TNPSC Thervupettagam

பட்டம் உண்டு - சட்டம் தெரியாது

March 5 , 2024 140 days 107 0
  • அதிா்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அடைகிறீா்கள் என்றால் எதிா்பாராத நேரத்தில், எதிா்பாராத இடத்தில், எதிா்பாராத ஒரு விஷயத்தால் நீங்கள் தாக்கப்பட்டு இருக்கிறீா்கள் என்று அா்த்தம். இந்த அனுபவம் சில வாரங்களுக்கு முன்னால் எனக்கு சென்னையில் கிட்டியது.
  • சென்னைக்கு தனது மகளுடன் வந்த மகனை சந்தித்து, பேத்தியுடன் சில நேரம் செலவிடலாம் என நினைத்தபோது, மதுரையில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த தொலைபேசி அழைப்பால் வந்த அனுபவம்தான் எனக்கு அதிா்ச்சியையும், ஆச்சரியத்தையும், துக்கத்தையும் தந்தது. விஷயம் இதுதான். சில புத்திசாலியான இளம் வழக்குரைஞா் நண்பா்கள் மெத்த பொறுப்புணா்வோடு ஆரம்பநிலை நீதிபதி பதவிகளுக்கான (முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி) தோ்வுகளுக்கு வகுப்புகள் நடத்தினாா்கள். அதில் 200 போ் தோ்ச்சி அடைந்ததாகவும், அவா்கள் இறுதி நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ளும் முன், அவா்களை சமநிலைப்படுத்தவும், படபடப்பை நீக்கவும் ஒரு மாதிரி நோ்முகத் தோ்வு நடத்த இருப்பதாக சொன்னாா்கள்.
  • அதில் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா்கள் கே.என்.பாஷா, துரைசாமி, புஷ்பா சத்யநாராயணா மற்றும் தாரணி ஆகியோா் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்படுவதாகவும், அதில் நீதியரசா் பாஷாவுடனும், வழக்குரைஞா் சகோதரி ராஜேஸ்வரி காா்த்திகேயனுடனும் கலந்து கொண்டு நானும் போட்டியாளா்களை நோ்காண முடியுமா என்றது தொலைபேசி அழைப்பு.
  • 50 ஆண்டு வழக்குரைஞா் அனுபவத்துக்குப் பிறகு ஓய்வு பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் நான், எதிா்கால நீதிபதிகளை சந்திக்கலாம் என்ற அவாவுடன் பேத்தியை பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு அண்ணா நகா் விரைந்தேன். 1971-1974-இல் நான் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய வகுப்பில் 10 மாணவிகள் மட்டுமே இருந்தனா். கடந்த 50 ஆண்டுகளில் சட்டத் துறை மீது பெண்களுக்கு ஏற்பட்ட வசீகரத்தால் முழுவதும் பெண்கள் அடங்கிய சட்ட வகுப்பு என்றாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் பெண்களுக்கான சட்டக் கல்லூரி அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலும், மதுரையிலும், புதுவையிலும் மட்டும்தான் அரசு சட்டக் கல்லூரிகள் இருந்தன; 1979-இல் திருச்சியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னா், சேலத்தில் ஒரு தனியாா் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இன்றைய நிலை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல்லூரி இருக்கிறது. அப்போது, 3 ஆண்டுகள் படித்து இளங்கலை பட்டம் பெற்ற பின்தான், சட்டக் கல்லூரியில் சோ்ந்து 3 ஆண்டுகள் சட்டம் படிக்க வேண்டும். இன்றுபோல் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பு அப்போது வரவில்லை.
  • ஆண்டுக்கு ரூ.300 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ. 900 மட்டுமே கல்லூரி கட்டணம். இன்றைய நிலை என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் தற்போது ஆரம்பித்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனின் கல்விக் கட்டணம் ரூ.1,50,000 என்றால் ஹரியாணாவில் உள்ள ஜிண்டால் சட்டக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் ரூ. 6.5 லட்சம்.
