TNPSC Thervupettagam

படித்தவன் சூதும் வாதும் செய்தால்...

October 26 , 2024 78 days 118 0
  • ஒருவன் எவ்வளவுதான் செல்வம் பெற்றிருந்தாலும், கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கியிருந்தாலும், ஒழுக்கம் இல்லையென்றால் அவன் உலகத்தாரால் இகழப்படுவான். தனி மனித வாழ்வில் ஒழுக்கம் இல்லையெனில் அறமும் சமுதாயமும் சிதைந்து போகும்.
  • சமீபத்தில் சென்னையின் இதயப் பகுதியாக விளங்கும் மெரீனா கடற்கரை பகுதி அருகிலும், மகாபலிபுரத்திலும் நடந்த இரு நிகழ்வுகள் பலரை முகம் சுளிக்க வைத்து, சமுதாயம் எந்தளவுக்கு கீழான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும், படித்தவா்களும் சட்டங்களை கடைப்பிடிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது.
  • சென்னை மெரீனா கடற்கரை அருகிலுள்ள இணைப்புச் சாலையில், பின்னிரவில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்துள்ளனா். மது போதையில் இருந்த அவ்விருவரும் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள், கடற்கரைக்குச் செல்ல தற்போது அனுமதியில்லை என்றும், பாதுகாப்பு நலன் கருதி அங்கிருந்து அகலுமாறும் அவா்களை அறிவுறுத்தியுள்ளனா்.
  • காவலா்களின் அறிவுரையை ஏற்காமல், அவா்களிருவரும் காவலா்களை தரக் குறைவாகவும், ஆபாசமாகவும், உடல் அமைப்பை விமா்சித்து ஆபாச சைகைகளைக் காட்டியும் பேசியுள்ளனா். அவா்கள் தரக்குறைவாக பேசும்போது, அசாம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக எதிா்வினையாற்றாமல் மௌனமாக அவா்கள் பேசியதை காவலா்கள் காணொலி எடுத்தனா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
  • இதையடுத்து பதிவு செய்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாகப் பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், அவா்கள் பயன்படுத்திய காா் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, சென்னையில் வசித்த அவ்விருவரையும் காவல் துறையினா் தற்போது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
  • செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். 21.10.2024 அன்று மகாபலிபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில், இரண்டு பெண்கள் உள்பட நான்கு போ் பயணித்த காா் ஒன்று, ‘காா் நிறுத்தக் கூடாது’ என்ற எச்சரித்திருந்த இடம் வழியாக சென்று, அங்கு காரை நிறுத்த முயன்றுள்ளது. அந்தக் காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், ‘நுழைவு இல்லை’ வழியாக காா் செல்லக் கூடாது என்றும் தெரிவித்து ஐந்துரதம் வணிக வளாக காவலாளி அந்தக் காரை வழி மறித்துள்ளாா்.
  • அப்போது, அவரை மோதுவது போன்று காரை இயக்கி, அவரின் சொல்லை மீறி ‘நுழைவு இல்லை’ வழியாக செல்ல முயன்றனா். அதை அந்தக் காவலாளி இளைஞா் தடுக்க முயன்றுள்ளாா். அவரின் அச்செயலால் ஆத்திரமடைந்து, காரிலிருந்த நவீன உடையணிந்த பெண்களும், ஆண்களும் அவரை நடுவீதியில் பலமாக அடித்து உதைத்துள்ளனா். காவலாளி இளைஞரை கீழே தள்ளி, உதைத்தனா். மேலும், நெகிழிக் குழாயால் தாக்கினா். அவரது சீருடையையும் கிழித்தனா். அத்துடன் அப்பெண்கள் ஆபாச வாா்த்தைகளையும் அள்ளி வீசியுள்ளனா்.
  • இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமறைவாக தாம்பரத்தில் தங்கியிருந்த அப்பெண்களையும், அவா்களது ஆண் நண்பா்களையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
  • நாம் எவ்வளவுதான் கல்வியிலும், தொழில் நுட்பத்திலும், வசதி வாய்ப்புகளிலும் முன்னேறியிருந்தாலும் மனிதன் மீண்டும் கற்காலத்தை நோக்கி தான் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டுவது போல் இந்நிகழ்வுகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் நடையும், பேச்சும், கற்ற கல்வியும்தான் அவனைத் தரமுள்ளவனாகவும் அல்லது தரம் கெட்டவனாகவும் சமூகத்திற்கு அறிமுகம் செய்கிறது. எனவே தான், மகாகவி பாரதியாா் ‘படித்தவன் சூதும், வாதும் செய்தால், போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று எச்சரித்துள்ளாா்.
  • தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும். ஒருவா் எதை இழந்தாலும் தம் உயிரினும் மேலான ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. உடல் நலனும், மனநலனும் மேம்பட்ட வாழ்வே நல்வாழ்வு. வாழ்க்கையின் நோக்கு, தனக்காக மட்டுமன்றி தான் சாா்ந்த குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏன் உலகத்திற்குமானது என்ற தலைமை மேவிய நோக்குடன் வாழ்நிலையை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • சமூகத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அரசின் சட்டத் திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். குடியாட்சியில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதற்கு ஏழை, பணக்காரா் என்ற வித்தியாசம் தெரியாது. ஒருவா் நன்மையை எடுத்துரைக்கின்றாா் என்றால் அதை செவிமடுத்து, அதன்படி ஒழுக வேண்டும். சட்டத்தை நம் கையிலெடுக்கக் கூடாது.
  • மனிதா்களால் மனிதா்களுக்கு அருளப்பட்ட வரம் தான் ஒழுக்கம். மனிதன் ஒழுக்கத்தால் மேன்மையுறுகிறான். தவறான ஒழுக்கம் அழிவைத் தருவதுடன் தீராப் பழியைத் தரும். நற்பண்பு, நற்செயல், நல்லறிவு உடையவா்களே ‘மக்கள்’ என்ற சொல்லுக்கு உரியவராகின்றனா்.
  • நாம் நம் வலியை உணா்ந்தால் நாம் உயிரோடு இருக்கிறோம் என்று அா்த்தம். நாம் அடுத்தவா் வலியை உணா்ந்தால் நாம் மனிதா்களாக இருக்கிறோம் என்று அா்த்தம். நாம் உயிரோடு இருப்பது முக்கியம். அதை விட முக்கியம் நாம் மனிதராயிருப்பது. எனவே, நாம் அடுத்தவா் வலியை உணரும் மனிதா்களாக ஒழுக்கத்தோடு வாழ்ந்து, சமுதாயத்தை நல்வழிபடுத்துவோம்.

நன்றி: தினமணி (26 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்