TNPSC Thervupettagam

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

January 4 , 2023 668 days 405 0
  • மத்திய அரசு 2016-இல் மேற்கொண்ட அதிக மதிப்புச் செலாவணிகளை செல்லாததாக்கிய நடவடிக்கை செல்லுமா, செல்லாதா என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு. நான்கு நீதிபதிகள் அரசின் முடிவு சட்டப்படி சரியானதுதான் என்றும், நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் முடிவின் நோக்கம் சரியாக இருந்தாலும், கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறை சரியல்ல என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், கறுப்புப் பணத்தை ஒழித்தல், ஊழலைக் கட்டுப்படுத்துதல், கள்ள நோட்டுகளை ஒழித்தல், பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட நல்ல நோக்கங்களைக் கருத்தில் கொண்டே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர்கள் ஆமோதித்திருக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26(2)-இன் கீழ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பிட்ட முறையில் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிவிட முடியாது என்பதும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள்.
  • இதற்கு முன்பு இருமுறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டபோது தனியாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டது. நாடாளுமன்ற அங்கீகாரத்தின் மூலம் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசால் மேற்கொள்ள முடியும் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, "பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 52 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அது போதுமானதல்ல எனக் கூறுவது ஏற்புடையதல்ல. அந்த அவகாசத்தை தற்போது நீட்டிக்க வேண்டும் என்று கூறுவதும் முறையற்றது' என்று நீதிபதிகள் நிராகரித்திருக்கிறார்கள்.
  • 2016-இல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதோ, பழைய நிலைமைக்கு கொண்டு செல்வதோ சாத்தியமில்லை என்பதை, மாற்றுக்கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதிபதி பி.வி. நாகரத்னாவும் அங்கீகரித்திருக்கிறார். அரசியல் சாசனம், ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது என்பதை அவர் மறுக்கவில்லை. அதே நேரத்தில், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசாணை மூலம் நிறைவேற்றியதை அவர் அங்கீகரிக்கவில்லை.
  • அரசியல் சாசனப்படியும், சட்டப்படியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது சரியானது என்பதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில், அந்த முடிவு சரியானதுதானா, அது தனது இலக்கை அடைய முடிந்ததா உள்ளிட்ட கேள்விகள் பொது விவாதத்திற்குரியவையே தவிர, நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு உள்பட்டவையல்ல என்கிறது தீர்ப்பு.
  • 74 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, நான்கு காரணங்களை அதற்கு இலக்காகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நான்கு இலக்குகளில், கள்ள நோட்டுகளை அகற்றியதிலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுத்ததிலும் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஓரளவுக்கு வெற்றி அடைந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று கோடியிலிருந்து எட்டு கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதையும், ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்திருக்கிறது என்பதையும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் இணைத்துப் பார்க்க முடியாது. ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்திருப்பதற்கு பணவீக்கம் ஒரு முக்கியமான காரணம். எண்மப் பரிமாற்றம் அதிகரித்திருப்பது அதைவிட முக்கியமான காரணம்.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, எண்மப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது என்பது என்னவோ உண்மை. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, வங்கிகள் மூலம் மட்டுமே மானியங்கள், செல்லிடப்பேசிகளின் பயன்பாடு அதிகரிப்பு, இணையதள சேவைக்கான கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ரொக்கப் பரிமாற்றத்துக்குப் பதிலாக எண்ம பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்தன. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாமே தவிர, அதுவே காரணம் என்று கூறிவிட முடியாது.
  • நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தடம்புரளச் செய்தது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்காக அரசு தெரிவித்த காரணங்கள் முழுமையாக நிறைவேறவில்லை. சில நன்மைகள் விளைந்திருக்கின்றன என்பது என்னவோ உண்மை. அவை இந்த நடவடிக்கையால் மட்டுமே ஏற்பட்டனவா என்றால், இல்லை.
  • ஆட்சியாளர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதிர்பார்த்த நோக்கத்தை அடைய வேண்டும் என்பதில்லை. நோக்கம் நேர்மையானதா என்பதுதான் கேள்வியே தவிர, நோக்கம் நிறைவேறியதா என்பதன் அடிப்படையில் அணுக முடியாது. அரசின் திட்டங்கள் நிறைவேறுவதும், முறையாக நிறைவேறாமல் போவதும், தடம்புரளுவதும் அதை நிறைவேற்றும் நிர்வாக இயந்திரத்தின் கைகளில் இருக்கிறது.
  • நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கிவிட்டிருக்கும் நிலையில், இதுகுறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்..

நன்றி: தினமணி (04 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்