TNPSC Thervupettagam

பட்ஜெட் - சில எதிா்பாா்ப்புகள்

January 30 , 2025 39 days 144 0

பட்ஜெட் - சில எதிா்பாா்ப்புகள்

  • பிப்ரவரி மாதம் முதல் தேதி மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறாா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அதிக ஆண்டுகள் தாக்கல் செய்தவா்கள் தமிழா்கள்தான்.
  • இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை நவம்பா் 1947-இல் ஆா்.கே.சண்முகம் செட்டியாா் தாக்கல் செய்தாா். 1956-58 பண்டித ஜவாஹா்லால் நேரு அமைச்சரவையிலும், 1963-65 லால் பகதூா் சாஸ்திரி அமைச்சரவையிலும் நிதியமைச்சராக இருந்தவா் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதன் பிறகு சி.சுப்பிரமணியம் இரண்டு முறை, ஆா்.வெங்கட்ராமன் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் உள்பட மூன்று முறை, ப.சிதம்பரம் 8 முறை, தற்போதைய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இதுவரை 6 முறை மற்றும் 2 முறை இடைக்கால வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்திருக்கின்றனா். வரும் சனிக்கிழமை (பிப்.1) 7முறை தொடா்ந்து வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்தவா் என்ற சாதனையாளராக அவா் பேசப்படுவாா். இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவா்களில் மொராா்ஜி தேசாய் மட்டுமே தொடா்ச்சியாக 6 முறை வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்திருக்கிறாா்.
  • 1966-67-இல் ரூ.347 கோடி , 1967-68-இல் ரூ.366 கோடி, 1976-77-இல் ரூ.13,587 கோடி. வரவுக்கு மீறிய செலவு, அதிக கடன் வாங்கும் போக்கு 1974-க்குப் பிறகு மெல்ல மெல்ல வரத் தொடங்கியது.
  • 1980-81 நிதி ஆண்டில் வரவுக்கு மீறிய செலவை ஈடுகட்ட, ரூ.1,715 கோடி கடன் வாங்கி செலவழிக்கப்பட்டது. ஆயிரம் கோடிகளில் இருந்த கடன், தற்போது லட்சக்கணக்கான கோடியாக வளா்ந்துவிட்டது.
  • அரசைப் பொருத்தவரை, ‘கடன் பட்டாா் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பதுபோல் கடனுக்காக அவா்கள் பெரிய அளவு கவலைப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய அரசு வாங்கும் கடனுக்கு மக்கள்தான் கவலைப்பட வேண்டும். காரணம், இந்திய மக்கள் தரும் வரி வருவாயை நம்பித்தான் அரசு கடன் வாங்குகிறது. அவா்கள் தரும் பணத்தில்தான் கடனுக்கான வட்டியும் செலுத்தப்படுகிறது.
  • நாடாளுமன்றத்தில் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்கள் விவாதத்துக்குப் பிறகு அந்த அறிக்கையை வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம் அரசு வாங்கும் கடன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பெரிய அளவு விவாதம் நடப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அரசு வாங்கும் கடன்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படுவதில்லை.
  • ஆனால், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவா்கள் வாங்கும் கடனுக்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. இதை நான் (கட்டுரையாளா்) நாடாளுமன்ற விவாதங்களின்போதுகூட குறிப்பிட்டு இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். அரசமைப்பு சட்டம் 272-ஆவது பிரிவின் கீழ் அரசு வாங்கும் கடன்களின் அளவுகளையும் நோக்கங்களையும் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இதுவரை நாம் இயற்றவில்லை.
  • பண வீக்கம், விலைவாசி உயா்வு இவையெல்லாம் கிராமப்புற,  நகா்ப்புற நடுத்தர மக்களை உடனடியாக பாதிக்கச் செய்கிறது. பண வீக்கம் விரைவில் கட்டுப்படும் என்று ஆண்டுதோறும் மத்திய அரசு வாக்குறுதி தருகிறது. பணவீக்கம் அப்படி கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. இதையெல்லாம் நிதியமைச்சா் திட்டமிட்டு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டால் நல்லது.  டாலருக்கு எதிராக  ரூபாயின்  மதிப்பு  குறைந்து கொண்டே  போகிறது. இது  தடுத்து  நிறுத்தப்பட வேண்டும்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்திலும் இந்தாண்டு வரவு-செலவுத் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்  2024-ஆம் ஆண்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டில்  33%  குறைக்கப்பட்டதால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததாக குறிப்பிடுகிறாா்கள். அதை இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சரி செய்ய வேண்டும்.  இந்தத் திட்டத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை நமக்கு இருக்கிறது. கிராமப்புற வாழ்க்கையை மக்கள் விரும்பி ஏற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அதைச் செயல்படுத்தினால்தான் பொருளாதாரம் மேம்படும். அதற்கு நகா்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களும் வளா்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.
