- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த ஒன்றிய அரசின் 2024 - 2025 பட்ஜெட் தங்களுக்கு உற்சாகத்தைத் தரவில்லை என்று பெரும்பாலான மோடி ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துவிட்டனர். வருமான வரி விலக்கு வரம்பு கணிசமாக உயர்த்தப்படும் என்று நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தார்கள்; அப்படிச் செய்யாமல் விட்டதுடன் மூலதன ஆதாய வரியில் ஏற்கெனவே கிடைத்திருந்த சலுகைகளும் பறிக்கப்பட்டுவிட்டதாக வருந்துகின்றனர்.
- மோடி அரசின் எந்த முடிவு அல்லது நடவடிக்கை தொடர்பாகவும் அவரை ஆதரிப்பவர்கள் புகார் செய்வதோ, முணுமுணுப்பதோகூட வழக்கமே கிடையாது; அவரோ அவருடைய அரசோ எதைச் செய்தாலும் அது சரி என்றே நியாயப்படுத்துவார்கள், வாதிடுவார்கள். மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதானாலும் எதையுமே விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இதனாலேயே அவர்களை ‘ஆதரவாளர்கள்’ என்று அழைக்காமல் ‘பக்தர்கள்’ என்றே அழைப்பது வழக்கமாகிவிட்டது.
- அரசு எந்தவித விபரீத முடிவுகளை எடுத்தாலும், ‘அது நாட்டுக்கு நன்மையாகத்தான் இருக்கும்’ என்று பேசுவார்கள். எனவேதான் அவர்களுடைய கவலையே நமக்கு இப்போது பேசுபொருளாகிவிட்டது. அவர்கள் அதிருப்திப்பட நியாயம் இருக்கிறதா?
- பட்ஜெட் ஆராய்ச்சியில் இறங்க நான் விரும்பவில்லை. பொருளாதாரம் தொடர்பாக பாஜகவுக்கும் அதன் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கத்துக்கும் நிலையான - தெளிவான அணுகுமுறை இருந்திருந்தால், பக்தர்கள் இதைப் பற்றிக் கவலைப்படலாம். பாரதிய ஜனசங்கத்துக்கும் பாஜகவுக்கும் பொருளாதாரக் கொள்கை அல்லது சிந்தனை – அப்படி ஏதாவது இருந்தால் - என்ன என்பதை அதன் தேர்தல் அறிக்கைகளிலிருந்து ஓரளவு திரட்டலாம்.
- ஜனசங்கம் தொடங்கப்பட்ட 1951 முதலே, பொருளாதாரக் கொள்கை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் பெரிதாக பேசப்பட்டதில்லை. இந்துத்துவர்களின் பொருளாதாரச் சிந்தனை எப்படி நாட்டை வழிநடத்தும் என்று விளக்க ஆவணங்கள் ஏதுமில்லை.
சோஷலிஸத்துக்கு ஆதரவு!
- அதன் தேர்தல் அறிக்கைகளில் கிடைக்கும் தகவல்கள்கூட தொடர்ச்சியோ, ஒருங்கிணைப்போ இல்லாமல், அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப எதையோ கூறியாக வேண்டும் என்ற நிலையிலேயே இருந்துள்ளன. ‘ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறை நிறுவனங்களை மூடிவிடாது, அதேசமயம் தனியார் துறைக்கு உரிய இடம் தரப்படும்’ என்கிறது. சமத்துவம் என்ற கொள்கையை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக ஜனசங்க கட்சியின் அமைப்பு விதிகளில் இரண்டாவது, தெளிவாகக் கூறுகிறது.
- ‘சுதேசி’ கொள்கை என்றால், உள்நாட்டில் தயாரிக்கும் ஆலைப் பண்டங்களுக்கு மானியம் அளிப்பது, வெளிநாட்டு சரக்குகள் மலிவாக விற்க முடியாதபடிக்கு அவற்றின் இறக்குமதி மீது (காப்பு) வரிவிதிப்பது என்கிறது. இது நிச்சயம் கட்டுப்பாடுகளற்ற தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அல்ல. ‘வெளிநாடுகளிலிருந்து நுகர்பொருள்களையும், ஆடம்பரப் பொருள்களையும் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கக் கூடாது’ என்கிறது. ‘பாரதிய விழுமியங்களுக்குப் பொருந்தும் வகையில் புரட்சிகரமான மாற்றங்களை ஜனசங்கம் பொருளாதாரக் கொள்கையில் புகுத்தும்’ என்று 1957 தேர்தல் அறிக்கை கூறுகிறது. அந்த ‘புரட்சிகரமான மாற்றங்கள்’ என்ன என்று அந்த அறிக்கையிலோ, அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளிலோ கூறப்படவில்லை.
- 1967இல் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, திட்டமிட்ட பொருளாதாரம் (ஐந்தாண்டு திட்டங்கள்) என்பதை ஆதரித்தது. அதேசமயம், மாநிலங்கள் வாரியாகவும் பண்டங்கள் வாரியாகவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தியை பரவலாக்குமாறு திட்டம் தீட்டப்படும் என்றது. பொருளாதாரத்தில் அரசின் தலையீடு அவசியம், ஆனால் எல்லா துறைகளிலும் எல்லா இடங்களிலும் இல்லை என்றது.
- தனியார் துறையை ஆதரித்த ஜனசங்கம், ராணுவத்துக்கான உற்பத்தியில் தனியார் துறையை ஈடுபடுத்தக் கூடாது என்றது. கட்டுப்பாடுகளற்ற வர்த்தகம் – பொருளாதாரம் என்பது ‘கிருத’ யுகத்துக்கு அல்லது அதற்கு முந்தைய ‘சத்’ யுகத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம், இப்போதைய ‘கலி’ யுகத்துக்கு அல்ல என்றது. அதாவது, அரசின் கட்டுப்பாடு அவசியம் என்பதை ஆதரித்தது. சில முக்கியமான துறைகளில் அரசு மட்டுமே ஈடுபட வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
வருமான வரம்பு!
