TNPSC Thervupettagam

பணநாயகம் வலுவிழக்க...

May 23 , 2019 2013 days 1036 0
  • தேர்தல் என்றாலே வேட்பாளர், வாக்காளர், பிரசாரம், தேர்தல் ஆணையம் என்பது அல்ல. இவற்றைத் தாண்டி அரசு அலுவலர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என்று பல நிலைகளில் பலரது பங்களிப்பு உள்ளது.
தேர்தல் 
  • தேர்தல் என்னும் முக்கோணத்தில் மூன்று முனைகள் - வேட்பாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் ஆகியவை அமைந்துள்ளன. இந்தியாவில் 17-ஆவது மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், பலரது பொறுப்புகள், கடமைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
  • முதலில் வேட்பாளர்களை எடுத்துக் கொள்வோம். அனைத்துப் பெரிய கட்சிகளும் வேறுபாடின்றி வாரிசுகளையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும், கட்சிப் பணியாற்றிய அனுபவசாலிகளையும் ஓரங்கட்டிவிட்டு, மகள், மகன், மருமகன், மருமகள், சகோதரி, சகோதரர்  என்று குடும்ப உறுப்பினர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
  • ஒரு சமயத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற ஒரு நல்ல குறிக்கோளை ஆம் ஆத்மி கட்சி முன்வைத்தது. அதுபோல் வேறு எந்தக் கட்சியும் கூறவில்லை. பல வேட்பாளர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும், அந்த வேட்பாளர்களையே அக்கட்சிகள் துணிவாக நிறுத்தியிருக்கின்றன என்றால் மக்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற  ஆணவம்தானே காரணம்? சென்ற தேர்தலுக்குப் பின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
  • எனினும், அதே வேட்பாளர்களையே மீண்டும் அக்கட்சிகள் முன்னிறுத்தியிருக்கின்றன என்றால், மக்களின் கருத்துகளையோ, உணர்வுகளையோ கட்சிகள் சற்றும் மதிக்கவில்லை என்றல்லவா ஆகிறது?
  • வேட்பாளர்களின் கல்வித் தகுதியை எடுத்துக் கொண்டால் இந்த முறை பலரும் படித்தவர்களாகவே இருப்பது சற்றே ஆறுதலான விஷயம். பெண்களுக்கு 33%  ஒதுக்குவோம் என்று மார்தட்டிக்கொண்ட எந்தக் கட்சியும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.
  • பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வேட்பாளர்கள் யாரும், நாங்கள் இன்னின்ன நல்லதைச் செய்தோம். அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை.
வாக்கு கேட்பது
  • நல்லது ஏதாவது செய்திருந்தால்தானே அப்படிக் கேட்க முடியும்? அடுத்த கட்சியினரின் குறைகளைச் சுட்டிக்காட்டி வாக்கு கேட்கிறார்களே ஒழிய, தாங்கள் செய்த நல்ல செயல்களைக் குறிப்பிட்டு வாக்கு கேட்கும் நிலையில் எந்த வேட்பாளரும் இல்லை.
  • திரைத் துறையிலிருந்து பல புதிய முகங்கள் வேட்பாளர்களாகக் களம் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் அனுபவமோ, நிர்வாகத் திறமையோ இருக்கிறதா என்று எந்தக் கட்சியும் பார்ப்பதில்லை. அவர்களது புகழ் அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று நம்பியே கட்சிகள் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்றன.
  • சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டாற்றியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே, ஏன் எந்தக் கட்சியும் அத்தகைய நல்லவர்களை முன்னிறுத்தவில்லை? சுயேச்சை வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் டெபாசிட்டைக் கூடக் காப்பாற்ற முடியாத நிலையில்தான் உள்ளனர்.
  • வாக்காளர்களை எடுத்துக் கொள்வோம். அறிவுஜீவிகளான படித்த மேல்தட்டு வாக்காளர்களில் பலரும் அவர்களது குடும்பத்தினரும் வெளிநாடுகளில இருப்பவர்கள். அவர்கள் நம் நாட்டின் அரசியலைக் கிழிகிழி யென்று கிழித்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும், வலைதளங்களிலும் எழுதுவார்கள். ஆனால், வாக்களிக்க மாட்டார்கள். இங்கிருப்பவர்களில் பலரும் தேர்தல் சமயம் தொடர் விடுமுறையாக இருந்தால் மகிழ்ச்சியாகக் குடும்பத்தோடு சுற்றுலா கிளம்பி விடுவார்கள். படித்தவர்களாக இருந்தாலும்கூட இவர்கள் வேட்பாளரின் தகுதியைப் பார்த்து வாக்களிப்பதில்லை.
  • தனது ஜாதியைச் சேர்ந்தவர், தன் நண்பர், தனக்கு வேண்டப்பட்டவர் என்றே வாக்களிக்கிறார்கள்.
