- நாடு தழுவிய ஊரடங்கைத் தொடர்ந்தும் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவெடுத்திருக்கிறது இந்திய அரசு. ஒட்டுமொத்த நாட்டுக்குமான ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவந்து, கிருமிப் பரவலுக்கு ஏற்ப அந்தந்தப் பிராந்தியங்கள் சார்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரலாம் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஒன்றிய அரசின் இம்முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
- விமானங்கள், ரயில்களை இயக்கிடல் போன்ற நாடு தழுவிய சில சேவைகள் தொடர்பான முடிவுகள், சில முன்னெச்சரிக்கை வழிகாட்டல்களை மட்டும் வழங்கிவிட்டு, அந்தந்த மாவட்டங்களின் சூழலுக்கேற்ப முடிவெடுக்க மாநில அரசுகளே முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், அதுவே சரியானதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
- தொற்றுப் பரவலின் அடிப்படையில் நாட்டின் 739 மாவட்டங்களையும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாகப் பிரித்து, சிவப்பு நீங்கலான மண்டலங்களில் சில தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அரசின் அறிவிப்பு சொன்னாலும், ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே சில தளர்வுகளை மட்டும் கொண்டுவருவது சமூக, பொருளாதாரத் தளத்தில் பெரிய பலன்களை அளிக்காது; மாறாக, ஊரடங்கை நீக்கிவிட்டுச் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் முடிவானதே நாம் செல்ல வேண்டிய திசையாகும்.
- சமூகப் பாதுகாப்பு வலை ஏதுமற்ற பல கோடி மக்களைக் கொண்ட இந்தியா பல வாரங்களுக்கு முடங்கியிருக்கும் நிலையானது பல மாதங்கள், வருடங்களுக்கு நீளும் பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
கிடைத்த ஆறுதல்
- இன்றைய நடைமுறையில் உள்ள ஒரு ஆறுதல், எவற்றையெல்லாம் அனுமதிக்கலாம் என்று மாநில அரசுகளும் சில முடிவுகளை எடுக்க முடியும் என்பதாகும். அந்த வகையில், சென்னை உள்ளிட்ட தீவிரத் தொற்றுப் பகுதி நீங்கலான ஏனைய பகுதிகளில் ஊரடங்கை நெகிழ்வாக்கி வணிகச் செயல்பாடுகளை முடுக்கிவிடலாம் என்கிற தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்புக்கு உரியது.
- அரசு அனுமதித்திருக்கிற தொழில்களின் பட்டியல் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். பழைய சூழல் நோக்கி நாம் வேகமாகத் திரும்ப வேண்டும்.
- இந்த ஊரடங்கு தொடங்கப்பட்ட காலகட்டத்தில் உலகமே சில வாரங்களில் கரோனாவை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தியாகவே இதைப் பார்த்தன.
- ஆண்டு கடந்தும் நீடிக்கும் பிரச்சினை என்று இன்று எல்லோருமே உணரத் தொடங்கிவிட்ட நிலையில், இந்திய அரசு கட்டாயம் தன் வியூகங்களை மாற்ற வேண்டும். ஊரடங்கும் கிருமித் தொற்றும் படிப்படியாக முடிவுக்கு வரட்டும்!
நன்றி: தினமணி (04-05-2020)