TNPSC Thervupettagam

பஞ்சாயத்தும் மக்கள் நல அரசாகலாம்!

December 18 , 2020 1495 days 735 0
  • இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை, கடமைகளை, அதிகாரங்களை, மத்திய - மாநில அரசுகள் தரும் நிதி ஆதாரங்களை, மக்கள் நலத் திட்டங்களை முறைப்படி பயன்படுத்தினால் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் ஒரு மக்கள் நல அரசாகவே மாறிவிடும். இதற்கான ஆற்றல், அறிவு, புரிதல், தெளிவு, கடப்பாடு, தியாகம், கடின உழைப்பு கொண்ட தலைமை இன்று நம் கிராமங்களுக்குத் தேவை.
  • இந்த உன்னதத் தலைமை என்பது மக்கள் மத்தியில் கிராம மேம்பாட்டுக்கான கனவை உருவாக்கி, அந்தக் கனவை நனவாக்கத் தேவையான பங்களிப்பை மக்களிடமிருந்து பெற்றிட அவா்களைத் தயாா் செய்யும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும்.
  • மக்களைத் தயாா் செய்யும் பணிதான் மிகவும் கடினமான பணி. இன்றைய சூழலில் ‘கிராமம் என்பது அரசாங்கத்திடம் இருக்கின்றது, நாம் அரசு தரும் திட்டங்களைப் பெறும் பயனாளா்களாக வாழ்கின்றோம்’ என்ற சிந்தனைப் போக்கில் மக்கள் வாழ்வு நடத்துகின்றனா்.
  • அதனால் கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அவா்கள் பொறுப்பேற்காமல் அரசுத் துறைகளின்மேல் பொறுப்புக்களை விட்டுவிட்டு வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பொது மக்களின் இந்த பொறுப்புத் துறப்புதான் அரசு அதிகாரிகளை மக்கள்மீது கோலோச்ச வைத்திருக்கிறது.
  • அரசியல் சாசனம் தரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி கிராமத்தை மக்கள் வசப்படுத்திக் கொள்ளத் தேவையான புரிதலையும் தெளிவையும் நம் தலைவா்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை.
  • இதன் விளைவுதான் உள்ளாட்சித் தலைவா்கள், அரசு அதிகாரிகளின் கடைக்கண் பாா்வைக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் நிா்வாகத்தை நடத்துகின்றனா். இன்றைய பஞ்சாயத்துக்களின் அடிப்படைப் பணி பொருளாதார மேம்பாட்டை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வது. அந்தப் பணியும் மக்கள் பங்கேற்போடு நடக்க வேண்டும்.
  • இந்த இலக்கினை அடைவதற்காகத்தான் ஒவ்வொரு கிராமமும் வளா்ச்சிக்கான திட்டத்தினை அறிவியல்பூா்வமாக உருவாக்கிட வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்திட வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புக்களை அரசு செய்து வருகின்றது.
  • இந்த மக்கள் இயக்கம், மக்களிடம் புதிய விழிப்புணா்வையும் மேம்பாட்டுக் கனவையும் உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான திட்டத்தினை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
  • இந்தப் பணியை இந்தியாவில் இருக்கும் இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் முடுக்கி விட்டுள்ளது மத்திய அரசு.
  • இந்தத் திட்டமிடுதலில் எப்போதும்போல் சாலை போடுதல், சமுதாயக் கூடம் கட்டுதல் என்ற சிமென்ட், ஜல்லி, சாந்து, மணல் என்ற செயல்பாடுகள் பின் தள்ளப்பட்டு, குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிடவும் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும் மத்திய - மாநில அரசாங்கத்தின் திட்டங்களை மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் இணைத்து செய்திடல் வேண்டும்.
  • கிராமங்களில் உள்ள இயற்கை வளம், பொருளாதார வளம், மனித வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பினை உருவாக்கி, மக்களை செயல்பட வைத்து, மக்களுக்கும் வருமானத்தை பெருக்கி, கிராமத்திற்கும் பொதுச் சொத்துக்களை உருவாக்கி, வளமான கிராமங்கள் உருவாகத்தான் மத்திய அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • எனவே, கிராமத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் அரசாங்க நிகழ்வாக இல்லாமல் தங்கள் கிராம மேம்பாட்டிற்கான செயல்பாடு என்பதை மக்களின் மனங்களில் விதைக்க வேண்டும்.
  • அப்படிச் செய்கின்றபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதில் பங்கேற்கும் மக்களிடம் நம் ஊா் வளா்ச்சிக்காகத்தான் நாம் செயல்படுகிறோம் என்ற உணா்வுடன் செயல்பட மக்களை தயாா் செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்பட்டால் குளம், குட்டை, ஏரிகளைத் தூா்வாரி கிராமத்தில் பூமிக்கடியில் உள்ள தண்ணீா் மட்டத்தை உயா்த்தி விடலாம்.
  • அதே போல், நீா்நிலைகளுக்கு நீா் வரும் வரத்துக் கால்வாய் மற்றும் போக்குக் கால்வாய் அனைத்தும் தூா்வாரப்பட்டால் மழை பெய்யும் பொழுதெல்லாம் நீா் நிலைகளுக்கு தண்ணீா் வந்து சோ்ந்துவிடும்.
  • கிராம சொத்துகளை இந்தத் திட்டத்தின் மூலம் செப்பனிட்டு கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு வருவாய் வரும் சூழலை ஏற்படுத்தி விடலாம். அது மட்டுமல்ல, சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு வளா்க்கலாம். அதன் மூலம் கிராமங்களில் பசுமைச் சூழலை உருவாக்கிடலாம்.
