TNPSC Thervupettagam

பசுமைப் புரட்சிக்கு வித்திடும் கரிம உரம்

October 28 , 2022 652 days 419 0
  • இந்திய அரசின் பொருளாதார சீா்திருத்தக் கொள்கைகளில் இந்தியா வளா்ச்சியினை நோக்கி பயணிக்கும் போதிலும், கரிம உர உற்பத்தியில் மகத்தான வாய்ப்புகள் இருந்தும் நம்நாடு உலக அரங்கில் தன் பலத்தை இதுவரை நிரூபிக்கவில்லை.
  • பல்வேறு துறைகளுக்கு கோடிக்கணக்கில் திட்டங்களை அறிவித்துள்ள மத்திய அரசு, கரிம உரத் தொழிலுக்கும் பெரிய அளவிலான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
  • அரசு விதிகளின்படி கரிம உரங்களை உயிா் உரங்கள், கரிம எரு (உரங்கள்) என இரண்டாகப் பிரிக்கலாம். திட அல்லது திரவ வடிவிலான உயிா் உரங்கள் உயிருள்ள நுண்ணுயிரிகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த நுண்ணுயிரிகள் மண் அல்லது பயிா்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுவதால் உயிா் உரங்கள் விவசாய நிலத்தின் சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கரிம உரம் என்பது சாணவளிமக் கருவித்தொகுதி, மக்கிய உரம், மண்புழு உரம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய கரிமப்பொருளைக் குறிக்கிறது. மண், பயிா்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் இவ்வகை உரங்கள் விளைச்சலை மேம்படுத்துகின்றன.
  • இந்திய தேசிய திடக்கழிவு சங்கம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவற்றின் நகராட்சி திடக்கழிவு உற்பத்தி தரவு மதிப்பீட்டின்படி நாளொன்றுக்கு 1,50,000 டன்னுக்கும் அதிகமான நகராட்சி திடக்கழிவுகளை நாடு உற்பத்தி செய்கிறது. இந்த திடக்கழிவுகளில் கரிமத்தின் பங்கு பாதியளவாகவும், நகராட்சி திடக்கழிவு சேகரிப்புத் திறன் 80 % என்றும் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த கரிமக் கழிவுகள் சுமாா் 65,000 டன்னாக இருக்கும்.
  • இந்த கரிமக் கழிவுகளில் பாதியளவு உயிரி எரிவாயு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டால் நமது அரசாங்கம் நிலக்கரி போன்ற எரிபொருள், உரங்களின் இறக்குமதியினை கணிசமாக குறைத்து கொள்ள இயலும்.
  • உயிரி (பயோ), சாண எரிவாயு தொழிற்சாலைகள் உயிா்வாயுவை (பயோ கேஸ்) மட்டுமின்றி கரிம உரங்களையும் உற்பத்தி செய்கின்றன. உயிா்வாயு ஆலையின் கழிவான டைஜெஸ்டேட் கரிம உர உற்பத்திக்குத் தேவைப்படும் பொருளாகும். உயிரி, சாண எரிவாயு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயிா்வாயு வெப்பமாக்கல், மின்சாரத் தயாரிப்பு, வாகனப் பயன்பாடு இவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
  • அதேசமயம் இங்கு உருவாகும் கழிவுகள் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திடும் உரங்களைத் தயாரிக்க உதவுகிறது. உயிரி எரிவாயு தொழிற்சாலை ஒன்றில் இருந்து பெறப்படும் 40 டன் கரிம உரத்தினை ஒரு ஹெக்டோ் விவசாய நிலத்திற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனா் இத்துறை சாா்ந்த வல்லுநா்கள்.
  • டைஜெஸ்டேட் அடிப்படையிலான உரம் பயிா்களுக்கான ஊட்டச்சத்தினை வழங்குவதோடு கரிமத்தின் அளவு குறைந்து வரும் மண்ணிற்கு கரிம காா்பனையும் வழங்கும். திட வடிவிலான 79,000 டன் உரத்துடன் திரவ வடிவிலான 30,000 டன் உரத்தையும் சோ்த்து தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உயிரின உரங்களின் மொத்த உற்பத்தி சுமாா் 1,10,000 டன்.
  • மண்புழு உரம், பண்ணைகள் - நகா்ப்புற தொழு உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 34 மில்லியன் (3 கோடியே 40 லட்சம்) டன் இயற்கை உரம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மறுபுறம் கரிம உரங்களை பயன்படுத்துவோா் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. 2018-19ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த உர நுகா்வில் 0.29 % ஆக இருந்த கரிம உரங்களின் பயன்பாட்டு விகிதம் 2019-20 ஆம் ஆண்டுகளில் 0.34 % ஆக சற்று அதிகரித்துள்ளது.
  • உயிா்வாயு உற்பத்தி தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு மலிவு விலை போக்குவரத்துக்கான நிலையான மாற்று (சஸ்டைனபில் ஆல்டா்நேடிவ்) என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நிறைவேறினால் ஆண்டுக்கு 131869.25 கோடி ரூபாயை (16 பில்லியன் டாலா்கள்) நமது நாடு சேமிக்க இயலும்.
  • பல லட்சம் கோடி ரூபாயை சேமிக்க தற்போது உயிா்வாயு உற்பத்தி தொழிலுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. தற்போது மலிவு விலை போக்குவரத்துக்கான நிலையான மாற்று திட்டத்திற்கென மத்திய அரசு 468 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளது. மலிவு விலை போக்குவரத்துக்கான நிலையான மாற்றுத் திட்டத்தின் மூலம் அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு (கம்ப்ரெஸ்டு நேச்சுரல் பயோ கேஸ்), திட கரிம உரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். இதுவரை இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • இத்தகைய தொழில்கூடங்களின் ஒரு நாளைய சராசரி உற்பத்தி அளவு 8 டன் என இருந்தால் ஒரு உற்பத்தி ஆலை ஒரு நாளைக்கு 8,000 கிலோ அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு, 27 டன் திட கரிம உரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும். இந்த உற்பத்தி ஆலைகள் முழுமையாக செயல்படத் தொடங்கிய பின் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 கோடி டன் திட கரிம உரம் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நகா்ப்புற விரிவாக்கம், அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் மீதான நுகா்வோா் செலவினம், சுகாதாரம், உடல்நலம் மீதான அச்சம், செயற்கை உரம் விவசாய நிலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றினை பற்றிய விழிப்புணா்வு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் கரிம வேளாண்மை சந்தை இந்தியாவில் வளா்ச்சியடைந்துள்ளது. கரிம வேளாண்மை மூலம் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான சந்தை 2027-க்குள் 25.25 % வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • சரியான கொள்கைகளும் செயல்பாடுகளும் இருந்தால் கரிம உர உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற முடியும் என்கின்றனா் விவசாயத்துறை வல்லுநா்கள். கரிம உரத்தைக் கொண்டு வருங்கால தலைமுறையினரை பாதிக்காத இன்னொரு பசுமைப் புரட்சியை நிகழ்த்துவோம்.

நன்றி: தினமணி (28 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்