படைப்பாளிகளை ஒடுக்கும் இலங்கை அரசு
- 2024 மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மாத்திரம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாகச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர பத்து அல்லது இருபது வருடங்கள் ஆகலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இத்தகைய நெருக்கடி நிலையிலும் படைப் பாளிகள் மீதும் தமிழர்கள் மீதும் இலங்கை அரசு ஒடுக்குமுறைகளை மேற்கொள்வது பலரும் அறியாதது. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கர வாதத் தடைச் சட்டம், இன்று விடுதலைப் புலிகள் இல்லாத 15 ஆண்டுகளாகத் தமிழ் மக்களையும் தமிழ்ப் படைப்பாளிகளையும் அச்சுறுத்தி ஒடுக்கிவருகிறது.
- படைப்பாளிகள் தமது எண்ணங்களையும் கற்பனைகளையும் எழுத முழுமையான சுதந்திரத்தை அளிப்பதைப் பன்னாட்டுப் படைப்புச் சட்டங்களும் விதிகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், இலங்கை அரசு இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. இனப்பிரச்சினை ஏற்பட்ட பின்னர் 35 ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல சிங்கள, தமிழ்ப் படைப்பாளிகளும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
- படைப்புச் சுதந்திர அவல நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. நான் எழுதிய ‘பயங்கர வாதி’ நாவலுக்காக கடந்த ஜூன் மாதம் 16இல் இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். என் நாவல் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைகின்றதா என்கிற சந்தேகத்தில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- போரில் இருந்து தப்புகின்ற ஒரு குழந்தை புலிகளின் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் பல்கலைக்கழகம் சென்று மாணவத் தலைவனாகி மாணவர்களின் உரிமைக்காகப் போராடும் களத்தில் ராணுவத்துக்கு எதிரான ஒரு போராளியாக மாறும் கதையைத்தான் ‘பயங்கரவாதி’ பேசுகிறது. இந்த நாவல் ஒரு மாணவனின் கல்விக்கான தாகம் என்பதை எடுத்துரைத்தேன்.
- ஆனால், “உங்களைப் போன்றவர்கள் பிரபாகரன் பற்றி எழுதி மீண்டும் பிள்ளைகளை ஆயுதம் ஏந்த வைக்கப் போகிறீர்களா?” என்று சற்று சீற்றத்துடன் விசாரணை அதிகாரி கேட்டிருந்தார். “நாங்கள் பிரபாகரன் என்று உச்சரிப்பதற்குத் தடுக்கப்படுகிறோம். ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களத் தலைவர்கள் பிரபாகரனின் பெயரை உச்சரிக்காத நாள்களும் அமர்வுகளும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
- அதனைக் கேட்டுவிட்டு வரும் பிள்ளைகள் பள்ளியில் என்னைப் போன்ற ஆசிரியர்களிடம் வந்து பிரபாகரன் என்றால் யார் என்று கேட்கிறார்கள்” என்றேன். சிங்களத் தலைவர்கள் அப்படிப் பேசுவதை தாம் ஏற்பதாக விசாரணை அதிகாரி கூறினார். இந்த நாவல் தமிழ் – சிங்கள மக்களிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடியது என்பதையும் எடுத்துரைத்தேன். அத்துடன் என் முதல் நாவல் சிங்களத்தில் வெளியாகி இருந்ததையும் அதனைப் படித்த பல சிங்கள இளைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொண்டாடியதையும் அந்த அதிகாரிக்கு எடுத்துக் கூறினேன்.
- மிக முக்கியமாக, இந்த விசாரணைகளால் அச்சப்பட்டு எழுதுவதை நிறுத்த மாட்டேன்; வெளிநாடுகளில் குடியேற மாட்டேன் என்பதையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினேன். என்னிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாகத் தமிழ்ப் படைப்பாளிகள் பலர் மௌனம் காத்தனர். அது அவர்களுடைய அச்சத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால், சிங்களப் படைப்பாளிகள் பலர் எனக்கு ஆதரவை வழங்கினர்.
- இந்த விசாரணை குறித்து யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே, சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இலங்கைப் போரில் சந்தித்த இழப்புகள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது, இந்தத் தீவின் எதிர்கால அமைதிக்கும் அவசியமானது. இதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 09 – 2024)