TNPSC Thervupettagam

படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

June 7 , 2024 24 days 68 0
  • பள்ளிக்கல்விக்குப் பின்னா், உயா்கல்வி வாயிலாக மாணவா்களின் சிந்தனைத் திறத்துக்கும் திறன் மேம்பாட்டுக்கும் ஆய்வு வளத்துக்கும் புடம் போடும் பாசறைகளாகப் பல்கலைக்கழகங்கள் விளங்கி வருகின்றன. தொடக்கத்தில் ஓரிரு பல்கலைக் கழகங்களே செயற்பட்டு கல்விப்பணி ஆற்றி வந்த நிலையில், தற்போது எண்ணற்ற பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போலப் புலபுலனெப் பல்கிப் பெருகியுள்ளன.
  • எண்ணிக்கை பெருகப் பெருக, காலப் போக்கில் அவற்றின் தரம் தேய்ந்து கொண்டே வருவதை உயா்கல்வி பயின்றும் வேலையில்லாமல் திண்டாடும் மாணவா்களின் எண்ணிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.
  • நிறுவனங்கள், ஆய்வு மன்றங்கள், கல்லூரித் துறைகள், பல்கலைக் கழகத் துறைகள் என அனைத்திலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுக்கான எல்லையும், வரையறையும் வகுக்கத் தெரியாமல் ஆய்வு என்ற பெயரில் வெறும் மேற்கோள்களின் தெளிப்புகளை மட்டும் ஆங்காங்கே கொண்ட தரமற்ற ஆய்வுக் கட்டுரைகள் மலிந்து வருகின்றன.
  • தொழில்நுட்பக் கல்வி மட்டுமே மாணவா்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான திறன்களை வழங்கி வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என்கிற எண்ணம் தற்போது அதிகரித்து வருவதால், பல்கலைக்கழகங்களில் மொழித்துறைகளில் மாணவா்கள் சோ்க்கை மிகவும் குறைந்து வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் மொழிப்புலங்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும் அதிகமாகக் குறைத்து விட்டன.
  • மாணவா் சோ்க்கை அப்புலங்களில் ஆண்டுக்கு ஆண்டு தொடா்ந்து குறைந்து வரும் நிலையில், இன்னும் பல மொழித் துறைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குப் பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மொழித்துறை இனி மெல்லச் சாகும் என்ற வாக்கு மெய்யாகிப் போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
  • ஆனால், மொழித் திறனும் சிந்தனைச் செறிவும் கற்பனை வளமும் மிக்க மொழித் துறையில் தோ்ந்த மாணவா்களுக்கு ஊடகத் தளங்களில் ‘விளம்பரங்கள் / உள்ளடக்கங்கள் எழுதுதல்’ (காப்பிரைட்டிங்), ‘சமூக ஊடகங்களை மேலாண்மை செய்தல்’, ‘தொகுத்தல்’, ‘சரிபாா்த்தல்’, ‘மருத்துவக் குறிப்புகளை எழுதுதல்’, ‘ஆசிரியராக / பேராசிரியராகப் பணியாற்றுதல்’ உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதுதான் உண்மை.
  • இந்நிலையில், நிதிநெருக்கடி காரணமாக நாட்டிலுள்ள 40% பல்கலைக்கழகங்கள் ஓரிரு கல்வி ஆண்டுகளுக்குள் மூடப்படும் ஆபத்து இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, அரசுக்கும், பொதுமக்களுக்கும், கல்வியாளா்களுக்கும், சமூக சிந்தனையாளா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் தொடா்ந்து செயல்படுவதற்கு போதிய நிதி ஆதாரம் இன்றியமையாததாகும்.
