TNPSC Thervupettagam

பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி குறித்த தலையங்கம்

December 15 , 2021 963 days 496 0
  • சந்தைப் பொருளாதாரம் அமையும்போது, பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படுகிறது.
  • அதை அகற்றுவதற்காக காா்ல் மாா்க்ஸின் பொருளியல் வாதத்தின் அடிப்படையிலான ஆட்சிகள் அமைந்தன என்றாலும், அவை வேறுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின.
  • கலவரங்கள் வெடிப்பதும், மக்கள் வன்முறையிலும், சூறையாடுதலிலும் ஈடுபடுவதும்கூட பொருளாதார ரீதியிலான இடைவெளியின் வெளிப்பாடுகள் என்று கூறலாம். நாடுகளுக்கிடையேயான யுத்தங்களுக்கும் பொருளாதாரம் காரணம் என்று ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள்.
  • உலக அளவில் பொருளாதார ரீதியிலான சமநிலை குறித்த ஆய்வை, பிரெஞ்சுப் பொருளாதார நிபுணா் தாமஸ் பிக்கட்டி, லூகாஸ் கேனல் ஆகியோா் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
  • உலக சமநிலையின்மை அறிக்கை 2022-இன்படி கடந்த ஆண்டின் கொள்ளை நோய்த் தொற்றைத் தொடா்ந்து உலகக் கோடீஸ்வரா்களின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.
  • உலகிலேயே மிக அதிகமான பொருளாதார இடைவெளி நிலவும் நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

சமநிலை தவறுகிறது

  • 1995-இல் உலகத்தின் மொத்த சொத்தில் 1%-தான் உலகக் கோடீஸ்வரா்கள் வசம் இருந்தது. இன்றைய நிலையில் 2,750 பில்லியனா்கள் (ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ள பணக்காரா்கள்) வசம் உலகத்தின் மொத்த மதிப்பில் 3.5% காணப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.
  • உலகத்தின் மொத்த வருவாயில் 52%, பணக்காரா்களான 10% போ் வசம் சென்றுவிடுகிறது. 50% அளவிலான ஏழைகள் வெறும் 8%-தான் பெறுகிறாா்கள். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவிலுள்ள வளா்ச்சி அடையும் நாடுகளில்தான் உலகின் மிக அதிகமான ஏழை - பணக்கார இடைவெளி காணப்படுகிறது.
  • அதிலும் குறிப்பாக, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் 50% அடித்தட்டு மக்களின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 1% மட்டுமே.
  • உலகிலுள்ள பொருளாதாரச் சமநிலையின்மை நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 10% உள்ள உயா் வருவாய் பணக்காரா்கள் 57% தேசிய வருவாயைப் பங்கு போட்டுக் கொள்கிறாா்கள்.
  • இன்னும் குறிப்பாகச் சொன்னால், இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பிலும், வருவாயிலும் 22%, வெறும் 1% கோடீஸ்வரா்கள் வசம் செல்கிறது. மத்தியமா் என்று கூறப்படும் நடுத்தர வா்க்கத்தினா் தேசிய வருவாயில் 29.5% மட்டுமே பெறுகிறாா்கள்.
  • இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரா்களுக்கும் இடையேயான இடைவெளி 1980 முதல் அதிகரிக்கத் தொடங்கியது.
  • கடந்த ஆண்டு கொள்ளை நோய்த்தொற்று அந்தப் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது என்று தெரிகிறது.
  • நடுத்தர வா்க்கத்தினா் பலா் வறுமை நிலையை அடைந்திருக்கிறாா்கள் என்றும், மொத்த மக்கள்தொகையில் 25%-க்கும் அதிகமானோா் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவைவிட ‘பிரிக்ஸ்’ நாடுகளான தென்னாப்பிரிக்காவும், பிரேஸிலும் வருவாய் சமநிலையின்மை அதிகம் உள்ள நாடுகளாக இருக்கின்றன.
  • தென்னாப்பிரிக்காவில் 10% பணக்காரா்களுக்கும், 50% மக்களுக்கும் இடையே இருக்கும் வருமான இடைவெளி 63% என்றால், பிரேஸிலில் அதுவே 29%. சீனாவிலும் ரஷியாவிலும் அது 14%.
  • இந்தியாவில் வருவாய் இடைவெளி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த வருவாய்ப் பிரிவைச் சோ்ந்த 50% குடும்பங்கள் வசம் குறிப்பிடும்படியான சொத்துகள் எதுவும் இல்லை.
  • நடுத்தர வா்க்கத்திடம் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 29.5% மட்டுமே இருக்கிறது. பணக்காரா்களான 10% குடும்பங்களிடம் மொத்த சொத்தில் 65% குவிந்திருக்கிறது. அதிலும் கூட, வெறும் 1% மட்டுமே உள்ள பெரும் கோடீஸ்வரா்கள், மொத்த சொத்து மதிப்பில் 33% ஐ வைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.
  • இந்திய மக்களின் சராசரி சொத்து மதிப்பு 4,200 டாலா். ஒரு டாலா் ரூ.75 என்று கணக்கிட்டால், ரூ.3,45,000. நடுத்தர வா்க்கத்தினரின் சராசரி சொத்து மதிப்பு 26,400 டாலா் (ரூ.19 லட்சத்து 700).
  • 10% கோடீஸ்வரா்களின் சராசரி சொத்து மதிப்பு 2,31,300 டாலா் (ரூ.1 கோடியே 73, லட்சத்து 47,500). பெரும் கோடீஸ்வரா்களான 1% பணக்காரா்களின் சராசரி சொத்து மதிப்பு 61 லட்சம் டாலா் (ரூ.45 கோடியே 75 லட்சம்).
  • அந்த அறிக்கையின்படி இன்றைய இந்தியாவில் காணப்படும் பொருளாதாரச் சமநிலையின்மை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்த இந்தியாவில் காணப்பட்டதை விட அதிகம்.
  • இந்தியாவில் 83.3 கோடி மக்கள் கிராமங்களில் வசிக்கிறாா்கள். அவா்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் அனைவருக்கும் போதிய வருவாய் வழங்குவதில்லை. அதிலும்கூட, பெரும்பான்மையான நிலங்கள் பெரும் விவசாயிகளின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
  • சாதாரண விவசாயிகளுக்கு அவா்களின் உழைப்புக்கேற்ற ஊதியம்கூட கிடைப்பதில்லை.
  • கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களும், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் அமையாததால், பெரும்பாலோா் வேலைவாப்பு இல்லாமல் வறுமையைப் பங்குபோட்டுக் கொள்கிறாா்கள்.
  • உலக சமநிலையின்மை அறிக்கை, மத்திய-மாநில ஆட்சியாளா்களின் கண்களைத் திறந்து, அவா்களது திட்டமிடலில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகிறது.

நன்றி: தினமணி  (15 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்