- இதில் 1954, பிறகு 1971 ஆகிய இரு ஆண்டுகளில் வெளியான தேர்தல் அறிக்கையில், தனிநபர் வருமானம் அதிகபட்சம் மாதத்துக்கு ரூ.2,000 ஆகவும் குறைந்தபட்சம் ரூ.100 ஆகவும் இருக்க வேண்டும் என்றது. அதாவது வருமான ஏற்றத்தாழ்வு 20:1 என்ற விகிதத்தை மிஞ்சக் கூடாது என்றது. பிறகு அடுத்தடுத்த வந்த அறிக்கைகளில் இது 10:1 ஆக இருக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றது. இந்த விகிதத்துக்கு மேல் எவருக்காவது வருமானம் உபரியாக வந்தால் அதை அரசு வரியாகவும், கட்டாய கடனாகவும், முதலீடாகவும் பெற வேண்டும் என்றுகூட வலியுறுத்தியது!
- பெருநகரங்களில் எந்த ஒரு வீடும் 1,000 சதுர கெஜ பரப்பளவுக்கு மேல் கட்டப்படக் கூடாது என்றது. ஆனால், இப்போதோ ‘குறைந்தபட்ச (அரசு) தலையீடு – அதிகபட்ச (அரசு) நிர்வாகம்’ என்று நிலையை மாற்றிக்கொண்டுவிட்டது.
- விவசாயத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதை ஜனசங்கம் முதலில் ஆதரித்தது. 1954இல் டிராக்டர்களை அறிமுகப்படுத்தியபோது, காளை மாடுகளுக்கு வேலையில்லாததால் அவற்றைக் கசாப்புக்கு அனுப்பிவிடுவார்கள் என்று அஞ்சி, ‘வேண்டாம்’ என்றது. பெரிய தொழிற்சாலைகள் இயந்திரங்களை உற்பத்திக்குப் பயன்படுத்தும்போது அது எவ்வளவு துல்லியமாக வேலை செய்கிறது, எவ்வளவு உற்பத்திச் செலவு குறைகிறது என்று மட்டும் பார்க்கக் கூடாது, தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு வைத்துக்கொள்ளும் நுட்பங்களை ஆலை நிர்வாகங்கள் கையாள வேண்டும் என்றது.
- ஒரு தொழிலதிபர் தன்னுடைய உற்பத்திச் செலவை ஏன் குறைத்துக்கொள்ளக் கூடாது என்றோ, தன்னுடைய கோரிக்கையை அவர் ஏன் ஏற்க வேண்டும் என்பதையோ கட்சி விளக்கவில்லை.
இயந்திரமயம் – 1971
- எந்தத் தொழிற்சாலையிலும் உற்பத்திக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது, ராணுவ உற்பத்தி – ராக்கெட் தயாரிப்பு ஆகியவற்றில் மட்டும் பயன்படுத்தலாம் என்று 1971 தேர்தல் அறிக்கையில் கூறியது.
- (சமீபத்திய 2024 - 2025 பட்ஜெட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய நிதித் துறை செயலர், ‘பெருநிறுவனங்கள் உற்பத்திக்கு ரோபோக்களைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஆள்களைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்’ என்று கூறியது ஜனசங்கத்தின் பழைய தேர்தல் அறிக்கையை நினைவுபடுத்தியது).
- பொருளாதார தாராளமயக் கொள்கையிலிருந்து பாஜக விலகுகிறது என்று சமீபத்தில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதன் பழைய தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது நமக்கு வியப்பு ஏற்படவில்லை.
காங்கிரஸுக்கு பதிலடிதான்
- மேலும் 1950கள், 1960கள், 1970கள், 1980கள் என்று எல்லா பத்தாண்டுகளிலும் பாரதிய ஜனசங்கம் அல்லது பாரதிய ஜனதா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளானது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளுக்கு பதில் தருவதைப் போலத்தான் பெரும்பாலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அவர்களுக்கு அந்தக் கொள்கைகளில் பிடிப்பும் நம்பிக்கையும் இருந்ததா என்று தெரியவில்லை.
- தேசிய அளவில் ஓரிரு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்ததல்லாமல், நாடு முழுவதுமே கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகள் சதவீதம் ஒற்றை இலக்கமாகவும் தொடர்ந்ததால், மிகவும் தீவிரமான வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க வேண்டும், அதை விடாமல் எல்லா துறைகளிலும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கட்சிக்கு ஏற்பட்டிருக்கவில்லை. எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வரப்போவதில்லை, எனவே எதையாவது சொல்லி வைப்போம் என்பதைப் போல பொருளாதாரம் தொடர்பான அம்சங்கள் இருந்துள்ளன.
- இப்போது பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஆட்சிக்கு வந்துள்ளது. பல மாநிலங்களிலும் கட்சி ஆட்சிசெய்கிறது. இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. எனவே, கட்சிக்கு வலிமையான, தொடர்ச்சியான பொருளாதாரச் சிந்தனையும் திட்டமும் இருக்கும் என்று மக்களில் பலர் நினைக்கின்றனர். அப்படியெல்லாம் கட்சிக்கு எதுவும் கிடையாது. அப்படி ஏதாவது இருக்கிறது என்று கட்சி ஆதரவாளரோ, வாக்காளரோ நினைத்துக்கொண்டிருந்தால் - அது தலைமையின் தவறு அல்லவே!
நன்றி: அருஞ்சொல் (04 – 08 – 2024)