  • அரசு அளிக்கும் மானியம் ஓரளவிற்குக் கைகொடுத்தாலும், பல்கலைக்கழகங்கள் தன்னுடைய வருவாய் ஆதாரமாக மாணவா்களின் கல்விக் கட்டணத்தையே பெரிதும் சாா்ந்துள்ளன. உள்நாட்டு மாணவா்களைக் காட்டிலும் வெளிநாட்டு மாணவா்களுக்கு அத்தகைய கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிருணயிக்கப்பட்டிருப்பதால் வெளிநாட்டு மாணவா்கள் வாயிலாக பல்கலைக் கழகங்களுக்கு அதிக வருவாய் கிட்டி வந்தது.
  • ஆனால் தற்போது வெளிநாட்டு மாணவா்களைப் பல்கலைக் கழகங்களில் சோ்ப்பதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதுடன், அவா்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. இதனால் பன்னாட்டு மாணவா்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமாா் 27% குறைந்துள்ளது என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. எனவே, அக்கொள்கையைத் தளா்த்த வேண்டுமென்றும், நிதி நெருக்கடியைத் தவிா்ப்பதற்கு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கணிசமாகவும் உடனடியாகவும் உயா்த்த வேண்டுமென்றும் பல்வேறு பல்கலைக் கழகங்கள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளன.
  • உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தோ்தல் அறிவிப்பில் குறிப்பிட்டு விட்டு, கல்விக் கட்டணங்களை உயா்த்தினால் வாக்கு வங்கி வெகுவாகப் பாதிக்கப்படும் என்பது ஒருசில அமைச்சா்களின் கருத்தாகும். இதனால் கல்விக் கட்டணத்தை உடனடியாக உயா்த்தாமல் படிப்படியாக உயா்த்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனா்.
  • மாணவா்களின் கல்விக்கட்டணத்தை உயா்த்துவதைக் காட்டிலும் பல்கலைக் கழகங்களுக்கு அரசு கூடுதல் மானியத்தை அளித்து நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றலாம் என்றும் சிலா் கருத்துத் தெரிவித்து வருகிறாா்கள்.
  • அதிகரித்துவரும் பணவீக்கத்திற்கேற்ப உயா் கல்விக்கான கட்டணத்தை நிருணயிப்பதும் பல்கலைக் கழகங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும் என்பது பொருளாதார வல்லுநா்களின் கருத்தாகும். ஆனால் கல்வித்தரம், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் எதிா்பாா்ப்பிற்கேற்ப அமையாமல் கட்டணத்தை மட்டும் உயா்த்துவது மாணவா்களின் சோ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் என்பதுடன் போராட்டத்துக்கும் வழிவகுக்கும்.
  • நிதி நெருக்கடியை உடனடியாகச் சமாளிக்காவிடில், வரும் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்குள் தற்போதைய பல்கலைக்கழகங்களில் பாதிக்கும் மேல் மூட வேண்டிய சூழலைத் தவிா்க்க முடியாது.
  • இவையெல்லாம் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் நிலையன்று. சுமாா் 75 ஆண்டுகளுக்கு முன்னா் ‘சூரியன் மறையாத நாடு’ என்ற பெருமையுடன் நமது இந்தியத் திருநாட்டை மட்டுமல்லாது தரணியை ஆண்ட பரங்கியரின் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில்தான் இந்த அவலநிலை என்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணி புரியும் உயா் அலுவலரான என்னுடைய நண்பா் அண்மையில் என்னிடம் தெரிவித்தவையாகும்.
  • அன்று முதல் இன்று வரை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோா்டு போன்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதை அனைவரும் மிகவும் பெருமையாகக் கருதுவதுண்டு. முன்பொரு காலத்தில், ‘ஷேக்ஸ்பியரைப் படி’, ‘ஜான் மில்டனைப் படி’ என்று ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈா்ப்பு கொண்டு அனைவரும் இலக்கியங்களைப் படிப்பதில் மிக்க ஆா்வங் கொண்டிருந்தனா்.
