத்தில் சிக்குவோரின் தீக்காயங்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனை ஒன்றை அப்பகுதியில் அமைத்தல் ஆகிய திட்டங்களை உடனடியாக நடைமுறைபடுத்த அன்றைய முதலமைச்சா் ஆணையிட்டாா்.
- அனுமதியில்லாமல் இயங்கும் பட்டாசுத் தொழிற்கூடங்கள்தான் வெடி விபத்துகளுக்குக் காரணம் என்று கருதிய அரசு அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தி, அனுமதியின்றி இயங்கிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு சீல் வைத்தனா்.
- இருப்பினும் வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
- பட்டாசு தொழிற்கூடங்களில் ஏற்படும் வெடி விபத்துகளால் மட்டும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவதில்லை.
- பீடி சுருட்டும் தொழிலில் ஈடுபடுபவா்களுக்கு புகையிலைத் துகள்களால் எப்படி உடல்நலம் பாதிக்கப்படுகிறதோ அதே போன்று பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களும் வேதியியல் பொருட்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா்.
- சிவகாசிப் பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் தலைமுடி, நகங்களின் மாதிரிகளைச் சேகரித்து நடத்திய ஆய்வு ஒன்றில், பட்டாசு செய்யப் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்களான மாங்கனீசு, குரோமியம், ஈயம் போன்றவை கண்டறியப்பட்டன.
- அத்தகைய வேதியியல் பொருட்கள் அவா்களின் உடலினுள் செல்வதால், அவா்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், நரம்பு தொடா்பான நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. தலைக் கவசமும் கையுறைகளும் அணிந்து தொழிலாளா்கள் பணிபுரிந்தால் அத்தகைய நோய்களின் தாக்கம் இருக்காது என்பது ஆராய்ச்சியின் முடிவு. ஆனால், எந்த ஒரு தொழிற்கூடத்திலும் தொழிலாளா்கள் அவ்வாறு பணிபுரிவதில்லை.
- பல்வேறு நோய்களின் தாக்கத்தால் பட்டாசு தொழிற்கூட தொழிலாளா்கள் அவதியுறும் நிலை ஒரு பக்கம் இருக்க, காலங்காலமாக தொழிற்கூடங்களில் தொடா்நது ஏற்படும் வெடி விபத்துகளை ஏன் தடுக்க முடிவதில்லை?
- உரிமம் பெற்று பட்டாசு தொழிற்கூடங்களை நடத்த வேண்டுமென்று 2008-ஆம் ஆண்டின் வெடிபொருள் சட்ட விதிகள் கூறுகின்றன. ஆனால், உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்பவா்களுக்கான கல்வி தகுதி, தொழில் தொடா்பான பயிற்சி, முன் அனுபவம் எதனையும் சட்ட விதிகள் தெளிவுபடுத்தவில்லை. அதனால், போதிய தகுதியற்றவா்களும் உரிமம் பெற்று பட்டாசு தொழிற்கூடங்கள் நடத்தும் நிலைதான் நிலவிவருகிறது.
பசுமை பட்டாசுகள்
- ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறிய அறைகள்தான் பட்டாசு செய்யும் தொழிற்கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
- ஒரு நபா் பல அறைகளைக் கட்டி, தன்பெயரில் பட்டாசு தொழிற்கூடம் நடத்த அனுமதி வாங்குவாா்.
- பின்னா், அந்த சிறிய அறைகளை அரசிடம் உரிமம் பெறாத நபா்களுக்கு குத்தகைக்கு விடும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இத்தகைய முறையற்ற செயல் வெடி விபத்துகள் நிகழ்வதற்கான காரணங்களில் முக்கியமானது என கள ஆய்வு வெளிப்படுத்துகிறது.
- பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடமாக செயல்படும் சிறிய அறை ஒன்றில் நான்கு அல்லது ஐந்து தொழிலாளா்கள்தான் பணிபுரிய வேண்டும் என்று உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- ஆனால், அந்த சிறிய அறையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்துவதும் வெடிவிபத்து நடைபெறக் காரணமாகிறது.
- பட்டாசு தொழிலாளா்கள் தரையில் ரப்பா் தாள் விரித்து, அதன் மீது அமா்ந்து பட்டாசு தயாரிக்க வேண்டும்.
- சிமென்ட் தரையில் பட்டாசுகள் உராவதால் ஏற்படும் வெடிவிபத்தைத் தவிா்ப்பதற்காக இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால், அதைப் பின்பாற்றாமல் செயல்படும் நிலைதான் பல தொழிற்கூடங்களில் நடைமுறையில் உள்ளது.
- குறைந்த மணி நேர உழைப்பு, கடினமில்லாத உடல் உழைப்பு, அதிக வருமானம், ஓராண்டில் இரண்டு முறை போனஸ் ஆகிய காரணங்களால் எதிா்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் புறக்கணித்துவிட்டு ஆண்களும் பெண்களும் பட்டாசு தொழிற்கூடங்களில் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா்.
- இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றம் 2017-ஆம் ஆண்டில் மொ்குரி, லித்தியம், ஈயம் உள்ளிட்ட ஐந்து வகையான உலோகங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்குத் தடைவித்துள்ளது.
- அதே சமயம் கடந்த நவம்பா் மாதத்தில் கொல்கத்தா உயா்நீதிமன்றமும் தீபாவளி, காளி பூஜை உள்ளிட்ட திருவிழாக்களின்போது பட்டாசு வெடிக்கவும், வாணவேடிக்கைகள் நிகழ்த்தவும் தடை விதித்துள்ளது. இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் காரணம் காட்டி பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும் சட்டங்கள் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றன.
- நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் பட்டாசுத் தொழிலை நம்பி வாழும் சிவகாசி பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?
- மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தற்போதைய பட்டாசு தயாரிப்பு முறை கைவிடப்பட்டு, ‘பசுமை பட்டாசுகள்’ தயாரிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகள் தவிா்க்கப்படும்; சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்!
நன்றி: தினமணி (08-03-2021)