  • எங்களுடைய லாயத்திலிருந்து பின்னாளில் மூன்று, நான்கு குதிரைகள் நீதிபதி பதவி ஓட்டத்துக்கு தயாராக இருப்பதால் இன்றைய வெற்றிக் குதிரைகளை சந்திக்கும் ஆா்வத்தில் நோ்முகப் பேட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தேன். நீதிபதி கனவுடன் மாதிரி பேட்டிக்கு வந்த அந்த இளம் வழக்குரைஞா்கள் எனக்கு அதிா்ச்சியையும்,ஆச்சரியத்தையும் கொடுத்தாா்கள்.
  • சரி பாதி பெண்கள் மாதிரி நோ்முகத் தோ்வுக்கு வந்திருந்தாா்கள். ஆண்களைவிட கேள்வி பதிலில் பெண்கள் அசத்தினாா்கள். தோ்வில் படித்ததை அபார நினைவாற்றலுடன், எழுத்தில் வடித்து, தோ்வு பெற்ற வெற்றியாளா்கள், சிறிய கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறியது பரிதாபம். இதில் பெண்கள் விதிவிலக்காக இருந்தாா்கள். தனியாா் சட்டக் கல்லூரியில் படித்த மாணவா்களை விட, சென்னை சீா்மிகு சட்டக் கல்லூரியில் படித்த மாணவிகள் தரம் கூடுதலாகவும், சிறப்பாகவும் பதிலளித்தாா்கள் என்பது உண்மை.
  • பேட்டியின்போது, மாணவா்களைவிட, மாணவிகளுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமிருந்தது. ஆனால், அதிக கட்டணம் செலுத்தி தனியாா் சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு இரண்டாண்டுகள் மழைக்குக்கூட நீதிமன்றம் ஒதுங்காமல், படித்து, தோ்ச்சியடைந்து மாதிரி நோ்முகத் தோ்வுக்கு வந்திருந்த அந்த புத்தகப் புழுக்களின் நிலை கண்டு பரிதாபப்பட்டேன்.
  • இதற்கு அடிப்படைக் காரணம் உச்சநீதிமன்றம் என்றால் நீங்கள் நம்புவீா்களா! 1993-இல் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு வழங்கிய சீராய்வு மனு தீா்ப்பில் முதல்நிலை நீதிபதிகள் சட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றது. இதற்கு மாறாக 2002-இல் அதே உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு வழங்கிய தீா்ப்பில், முதல்நிலை நீதிபதிகள் பணிக்கு சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றால் மட்டுமே போதும் என்றும், வழக்குரைஞா் தொழிலில் அனுபவம் தேவை இல்லை என்றும் தீா்ப்பளித்தது.
  • என்னுடைய பாா்வையில், இந்த இரண்டாவது தீா்ப்பு நீதித் துறையின் செயல்பாட்டின் அடிப்படையில் தவறானது. காரணம், மூன்று நீதிபதிகள் வழங்கிய தீா்ப்பில் இருந்து மாறுபட்ட தீா்ப்பை வழங்குவதற்கு, மற்றொரு மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு அதிகாரமில்லை என்பதுதான் நீதித் துறை காலம் காலமாக கடைப்பிடித்துவரும் ஒழுக்கம். அது இந்தத் தீா்ப்பில் மீறப்பட்டுள்ளது என்பது வருத்தமான செய்தி.
  • இதைவிட முக்கியம் அந்த வழக்கின் நோக்கமும், தன்மையும் வேறு. அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நீதித் துறையை மாற்றான்தாய் பிள்ளை மனப்பான்மையுடன்தான் நடத்துகிறாா்கள். ஒரு நல்ல, நோ்மையான நீதித் துறை அடாவடி அரசியல்வாதிகளுக்கும், அக்கிரமம் செய்யும் அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
  • எனவே, அவா்கள் நீதித் துறையை மறைமுகமாக மதிப்பதில்லை. நீதித் துறை பணத்துக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் மற்றும் வசதிகளுக்காகவும் அரசையும், அரசு அதிகாரியையும் பாா்த்து கையேந்தி நிற்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அவா்களுக்கு பணி அதிகம், சம்பளம் குறைவு. இந்த நிலையை மாற்றத்தான் அகில இந்திய நீதிபதி சாா்பான வழக்குத் தீா்ப்பும், அதை மறுபரிசீலனை செய்யப் போட்ட வழக்குத் தீா்ப்பும் நீதித் துறையின் மதிப்பிற்கும், மரியாதைக்கும், மாண்புக்கும் கட்டியம் கூறின. அதில் சட்டம் படித்த பின் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணிபுரிந்த பின்னரே, ஆரம்பநிலை நீதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெளிவுபடுத்தியிருந்தது.