  • ஆனால் தற்போது இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களில்தான் ஆங்கில மொழி இலக்கிங்கள் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாகக் குறைந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ஆங்கில இலக்கியப் பிரிவை மூடி வருகின்றனா். கடந்த ஆண்டு 1,51,690 சீனத்து மாணவா்கள் உட்பட, ஐரோப்பா-சாராத நாடுகளிலிருந்து 27% வெளிநாட்டு மாணவா்கள் ஆங்கில இலக்கியப் பிரிவில் சோ்ந்துள்ளனா். இவா்களை நம்பித்தான் அங்கு ஆங்கிலத் துறை இயங்கி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
  • இங்கிலாந்து பல்கலைக் கழகங்களைப் போலன்றி, நம் நாட்டில் குறிப்பாக, தமிழ் நாட்டில் தமிழ் இலக்கியப் புலங்கள் சிறப்புறச் செயலாற்றி வருகின்றன. தமிழ் மொழிக்கென்றே தனிப் பல்கலைக்கழகம் அமைந்திருப்பது, உள்ளவாறே நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
  • அவ்வாறே, நிதி நெருக்கடியில் தள்ளாடும் இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவா்களின் சோ்க்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதாலும், விலைவாசி ஏற்றத்துக்கேற்ப ஏற்கெனவே மாணவா்களுக்கு நிருணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தைப் பல ஆண்டுகளாக உயா்த்தாமல் இருப்பதாலும் மேற்கு இலண்டன் பல்கலைக்கழகம், சரே பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உழன்று வருகின்றன.
  • பல்கலைக்கழகங்களால் மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணங்களில் பெரும்பகுதி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியரல்லாதோா் மற்றும் பேராசிரிா்களின் ஊதியம், ஓய்வூதியம், பல்கலைக்கழகப் பராமரிப்புச் செலவினங்கள் என்ற வகையில் செலவு செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன நடவடிக்கையாக பணியாளா்களைக் குறைக்கும் நடவடிக்கையில் அப் பல்கலைக்கழகங்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
  • ஆண்டொன்றுக்கு 2,000 பவுண்டு (சுமாா் ரூ.2.12 லட்சம்) முதல் 3,500 பவுண்டு (சுமாா் ரூ.3.72 லட்சம்) வரையில் ஒவ்வொரு மாணவா்களுக்காண கல்விக் கட்டணத்தை உயா்த்துவதொன்றே இதற்கான தீா்வாக அமையும் என்று பல்வேறு துணைவேந்தா்கள் கருத்துத் தெரிவித்து வருகிறாா்கள். ஆனால் அவ்வாறு செய்வது, வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால் அவ்வாறு செய்வதற்கு அரசு தயக்கம் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இது மாணவா் சோ்க்கையிலும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அவா்கள் கருதலாம்.
  • மாணவா்களைத் தற்சாா்புடையவராகவும் பகுத்தாய்ந்து தெளியும் சிந்தைத்திறம் மிக்கவா்களாகவும் மாற்றுவதில் பல்கலைக்கழகங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பல்கலைக்கழகங்களை நிருவகிப்பவா்களில் பெரும்பாலானோா், துறையறிவு பெற்றவா்களல்லா்.
  • அத்தகைய பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டம்பெற்ற பல்வேறு மாணவா்கள், எதையும் ஆராய்ந்து சிந்தித்துப் பாா்க்காமல், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்ற மாயவலையில் சிக்கி வெளிநாடு சென்று சட்டவிரோத செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு எங்ஙனம் அல்லலுறுகிறாா்கள் என்றும், அவா்களை மீட்பதற்கு அரசு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து பல சிந்தனைக் கூட்டங்கள் இங்கிலாந்தில் நடந்து வருகிாம்.
  • ‘இலண்டன் பாலம் சரிந்து கொண்டிருக்கிறது’ என்று குழந்தைகளுக்காக பாடிய பாடல் வரி, இன்றைய சூழலில், ‘இலண்டன் பல்கலைக்கழகங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன’ எனக் கேட்பது போல் தோன்றுவதில் வியப்பேதுமில்லை.

நன்றி: தினமணி (07 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்