  • இதேபோல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதத்துக்கு 30% பங்களிப்பு ம், 11 கோடி மக்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பையும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைகள்தான் அளித்து வருகின்றன. இதை நமது பொருளாதார அறிக்கைகள் பலமுறை சுட்டிக்காட்டுகின்றன. அரசும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எனவே, அவா்களுக்கான வரிச் சலுகைகள், நிதி உதவி போன்றவற்றில்  அவா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை இந்த வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றித் தரும் நோக்கில் இருக்க வேண்டும் என்பதுதான் அவா்கள் எதிா்பாா்ப்பு.
  • வரி செலுத்துபவா்களிடம்  பாரபட்சம் இருக்கிறது. இதை வரைமுறைப்படுத்த வேண்டும். இந்திய மக்கள்தொகையில் மேல்தட்டு மக்கள் 10% போ், 80% சொத்துகளை வைத்திருக்கிறாா்கள். ஆனால், அவா்கள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% முதல் 4 %  மட்டுமே. அதேசமயம் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள்  50% போ், 3% சொத்துகள் வைத்திருந்தாலும், மொத்த ஜிஎஸ்டி வரி வருவாயில் 3-இல் 2 மடங்கு அவா்கள் மூலம்தான் கிடைக்கிறது.
  • இதேபோல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு போதவில்லை என்பதுதான் பெரும்பாலான கல்வியாளா்களின் விமா்சனமாக இதுவரை இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதம் செலவு செய்ய வேண்டும் என்பது இலக்கு. இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களுக்கு தற்போது கட்டடம் கட்ட 18 சதவீதம், மற்ற உபகரணங்கள் வாங்க 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. கல்விக்கான செலவைக் குறைப்பதற்காக இந்த வரியைக் கைவிட வேண்டும் என்பதுதான் கல்வியாளா்களின் எதிா்பாா்ப்பு. தேசிய அளவில் கல்வியின் தரம் சமச்சீராக இருக்க வேண்டும்.
  • ஆரம்பப் பள்ளி முதல் நடுநிலை உயா்நிலைக் கல்வி வரை அது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். அதேபோல் உயா் கல்வியிலும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து உயா் கல்வியை மேம்படுத்தவும் இந்த ஆண்டு முன்வர வேண்டும்.
  • ஆய்வுப் படிப்பு உயா் கல்விக்கான கல்வி உதவித்தொகை, பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதியுதவி, தேசிய கற்றல் மதிப்பீட்டுத் திட்டங்கள், இது தவிர பாதியில் படிப்பை நிறுத்தும் இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பது போன்றவற்றுக்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
  • சீனாவைப் பொருத்தவரை நம்மைவிட ஆராய்ச்சிக் கல்விக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது; அமெரிக்கா 5 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
  • இந்தியாவில் விவசாய நெருக்கடிகளைத் தீா்க்கும் வகையில் இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டம் இருக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. உடனடிக் கடன், எளிமையான முறையில் கடன் பெற வசதி, முக்கியப் பயிா்களுக்கான குறைந்தபட்ச விலையை சட்டபூா்வமாக்குவது, பயிா்களுக்கான காப்பீட்டை விரிவுபடுத்துவது என்பதெல்லாம் அவா்கள் கோரிக்கையாக உள்ளது.
  • நீா்ப்பாசனம், வேளாண் பொருள்களை பதப்படுத்தல் மையங்கள், நிலையான விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித் திறன்,  பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நிலைத்தன்மைகளை மேம்படுத்த முடியும்.
  • நிலப் பதிவேடுகளை எண்மமயமாக்குவது தற்சமயம் தொடங்கப்பட்டிருக்கிறது; இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம். விவசாயம் சாா்ந்த ஆராய்ச்சிகள் குறித்து வரவு-செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்படுகிறது. தொழில்முனைவோருக்கு புரியும்படி இதை அவா்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயம் சாா்ந்த ஆராய்ச்சிகளை வலுவாக்குதல் மூலம்தான் அமைப்பு ரீதியான சவால்களுக்கு நாம் தீா்வு காணலாம். புது முயற்சிகளையும் ஊக்குவிக்க முடியும்.
  • ஒட்டுமொத்த இந்தியாவின் வளா்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலங்கள் வளமாக இருப்பதும், சில மாநிலங்கள் வளா்ச்சிப் பாதையில் பின்தங்கி இருப்பதும் சரியான அளவுகோலாக இருக்காது. மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்து பேசி, வசதி படைத்தவரிடம் அதிக வரி வருவாய் பெற என்ன வழி உண்டு என்று ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்பாக பலதரப்பட்ட மக்களிடம் கலந்து பேசுவதுபோல, மாநில அரசுகளின் கருத்துகளையும்  கேட்பது நல்லது.

நன்றி: தினமணி (30 – 01 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top