  • வேட்பாளர்களில் யார் நல்லவரோ அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று பலரும் பலமுறை சொல்லியும் நம் வாக்காளர்களைச் ஜாதி என்னும் சக்தியே இழுத்துச் செல்கிறது.  நல்ல வேட்பாளர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாத நிலையில் சிலர் வேறு வழியின்றி நோட்டாவுக்கு வாக்களிக்கிறார்கள். படிப்பறிவு அதிகமில்லாத கீழ்த்தட்டு மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இங்கும் கட்சி, ஜாதி ஆகியவையே அவர்களது வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. இளைய தலைமுறையோ திரைப்பட நடிக, நடிகையர் மேல் கொண்ட வெறியால் அவர்களுக்கே வாக்களிக்க விரும்புகின்றனர். திரைத்துறையினரின் புகழ் இவர்களது கண்களையும் அறிவையும் மறைக்கிறது. தேர்தலுக்கு முன் பலதரப்பட்ட வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசிப் பார்த்தேன். படித்த வங்கி அதிகாரி ஒருவர், எனது வாக்கு எப்போதும் ----- கட்சிக்குத்தான். இந்த முறையும் அதற்குத்தான் வாக்களிப்பேன் என்றார்.  அதிகம் படிக்காத ஒரு கார் ஓட்டுநர், விவசாயி சின்னத்துக்குப் போடலாம் என்று இருக்கிறேன்; அவர் விவசாயிகளுக்காக உழைப்பார் அல்லவா? என்றார். சின்னத்துக்கும் வேட்பாளருக்கும் தொடர்பில்லை என்பது அவருக்குத் தெரியவில்லை. வீட்டு வேலை செய்யும் மூதாட்டி ஒருவர், ஏதோ ஒரு பொத்தானை அமுக்குவேன் என்றார். ஆக, இதுதான் நமது வாக்காளர்களின் பொறுப்புணர்வு.
தேர்தல் ஆணையம்
  • அடுத்து தேர்தல் ஆணையம், அரசு இயந்திரம். ஜனநாயக முறையில் திறம்படத் தேர்தலை நடத்துவதில் நம் தேர்தல் ஆணையம் உலகின் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இரவு பகல் பாராது கடினமான இடங்களிலும், கடுமையான சூழ்நிலைகளிலும் திறம்பட தேர்தல் பணி செய்து கொண்டிருக்கின்றனர். எனினும், வாக்குக்கு பணம் என்னும் கேவலமான நடைமுறையை ஒழிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அவ்வளவே.
  • அதிக அளவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும், கடும் விதிமுறைகளை உருவாக்குவதற்கும் தேர்தல் ஆணையமும் அரசும் முனைப்பாகச் செயல்பட வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
  • சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகள், நல்லெண்ணம் கொண்ட சான்றோர் ஆகியோர் பெருமளவில் முன் வந்து ஒன்று சேர்ந்து ஒரு சமூகப் புரட்சியை உருவாக்க வேண்டும்.
  • இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களில் பலரை வேட்பாளர்களாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். ஊடகங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துப் பிரபலப்படுத்த வேண்டும். வரப் போகும் உள்ளாட்சித் தேர்தல்களில் இவ்வாறு சமூகப் பொறுப்பும் அக்கறையும் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்கு மக்களும் ஆதரவளித்தால் புதிய தலைமுறை அரசியல்வாதிகள் உருவாக வாய்ப்புள்ளது.
  • தேர்தல் முறையில் கீழே குறிப்பிட்டுள்ள சில விதிமுறைகளையும் கடுமையான மாற்றங்களையும் அமல்படுத்தினால் பணநாயகம் வலுவிழந்து ஜனநாயகம் தழைக்கும். வேட்பாளர்களுக்குக் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு, இரண்டு ஆண்டுகள் சமூகப் பணி, குற்றப் பின்னணி இல்லாதிருத்தல் போன்ற தகுதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். 2. வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறினால் வாக்காளரது அனைத்து அடையாள ஆவணங்களும் முடக்கப்பட வேண்டும். ஆன்லைனில் வாக்களிக்கும் முறையைக் கொண்டு வந்தால் பெருமளவில் தேர்தல் செலவு, கால விரயம் ஆகியவை குறையும். 3. கருத்துக் கணிப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வலைதளங்களுக்கும், ஊடகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். 4. பிரசாரம் என்ற பெயரில் கட்சிகள் நாகரிகமின்றி ஒருவரையொருவர் தூற்றிக் கொள்கின்றன.  இத்தகைய அவதூறு பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் ஒரே மேடையில் எதிரெதிர் வேட்பாளர்கள் பேசுவது நடைமுறையில் உள்ளது. 5. புதிதாக கட்சியைப் பதிவு செய்ய  கடும் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். 6. ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒரே வேட்பாளர் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும். ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பு, பதவி, கட்சி உறுப்பினராக குறைந்தபட்ச கல்வித் தகுதி போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். 7. நோட்டாவுக்கு மேலும்  உயிர் கொடுக்க வேண்டும். வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அடுத்து வரும் இரண்டு தேர்தல்களில் போட்டியிடத் தடை செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி (23-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்