TNPSC Thervupettagam

பட்ட மரமும் கண்ணில் படாத கதையும்

September 28 , 2024 109 days 116 0

பட்ட மரமும் கண்ணில் படாத கதையும்

  • எங்கள் கல்லூரி வளாகத்தின் உணவகத்துக்கு எதிரே இருந்த வெட்டவெளியில், சுமார் 15 அடி உயரத்தில் 4-5 கிளைகளுடன் உரிந்து விழும் பட்டையுடன் தனியாக நின்றிருந்தது அந்தப் பட்டுப்போன மரம். நான் அங்கிருந்த ஒன்றரை ஆண்டில் அதில் துளிர் விட்டுப் பார்த்ததேயில்லை.
  • அந்தப் பட்ட மரம் எவ்வளவு காலம் அங்கு இருந்திருக்கும்? எப்போது இறந்திருக்கும்? எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், தோழர்களுடனான அந்திமாலை அரட்டைகளிலும், தேநீருடன் தென்றல் வருடும் அமைதியான காலை வேளைகளிலும் அந்த மரத்தை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.
  • அந்தப் பட்ட மரத்திற்குக்கூட வழக்கமாக வரும் விருந்தினர்கள் பலர் இருந்தனர். நாள்தோறும் சாயங்கால வேளைகளில், சொல்லிவைத்ததுபோல் ஒரு சிறிய மரங்கொத்தி (Brown-capped pygmy woodpecker) அங்கு வந்துவிடும். எண்ணெய் தேய்த்துச் சீவியது போன்ற பழுப்புத் தலையும், கண்களுக்கு மேலே வெள்ளைப் புருவமும், உளி போன்ற சிறிய அலகும், கரிய உடலின் மேலே வெண் புள்ளிகளையும் அது கொண்டிருக்கும். நம் அனைவரையும் விஞ்சிடும் கடமை உணர்வுடனும், மிகுந்த கவனத்துடன் நாள்தோறும் அந்த மரத்தைக் கொத்தியபடி மேலும் கீழும் நகரும்.
  • இதைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே, பூச்சிகளையும் மரப் பொந்துகளையும் தேடிவரும் பட்டாணிக்குருவி (Cinereous tit) இணை ஒன்று அங்கு வரும். தம் கூட்டாளிகளோடு அந்த மரக் கிளைகளில் வரிசையாகக் காக்கைகள் கரைந்து கொண்டிருக்கும், சில வேளைகளில் இரையைப் பிடிப்பதற்காக ஒரு வல்லூறு (shikra) கவனத்துடன் அமர்ந்திருக்கும். ஒரு நாள் பௌர்ணமி நிலவின் பின்னணியில் அந்த மரத்தைப் பார்த்தபோது, அம்மரக்கிளையில் ஓர் ஆந்தை அமர்ந்திருந்த காட்சி கொள்ளை அழகு.
  • எனக்குத் தெரிந்தது இந்த ஒரு பட்ட மரம் மட்டுமே. இதைப் போல இன்னும் கண்ணில் படாத பல நூறு பட்ட மரங்களும் இந்த உலகில் உண்டு. இது போன்ற பட்ட மரங்கள் பல உயிரினங்களுக்கு ஆற்றும் சேவையை அறிந்தால், அது நம்மை வியக்க வைக்கும்.

உணவும் உறைவிடமும்:

  • பள்ளிப் பாடங்களில் உணவுச் சங்கிலியைப் (Food Chain) பற்றிப் படித்திருப்போம். பொதுவாகப் புல், ஒரு மான் (தாவரவுண்ணி), அதை உணவாகக் கொள்ளும் புலி (ஊனுண்ணி), அது இறந்தவுடன் அவற்றை மட்கச் செய்யும் பூஞ்சைகள் (சிதைப்புயிரிகள்) என விளக்கப்பட்டிருக்கும். ஆனால், பட்ட மரங்களில் உள்ள இறந்த திசுக்களைத் தொடக்கமாகக் கொண்ட உணவு சங்கிலியும் உண்டு.
  • ஆம்! பட்ட மரம், கீழே விழுந்த அதன் கிளைகள் யாவும் அழகிய பூஞ்சைகள் வளரும் இடமாகவும், இறந்த மரத்திசுக்களை உண்ணும் மரப்பேன் (woodlouse) முதலான பூச்சிகளின் வாழிடமாகவும், வண்டுகள் முட்டையிட வரும் இடமாகவும், இந்தப் பூச்சிகளை எல்லாம் உண்ணவரும் பல வகையான பறவைகளின் இடமாகவும் உள்ளது. பட்ட மரத்தைச் சுற்றியும் ஓர் உணவுச் சங்கிலி பின்னிப்பிணைந்துள்ளது.
  • மேலும் மரப்பட்டைகளுக்கு அடியில் பதுங்கி வாழும் நத்தை போன்ற மெல்லுடலிகள் (molluscs), தவளைகள், தேரைகள், ஓட்டைகளுள் வாழும் குளவி, சிறிய ஊர்வன வகைகள், ஏன்... கிளி, குக்குறுவான், ஆந்தை போன்ற பறவைகளுக்கும் பட்ட மரங்கள் வசிப்பிடமாகின்றன. ஒரு பட்ட மரத்தைச் சார்ந்து இப்படி ஓர் உயிர்ப்பான சமூகம் இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இது உயிரினப் பன்மைக்கு இன்றியமையாதது.
  • சராசரியாக இருபத்து ஐந்து சதவீதக் காட்டுயிரினங்கள் தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் பட்ட மரங்களைச் சார்ந்துள்ளன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காட்டுப்பகுதியில் பூச்சிகளும் பூஞ்சைகளும் செழிப்புடன் இருக்க வேண்டுமானால் அங்கே குறிப்பிட்ட அளவு பட்ட மரங்கள் இருந்தே ஆகவேண்டும். பூச்சிகளும் பூஞ்சைகளும் நம் உயிர்ச்சூழலில் ஒரு முக்கியமான அங்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வளமும் வடிவமைப்பும்:

