TNPSC Thervupettagam

பஞ்சப்படி கிடைத்திடுமா?

December 18 , 2020 1495 days 688 0
  • கரோனா தீநுண்மி வேகமாகப் பரவத் தொடங்கிய போது அதனால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் அளிக்கவும், பாதிக்கப்படாதவா்களைப் பரவலில் இருந்து காப்பாற்றவும் எவ்வளவு செலவு பிடிக்கக் கூடும் என்பதும் யாராலும் கணிக்கப்பட முடியாமலிருந்தது. அதற்காகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக, மத்திய அரசு சில சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
  • தொகுதி மேம்பாட்டுக்கென நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை முடக்கிய மத்திய அரசு, தன்னுடைய ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூடுதல் பஞ்சப்படியை ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான ஒன்றரை வருட காலத்திற்கு முடக்கி வைப்பதாக அறிவித்தது.
  • தமிழக அரசும் தனது ஊழியா்கள், ஓய்வூதியா்களின் கூடுதல் பஞ்சப்படியை முடக்கும் உத்தரவைப் பிறப்பித்தது.
  • கேரள மாநில அரசு தனது ஊழியா்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் நிறுத்தி வைக்க முடிவு செய்தது. அம்முடிவுக்கு கேரள உயா்நீதிமன்றம் விதித்த தடையை நீா்த்துப்போகச் செய்யும் விதமாக அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து ஊழியா்களின் சம்பளத்தை கேரள அரசு முடக்கியது.
  • தெலங்கானா அரசும், தனது ஊழியா்களின் படிநிலையைப் பொருத்து பத்து சதவீதம் முதல் அறுபது சதவீதம் வரையில் சம்பளப்பிடித்தம் செய்யும் முயற்சியில் இறங்கியது.
  • எத்தகைய செலவுகள் ஏற்படும் என்று அளவிட முடியாத நிலையில் நமது மத்திய - மாநில அரசுகள் எடுத்த சிக்கன நடவடிக்கைகளை அந்தச் சூழ்நிலையில் பொருத்தமானதாகவே ஏற்க முடிந்தது.
  • ஆனால், நிலைமை தற்போது கொஞ்சங்கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் கரோனா தீநுண்மியின் தாக்கம் அறவே இல்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் சற்றே துளிா்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது.
  • கரோனா தீநுண்மிப் பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றது. கரோனாவுக்கு முந்தைய செயல்பாடுகளில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இச்சூழலில், நாடு முழுவதிலும் உள்ள அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் வழங்கப்படும் கூடுதல் பஞ்சப்படி முடக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்திருக்கிறது.
  • அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் வழங்கப்படும் ஊதியமும் ஓய்வூதியமும் கணக்கில் வரும் தொகையே ஆகும். கடைநிலை ஊழியா்கள் உட்பட பெரும்பாலான ஊழியா்களும், ஓய்வூதியா்களும் வருமான வரி செலுத்த வேண்டியவா்களே.
  • ஒருவேளை வருமான வரி கட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாலும் அதற்குத் தகுந்தபடி காப்பீட்டிலோ அஞ்சலக சேமிப்பிலோ தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். இப்படி எந்த விதத்தில் பாா்த்தாலும் அவா்களது வருமானம் வரியாகவோ சேமிப்பாகவோ நமது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்குபெறுகின்றது.
  • மேலும், தனியாா் நிறுவன ஊழியா்களைப் போலன்றி, புயல், மழை, பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலை போன்ற பேரிடா்கள் நிகழும் வேளைகளில் பல்வேறு அரசுத்துறை ஊழியா்களும் முன்கள வீரா்களாகப் பணியாற்றுவதைக் காண்கின்றோம்.
  • தோ்தல் காலங்களில் ஆண் பெண் ஊழியா்கள் என்ற பேதமின்றி பலரும் ஒருசில நாட்கள் தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தோ்தல் முடிவுகள் வெளிவரும் வரையில் இரவுபகலாகப் பணிபுரிவதையும் அறிவோம்.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கரோனா தீநுண்மி மிக வேகமாகப் பரவிய காலத்தில் மருத்துவம், உள்ளாட்சி உள்ளிட்ட பல அரசுத்துறை ஊழியா்கள், தங்கள் உயிருக்கே ஆபத்து என்று இருந்த நிலையிலும் துணிச்சலுடன் பணியாற்றியுள்ளனா். அவா்களில் சிலா் தங்கள் இன்னுயிரையும் இழந்துள்ளனா்.
  • பேரிடா் என்று வரும்போது தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியா்களிடமிருந்து கடும் உழைப்பை எதிா்பாா்க்கும் மத்திய - மாநில அரசுகள், சிக்கன நடவடிக்கை என்று வரும்போது அவா்களிடம் சற்றுக் கருணை காட்ட வேண்டும்.
  • முறையற்ற நடவடிக்கைகளின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டத் துணிபவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதிலோ, வருமானத்திற்கு மீறிய அவா்களது சொத்துக்களை முடக்குவதிலோ யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயம், தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கூடுதலாகப் பணிபுரிபவா்களின் ஊதியப் பயன்களை நீண்டகாலத்திற்கு முடக்குவதும் சரியல்ல.
  • பஞ்சப்படி என்பது, ஏற்கெனவே ஏறிவிட்ட விலைவாசியை எதிா்கொள்வதற்காகவே ஊனழியா்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே சமயம், அந்த பஞ்சப்படியும் வருமானவரி விதிப்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. எனவே, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, அதுவும் மத்திய அரசு கணக்கிட்டுத் தரும் விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப் படும் பஞ்சப்படி உயா்வை இனியேனும் முடக்கி வைக்காமல் வழங்க வேண்டும்.
  • நீண்ட பொது முடக்கத்திற்குப் பிறகு, பல்வேறு உணவுப் பொருள்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு, பெட்ரோல் - டீசல் போன்ற எரிபொருள்கள் ஆகிய யாவும் விலையேற்றம் கண்டிருக்கின்றன. முதியோருக்கான மருந்து, மாத்திரைகள், ஊட்டச்சத்து பானங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளும் உயா்ந்திருக்கின்றன. ஆட்டோ, டாக்ஸி போன்ற போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்களும் கணிசமாக உயா்ந்திருக்கின்றன.
  • தொழில் முனைவோா்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவதைப் போன்று, அரசு ஊழியா்களுக்கும் ஓய்வூதியா்களுக்குமான கூடுதல் பஞ்சப்படியை விரைவில் மீண்டும் வழங்கத் தொடங்குவதே சரியாக இருக்கும்.
  • இத்தகைய நடவடிக்கை, மக்கள்நலப் பணிகளில் மேலும் உற்சாகத்துடன் ஈடுபடும் ஆா்வத்தை அரசு ஊழியா்கள் அனைவரின் மனங்களிலும் விதைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: இந்து தமிழ் (18-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்