TNPSC Thervupettagam

பசுமைப் புரட்சியின் முகம்

September 30 , 2023 294 days 226 0
  • எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு இந்திய வேளாண் அறிவியல் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. ஆனால், அவர் விட்டுச் சென்றுள்ள ஆராய்ச்சி – வளர்ச்சி மரபு எதிர்கால அறிவியலாளர்களுக்கு மாபெரும் ஊக்க சக்தியாகத் தொடரும்.

போர்லாக்கின் மாண்பு

  • நார்மன் போர்லாகுக்கு நோபல் அமைதி விருது 1970இல் வழங்கப்பட்டபோது, வழக்கத்துக்கு மாறான வகையில், அந்த விருதுக்கான பெருமையை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அவர் அளித்த மாண்பு இன்றும் நினைவுகூரத்தக்கது: “மெக்ஸிகோ நாட்டின் குட்டை ரக கோதுமைப் பயிர்கள் மதிப்பு மிக்கவை என்று நீங்கள்தான் முதலில் அங்கீகரித்தீர்கள்; இது மட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் ஆசியாவில் பசுமைப் புரட்சியே ஏற்பட்டிருக்காது.”
  • நார்மன் போர்லாக் 2009இல் மறைந்தபோது அவருக்குப் புகழஞ்சலி செலுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் குறிப்பிட்டார், “மிகப் பெரிய அறிவியலாளர் – மனிதாபிமானி!”
  • சுவாமிநாதனுக்கு இரங்கல் தெரிவிக்கும் கட்டுரையை எழுத அமர்ந்த எனக்கு, சுவாமிநாதனைப் பற்றிக் குறிப்பிடவும் இதைவிடச் சிறந்த வார்த்தைகள் தோன்றவில்லை. வளரும் நாட்டின் முதன்மையான புகழ் வாய்ந்த வேளாண் விஞ்ஞானி, ஆழ்ந்த மனிதாபிமானி, மதச்சார்பின்மையின் விழுமியங்களில் ஆழ்ந்த பற்றுகொண்ட குடிமகன்.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 1952இல் இந்தியா திரும்பிய சுவாமிநாதன், ‘தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு (என்ஏஆர்எஸ்)’ என்ற ஆய்வகத்தில் சேர்ந்தார். ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே வந்த இந்திய மக்கள்தொகைக்கு ஏற்பவும், ஐந்தாண்டு திட்டங்கள் வெற்றி பெறவும் உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியமான கடமையாகிவிட்டது. 1949-50இல் இந்தியாவின் தேவையைப் பூர்த்திசெய்ய, 30 லட்சம் டன் உணவு தானியத்தை (நடப்பு விலையில் மதிப்பு ரூ.150 கோடி) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தனர். இந்தப் பின்னணியில்தான் உணவு தானிய உற்பத்தியை இந்தியாவில் உடனடியாக அதிகரிக்க வேண்டியது முக்கியம் என்று அனைவராலும் உணரப்பட்டது.

சுவாமிநாதனின் உருவாக்கம்

  • புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐஏஆர்ஐ) 1954இல் அவர் பணிக்குச் சேர்ந்தபோது அதிக விளைச்சல் தரும் ரகங்கள் என்று கூற முடியாவிட்டாலும், குட்டை ரகமாகவும் உரங்களிட்டால் நன்றாக வளரும் தன்மையுடனும் உள்ள நெல், கோதுமைப் பயிர்களை வளர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
  • ஜப்பானை தாயகமாகக் கொண்ட ‘நோரின்-10’ என்ற கோதுமை ரகத்தை, போர்லாக்கின் ஆலோசனையின்பேரில் தருவித்து அதை இந்திய கோதுமை ரகங்களுடன் கலப்பினமாக வளர்த்து பசுமைப் புரட்சியின் தொடக்க கட்டத்தில் விவசாயிகளுக்கு அளித்தார். கல்யாண் சோனா, சோனாலிகா, சஃபேட் லெர்மா, சோட்டி லெர்மா என்பவை அதன் பெயர்கள். அவை ஒரு ஹெக்டேருக்கு 6 முதல் 8 டன்கள் வரையில் மகசூல் தந்தன.
  • நெல் ரகத்தில் சீனத்தின் குட்டை ரகமான ‘டீ-ஜியோ-ஊ-ஜென்’ என்பதை மணிலாவின் ‘சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழக’த்திலிருந்து பெற்று, இந்தியாவில் உயர் நெல் ரகமான ‘இன்டிகா’ வகையினங்களுடன் கலப்பினத்தை வளர்த்தனர். குட்டையான தண்டுடன் கூடிய ஜெயா, பத்மா, ஹம்சா, கிருஷ்ணா, காவேரி, பாலா, ரத்னா, விஜயா, கோ-34, ஜமுனா, சாபர்மதி, பங்கஜ், ஜகந்நாத் என்று பல ரகங்களை உருவாக்கினார். இவற்றில் சில ஹெக்டேருக்கு 8 டன்கள் அளவுக்குக்கூட மகசூல் தந்தன.
  • பிறகு இ.ஏ.சித்திக், வி.பி.சிங் போன்ற தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து, பாஸ்மதி அரிசி ரகங்களில் மிகவும் புகழ்பெற்ற பல கலப்பினங்களை உருவாக்கினார். அது 1989இல் பூசா பாஸ்மதி ரகம் வரை நீண்டது. அதிக விளைச்சல் தந்த பூசா பாஸ்மதி ரகம் உலகிலேயே முதலாவது அரை – குட்டை ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமைப் புரட்சியின் வெற்றி