  • ஒரு மரம் தனது வாழ்நாளில், சுற்றுச்சூழலில் இருந்து கரியமில வாயுவையும், மண்ணில் இருந்து பல வகைக் கனிமங்களையும் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் இவை கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற பிற கனிமங்களின் சேமிப்புக் கிடங்குகளாகத் திகழ்கின்றன.
  • அந்த மரம் இறந்தவுடன் கீழே விழுந்து உளுத்துப்போகிறது. இதற்குப் பூஞ்சைகள், பாக்டீரியா போன்ற பல நுண்ணுயிரிகளும் பங்களிக்கின்றன. இவை மரத்தில் உள்ள செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், லிக்னின் போன்ற கரிமச் சத்துகளைச் சிதைக்கின்றன. இதனால் இச்சத்துகள் மண்ணிற்கும் வளிமண்டலத்திற்கும் மீண்டும் சென்றுசேர்கின்றன. இது உரமாக மண்ணிற்கு வளம் சேர்ப்பதோடு கரிம சுழற்சியில் (Carbon Cycle) முக்கியப் பங்கும் வகுக்கிறது.
  • இந்த மட்கும் மரங்களில் உள்ள ஈரப்பதமும் சரியான வெப்பநிலையும் அவை இருக்கும் இடத்தைச் சுற்றி எதிர்பாராவிதமாக வந்து விழும் விதைகள் நிலைத்து வளரும் வளமான இடமாகவும் மாற்றுகின்றன. கடுங்குளிர் நிலவும் துருவப்பகுதிகளில் உள்ள காடுகளில் புதிய செடிகளின் வளர்ச்சிக்குப்பட்ட மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
  • மேலும், காட்டுத் தரையில் விழும் மரங்கள் சிறிய ஓடைகளின் பாதைகளை மாற்றுவதோடு, மண் அரிப்பையும் குறைக்கின்றன. முக்கியமாக அலையாத்திக் காடுகளில் நீரோட்டத்தைத் தாமதப்படுத்தியும் தடுத்தும், மிதந்து வரும் விதைகள் வளரவும் உதவுகின்றன. பல வகையான வாழிடங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் பட்ட மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேலாண்மை:

  • காட்டைப் பராமரிப்பது வெறும் வணிக நோக்கத்திற்காகவே என்கிற புரிதலற்ற பார்வை பல காலமாக இருந்துவருகிறது. அதனால் பட்ட மரங்கள் காட்டில் இருப்பது சரியாகப் பராமரிக்கப்படாததன் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. பட்ட மரங்களின் பூச்சிகள் நோயைப் பரப்புவதாகவும், காட்டுத்தீ பரவும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் தவறாகக் கருதப்பட்டது.
  • ஆனால், தற்போது இயற்கையான சூழலில் பட்டுப்போன மரங்களின் அவசியத்தை உணர்ந்து மரங்களையும், உயிரினங்களையும் கணக்கெடுப்பு செய்வதுபோல, பட்ட மரங்களின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. பட்டுப்போன மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது அதிகமாகி இருந்தாலும், இது குறித்த ஆராய்ச்சிகள் இந்தியாவில் மிகக் குறைவே.
  • காடுகளில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், நகரத்தில் உள்ள பூங்காக்களிலும், மைதானங்களிலும் பட்ட மரங்களை நாம் கண்டிருக்கலாம். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. நகரமயமாதல் என்பது தவிர்க்க முடியாத இன்றைய காலக்கட்டத்திலும்கூட பிற உயிர்களுடன் நமது வாழ்விடத்தைப் பகிர்ந்து வாழ நாம் பழகிக் கொள்ளவேண்டும். பட்டுப்போன மரங்களின் அவசியத்தை உணர்ந்து, மக்களின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்காமல், முறையான நகர வடிவமைப்பில் அவற்றுக்கும் இடம் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • இனிமேல் உங்களைச் சுற்றி இருக்கும் பட்டுப்போன மரங்களைச் சற்றே உற்றுநோக்குங்கள். இறந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் அதிசயத்தைக் காண்பீர்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்