- குடும்ப அட்டைதாரர்களில் உறுப்பினர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்களை விலையின்றிப் வழங்கும் ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் மார்ச் 2022 வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டுவரும் உணவு தானியங்களுடன் கூடுதலாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
- இத்திட்டத்தால் 80 கோடிக்கும் மேலானவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 2020-ல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- தொடர்ந்து அவ்வப்போது அதன் கால அளவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. கரோனா காரணமான வேலையிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கால நீட்டிப்பு கோடிக்கணக்கானவர்களைப் பட்டினியிலிருந்து பாதுகாக்கும்.
- கரீப் கல்யாண் திட்டத்தை நீட்டித்திருப்பதால், மத்திய அரசுக்கு ரூ.53,345 கோடி கூடுதலாகச் செலவாகும். இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.2.6 லட்சம் கோடியை எட்டும்.
- ஏற்கெனவே, இத்திட்டத்தின் கீழ் 600 லட்சம் டன் உணவு தானியங்கள் விலையின்றி விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு மாதங்களில் மேலும் 163 லட்சம் டன் உணவு தானியங்கள் விலையின்றி பயனாளிகளைச் சென்றடையும்.
- பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, மூன்று மாதங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தை மேலும் நீட்டிப்பதில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்புகிறது என்றும் திறந்தநிலை சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்தின் உபரி இருப்பு விற்பனை திருப்திகரமாக இருப்பதால், கரீப் கல்யாண் திட்டத்தைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் மத்திய உணவுத் துறைச் செயலர் சுதான்சு பாண்டே விளக்கம் அளித்தார்.
- உணவுத் துறைச் செயலரின் விளக்கத்தை அடுத்து, இத்திட்டத்தைத் தொடர வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
- இத்திட்டம் ஆறு மாதங்களுக்கேனும் நீட்டிக்கப்பட வேண்டியது அவசியம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சௌகத் ராய் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
- எட்டு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
- உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னிச்சையாகவே இத்திட்டத்தை 2022 மார்ச் வரையிலும் நீட்டித்துவிட்டார்.
- கரோனாவின் பொருளாதாரத் தாக்கம் முழுவதுமாக நீங்கும்வரையில், உணவு தானியங்களை விலையின்றித் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று உணவுக்கான உரிமைச் செயல்பாட்டாளர்களும் கோருகின்றனர்.
- உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்த இடத்தை ஆட்சேபித்த மத்திய அரசு, கரீப் கல்யாண் திட்டத்தையே அதற்கான பதிலாகச் சொன்னது.
- இந்நிலையில், அத்திட்டத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்க முடியாத நிலையில், பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதே அரசின் பெரும் பொறுப்பு.
நன்றி: இந்து தமிழ் திசை (03 - 12 - 2021)