  • நெல், கோதுமை ஆராய்ச்சியில் இந்தியா மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் அதன் காரணமாக ஏற்பட்ட உயர் விளைச்சலும் இந்திய வேளாண்மையை வெகுவாக மாற்றத்துக்குள்ளாக்கியது. இந்தப் பசுமைப் புரட்சியிலேயே முக்கியமான அம்சம் எதுவென்றால், புதிதாக விளைநிலங்கள் எதையும் சாகுபடிக்குக் கொண்டுவராமலேயே உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கியதுதான்.
  • அது மட்டுமல்ல, நபர்வாரியாக அதுவரை கிடைத்துவந்த அரிசி, கோதுமை அளவையும் குறைக்காமல் பராமரிக்க முடிந்தது. ‘ஆலிஸ் இன் த வொன்டர் லேண்ட்’ என்ற கதையில் செந்நிற ராணி ஆலிஸிடம் கூறுவார், “நீ ஓடிக்கொண்டே இருந்தால், இப்போது இருக்கும் இடத்திலேயே இருப்பாய்; வேறெங்காவது போக நினைத்தால் இப்போதைப் போல இரண்டு மடங்கு வேகத்தில் ஓட வேண்டும்!” பசுமைப் புரட்சியின்போது தங்களுக்கிருந்த சவால் எப்படிப்பட்டது என்பதை விளக்க இந்தக் கதையை உவமையாகக் கூறுவார் சுவாமிநாதன்.
  • பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றி எதுவென்றால், உணவு தானிய இறக்குமதிக்கு அவசியமில்லாமல் தன்னிறைவு காணச் செய்தது மட்டுமல்ல; மேற்குலக நாடுகளின் வல்லாதிக்கம் குறுக்கிடாதபடிக்கு அரசியல் இறையாண்மையைக் காப்பாற்றியதுமாகும். தங்களுடைய விருப்பப்படி வெளிநாட்டுக் கொள்கையையோ, பொருளாதார சீர்திருத்தங்களையோ செய்யாவிட்டால் அரிசி, கோதுமையை விற்காமல் தடுப்போம் என்று மேற்கத்திய நாடுகளால் இந்தியாவை மிரட்ட முடியாமல் போய்விட்டது.
  • “பசுமைப் புரட்சிக்கு முன்னதாகவோ, அல்லது பசுமைப் புரட்சியுடனேயோ நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதன் விளைவு அபாரமானதாக இருந்திருக்கும், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதும் எளிதாக இருந்திருக்கும்” என்று இடதுசாரிகள் கூறியபோது, அது சரியென்றே ஏற்றார் சுவாமிநாதன். “இந்திய வேளாண்மை சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, முழுதாக முடிக்கப்படாத நிலச் சீர்திருத்தம்” என்று அவரே கூறுவார்.
  • உணவு தானிய விளைச்சலில் தன்னிறைவு கண்டும், மக்களில் கணிசமானவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் நோய்வாய்ப்படுகின்றனர், அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் மூலம் அனைத்தும் கிடைக்கவில்லையே என்று அடிக்கடி வருந்துவார். வருமான அடிப்படையெல்லாம் இல்லாமல் அனைவருக்கும் உணவு தானியங்கள் பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும், உணவு பெறும் உரிமை அனைத்து மக்களுக்கும் சட்டப்பூர்வமாகவே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சுவாமிநாதன் மீதான பழி