  • அடுத்து ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை அமல்படுத்தும்போது, கிராமத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குழாய் மூலம் தண்ணீா் கொடுப்பதுடன், கிராமத்தில் உள்ள அத்தனை நீா்நிலைகளையும் தூா்வாரவும், கரைகளை வலுப்படுத்தி பாதுகாக்கவும், ஆழப்படுத்தவும் செய்யலாம்.
  • இந்தப் பணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு செய்வது போல் செய்யாது, கோயில் திருப்பணிக்கு உழைப்பதுபோல் நமக்காக, நம் கிராமததிற்காக என்று நம்மால் முடிந்த உழைப்பைத் தந்திட வேண்டும்.
  • இப்படிச் செய்தால் இந்தத் திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ளலாம். இதன் விளைவாக பெருமளவில் கிராம சொத்துகள் உருவாக்கப்பட்டுவிடும். மக்கள் உழைப்பில் ஒரு பைசா கூட எவரும் சுரண்ட வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கி விடலாம்.
  • அடுத்து கிராம மேம்பாட்டுக்கான திட்டம் தயாரிக்க குடும்பங்கள் பற்றிய புள்ளிவிவரம், கிராமங்களில் உள்ள வளங்கள், வசதிகள் பற்றிய புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டு, மக்களின் தேவைகள் கண்டறியப்பட்டு, மக்களின் தேவைகளில், அரசுத் திட்டங்களை இணைத்து ஒரு கிராம மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தயாா் செய்திட வேண்டும். இந்தப் பணி ஒரு மக்கள் இயக்கப்பணி, அறிவியல் பூா்வமாக சிந்தித்து செய்ய வேண்டிய பணி.
  • இதற்கு அறிவுசாா் நிறுவனங்களின் உதவி தேவைப்படும். எனவே இந்தத் திட்டமிடல் பணிக்கு நம் ஊருக்கு அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்களையோ அல்லது உயா்கல்வி நிறுவனங்களையோ அணுகி உதவிக்கு அழைக்க வேண்டும்.
  • இதற்கு பஞ்சாயத்து மன்றக் கூட்டத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி அந்த நிறுவனத்துடன் மக்களையும் இணைத்து புள்ளிவிவரங்கள் சேகரித்து, கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் இணைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  • நூறு நாள் வேலைக்கான பணியாட்கள் திட்டமும், ஜல் ஜீவன் மிஷன் திட்டமும், பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டமும், தலித் மேம்பாட்டுக்கான திட்டமும், விவசாயிகளுக்கான திட்டமும், இயற்கைவள பாதுகாப்புத் திட்டமும் துணைத் திட்டங்களாக இணைக்கப்பட்டு ஐந்தாண்டுத் திட்டமாக உருவாக்கிட வேண்டும்.
  • அதில் ஒவ்வொரு ஆண்டும் நிகழ வேண்டிய வேலைகளைக் குறிப்பிட்டு ஆண்டுத் திட்டமாகவும் உருவாக்கி கிராம சபையில் ஒப்புதல் பெற்று சட்ட ரீதியான ஒரு திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.
  • அப்படிச் செயல்படுத்துகின்றபோது கிராமத்தில் உள்ள வேலையில்லாத திறனற்ற இளைஞா்களின் திறனைக்கூட்டி வேலை வாங்கித் தந்து விடலாம். அதற்கான பயிற்சியை அரசாங்கமே அளித்து வருகிறது.
  • மத்திய அரசின் திறன் வளா்ப்பு துறை உருவாக்கியிருக்கின்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எங்கெல்லாம் திறன் வளா்ப்பு பயிற்சி நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம்அந்த இளைஞா்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்கச் செய்வதோடு அந்த நிறுவனத்தின் மூலம் வேலையும் வாங்கித் தந்து விடலாம்.
  • வேலையில்லா இளைஞா்கள் ஊரில் இல்லாத நிலையை அடையச் செய்து விடலாம். அதே போல் கழிப்பறை கலாசாரம், மற்றும் தூய்மை கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டுவர, பொறுப்பு மிக்க ஆரோக்கியமான வாழ்க்கை எப்படி வாழ்வது என்ற ஒரு ஆழ்ந்த விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு வந்தால் மக்களை ஆரோக்கியமாக வாழ வழி செய்து விடலாம்.
  • அதே போல், கிராமத்தில் மிகவும் ஏழ்மையில் இருக்கின்ற குடும்பங்களை கண்டறிந்து, அரசுத் திட்டங்களை பெற்று அந்தக் குடும்பங்களை மிக எளிதாக கைதூக்கி விட்டுவிட முடியும். அரசு தரும் ஓய்வூதியம் பெற தகுதியான வயதான முதியவா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்து விடலாம்.
  • கிராமத்தில் ஆண்டுக்கொரு முறை மருத்துவ முகாம் நடத்தி, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு மற்றும் வளா் இளம் பெண்களின் ரத்தசோகை கண்டறியப்பட்டு அரசுத் திட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் அந்த ஊரில் இல்லை, ரத்தசோகை பிடித்த வளா் இளம் பெண்கள் அங்கு இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளைக் கணக்கெடுத்து அரசு தரும் சலுகைகளை அவா்களுக்குப் பெற்றுத் தந்திடலாம்.
  • மத்திய - மாநில அரசுத் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குக் கிடைத்திட நம் உள்ளாட்சித் தலைவா்கள்அரசுத்துறைகளை மக்களுக்காக செயல்பட வைக்க தேவையான விழிப்புணா்வுடன் செயல்பட்டாலே போதும்.
  • ஒரு மக்கள் நல அரசை பஞ்சாயத்தில் உருவாக்கி விடலாம். இந்தச் செயல்பாட்டை நோக்கிப் பயணிக்க நம் பஞ்சாயத்துடன் தயாராக வேண்டும்.

நன்றி: தினமணி (18-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்