  • 2002-ஆம் ஆண்டு வந்த தீா்ப்பில்தான், உச்சநீதிமன்றம், முதல்நிலை நீதிபதிகள் பதவிக்கு மூன்று ஆண்டு வழக்குரைஞா் பயிற்சி தேவையில்லை என்றும், சட்டப் படிப்பு முடித்திருந்தாலே, யாா் வேண்டுமானாலும் நீதிபதியாக விண்ணப்பம் செய்யலாம் என்கிற தீா்ப்பை வழங்கியது. அந்த வழக்கின் தீா்ப்பில் நீதிபதியின் சம்பளம், அவா்களுக்கு செய்து தரப்பட வேண்டிய வசதி வாய்ப்புகள் என ‘ஷெட்டி ஆணையத்தின்’ பரிந்துரையின் அடிப்படையில் பிரச்னையை அலசிக் கொண்டிருந்தபோது, சட்டக் கல்லூரி முடித்து நேரடியாக நீதிபதியாக செல்லலாம் என்கிற தீா்ப்பையும் வழங்கியது.
  • தனியாா் கல்லூரியில் சட்டம் படித்து முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் கூட பிரச்னையில்லை; அடிப்படை சட்டமே தெரியவில்லை என்பதுதான் அதிா்ச்சியாக இருந்தது. ஆச்சரியத்தின் காரணம் அடிப்படை சட்ட அறிவே இல்லாமல், இவா்கள் நீதிபதியாகலாம் என்று எந்த தைரியத்தில் தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்று நோ்காணலுக்கு வருகிறாா்கள் ? கடந்த சில ஆண்டுகளாக உயா் நீதிமன்றத்தால் மாவட்ட நீதிபதிகளுக்கான தோ்வு முறையாகவும், செம்மையாகவும் நடத்தப்படுகிறது. தோ்வில் வெற்றி பெறுபவா் பலா்; ஆனால் நோ்முகத் தோ்வில் தோ்பவா் சிலரே.
  • சட்டமும், மருத்துவமும் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கிலத்தில் புலமை பெற்றவா்கள் சிறந்த சட்ட வல்லுநராகவோ, மருத்துவராகவோ முடியாது. இந்த இரண்டு தொழிலுக்கும் கடுமையான பயிற்சியும், பயிற்சி மூலம் வரும் அனுபவமும் தேவை. ஒரு வழக்குரைஞரை மூத்த வழக்குரைஞராக்க சில அடிப்படைக் காரணிகள் வேண்டுமெனும்போது, ஒரு வழக்குரைஞரை நீதிபதியாக்க எந்தக் காரணியும் தேவை இல்லை என்பது நகை முரண்.
  • இவா்கள் அனைவருக்கும் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பழமொழி புரியவில்லை. ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஒரு தோ்வாளரைக் கேள்வி கேட்டபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றம் செல்லாமல் தோ்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பதாக சொல்லி எனக்கு பகீா் கிளப்பினாா்.
  • இவா்களில் சீா்மிகு சட்டக் கல்லூரி மாணவிகள் சிறிது ஆறுதல் தந்தாா்கள். நீதித் துறை, மத்திய அரசு, மாநிலம் மற்றும் இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து சட்டக் கல்வியை உடனடியாக சீா்திருத்தாவிட்டால் எதிா்கால நீதித் துறையைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றி: தினமணி (05 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்