  • ஐஆர்ஆர்ஐ அமைப்பின் இயக்குநராக 1982இல் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். உலகிலிருந்த 1,50,000 வகை நெல் நாற்றுகளிலிருந்து 1,32,000 ரகங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு அதன் அரிசி கேந்திரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டன. தங்கள் நாட்டு அரிசி ரகத்தை சுவாமிநாதன் திருடிவிட்டார் என்றுகூட சிலர் அபாண்டமாக பழி சுமத்தினார்கள். “எந்த ஒரு ரகத்தை நாம் பயிரிடாமல் காலப்போக்கில் அழியவிட்டுவிட்டாலும் அது எதிர்காலத்தில் மனித குலத்தைத்தான் பாதிக்கும்; எந்தப் பயிர் ரகத்தையும் நாங்கள் திருடவில்லை, எல்லா நாடுகளின் அரிசி ரகங்களையும் நகலெடுத்துத்தான் பாதுகாத்து வைத்திருக்கிறோம்” என்று விளக்கம் அளித்தார் அவர்.
  • கம்போடியா நாட்டில் தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த போரினால், நெல் ரகங்கள் சிலவற்றை இழந்த அந்நாட்டு விவசாயிகள் பிறகு ஐஆர்ஆர்ஐ சேமித்து வைத்திருந்த ரகங்களிலிருந்து விதைகளைப் பெற்று, தங்களுடைய பாரம்பரிய நெல் சாகுபடியைத் தொடர்ந்தனர். சுவாமிநாதன் மட்டும் அந்த ரகங்களைப் பெற்று சேமித்து வைத்திருக்காவிட்டால் அவர்களால் பாரம்பரியமான நெல் ரகத்தை மீட்டிருக்கவே முடியாது.
  • பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை (எம்எஸ்எஸ்ஆர்எஃப்) நிறுவினார். அந்த அமைப்பு அடிப்படையான வேளாண் அறிவியலில் மட்டும் அல்லாமல் உயிரி பன்மைத்துவம், ஊட்டச்சத்து, பாலினம், பருவநிலை மாறுதலால் ஏற்படும் நெருக்கடி ஆகியவை தொடர்பாகவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது.
  • இதில் 2004 முதல் 2006 வரையில் ‘விவசாயிகளுக்கான தேசிய ஆணையம்’ (என்சிஎஃப்) தலைவராகப் பதவி வகித்தார் சுவாமிநாதன். அவர் அளித்த ஐந்து அறிக்கைகள் இந்திய வேளாண்மை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் துல்லியமாகக் கொண்டிருந்தன.
  • வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலை (கொள்முதல் விலை) நிர்ணயிக்கும்போது உற்பத்திச் செலவுடன் 15% சேர்ப்பதே அதுவரை வழக்கமாக இருந்தது; அதை 50%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ‘சுவாமிநாதன் ஃபார்முலா’ என்று கூறப்படும் இதைத்தான் சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய விவசாயிகள் இப்போது எல்லாக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

உழவர்களின் தோழர்

  • சுவாமிநாதன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளராக மட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் தோழராகவும் திகழ்ந்தார். அவர்களுடைய இயக்கங்களை ஆதரித்தார். ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-21இல் விவசாயிகள் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியபோது அதை ஆதரித்தது மட்டும் அல்லாமல், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்தபோது மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
  • இந்திய வேளாண் அறிவியல் உலகு மாபெரும் வழிகாட்டியை, ஒளி விளக்கை இழந்துவிட்டது. அதேசமயம் அவர் உருவாக்கி வைத்த ஆராய்ச்சி மரபும் நாட்டின் சாமான்ய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர் எடுத்த முன்னெடுப்புகளும் இதர வேளாண் விஞ்ஞானிகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் தங்களுடைய வாழ்வில் அடைய வேண்டிய இலக்கு எது அதற்கான பாதை எது என்பதை அடையாளம் காட்டும் என்று நம்புவோம். அது மட்டுமே நாம் அவருக்குச் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்