TNPSC Thervupettagam

பட்டிகள் அல்ல பெண்கள் விடுதிகள்!

September 18 , 2024 119 days 123 0

பட்டிகள் அல்ல பெண்கள் விடுதிகள்!

  • மதுரையில் உள்ள தனியார் மகளிர் விடுதி ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.
  • பணி நிமித்தமாகவும், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சிபெறவும் வெளியூர்களுக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் மகளிர் விடுதிகளை நம்பியே இருக்கிறார்கள். அரசு சார்பில் தற்போது ‘தோழி’ விடுதிகள் சில மாவட்டங்களில் செயல்பட்டுவந்தாலும், அவை போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் தனியார் விடுதிகளையே பெண்கள் நம்பியிருக்கிறார்கள்.
  • பெண்களின் தேவையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிலர், பொருளீட்டுவதை மட்டுமே கருத்தில்கொண்டு முற்றிலும் வணிக நோக்கில் விடுதிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுதான் மதுரையில் நிகழ்ந்திருக்கும் இந்த கோரச் சம்பவம். விதிமீறல்களின் விளைவாகத்தான் விபத்துகள் நேர்கின்றன என்பது பாலபாடம். எனினும், அதைப் பற்றித் துளியும் அக்கறை இல்லாமல் விடுதிகள் நடத்தப்படுவதன் சாட்சியமாகவும் இந்த நிகழ்வைக் கருதலாம்.
  • மதுரையில் மிகக் குறுகலான சாலையில் வணிகக் கட்டிடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் விடுதி அது. தீ விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து தப்பித்து வெளியேறக்கூட முடியாத அளவுக்கு அந்த விடுதியின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடம் பாழடைந்துவிட்டதால் அதை இடிக்கும்படி மாநகராட்சி சார்பில் 2023 அக்டோபர் மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. அதற்குக் கட்டிட உரிமையாளர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றிருந்த நிலையில்தான், இந்தத் தீ விபத்து மூன்று பெண்களைப் பலி வாங்கியிருக்கிறது.
  • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மகளிர் விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் எத்தனை விடுதிகள் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன என்பது கேள்விக்குறியே. முறையான உரிமம் இன்றிப் பெண்களுக்கான விடுதிகள் நடத்தப்படக் கூடாது என அரசு அறிவித்திருக்கிறது.
  • தமிழ்நாடு பெண்கள் - குழந்தைகளுக்கான விடுதிகள் - தங்கும் இல்லங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014 இன்படி, அரசின் உரிமம் இன்றிப் பெண்களுக்கான விடுதிகளை நடத்துபவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சம் இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். விடுதிகளை நடத்துவதற்குரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கும் அரசுக்கு உரிமை உண்டு.
  • விடுதி அறைகள் காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்தவையாக இருக்க வேண்டும், அவசரக் காலத்திலும் எதிர்பாராத விபத்துகளின்போதும் வெளியேறுவதற்கான பாதைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், தீயணைக்கும் கருவி செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.
  • தவிர, பெண்களின் பாதுகாப்புக்காக நுழைவாயிலிலும் வெளியேறும் இடத்திலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதோடு 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் காவல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்கிற அரசின் விதிகளை எல்லாம் பெரும்பாலான விடுதி உரிமையாளர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டுக் கால்நடைகளை அடைத்துவைக்கும் பட்டிகளைப் போல் விடுதிகளை நடத்திவருகிறார்கள்.
  • பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களே சொந்த ஊரைவிட்டு வெளியூரில் உள்ள விடுதிகளில் தங்குகிறார்கள். மேம்பட்ட வசதிகள் கொண்ட விடுதிகளில் விடுதிக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அவற்றை அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியாது. குறைந்த கட்டணம் என்பதற்காக நெரிசலான விடுதிகளில் சுகாதாரமற்ற சூழலில் தங்குகின்றனர்.
  • இதைத் தவிர்க்க அரசு அதிக எண்ணிக்கையில் விடுதிகளை அமைக்க வேண்டும். வரைமுறையின்றிச் செயல்படும் மகளிர் விடுதிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான கொடூரச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்