- இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 85% பேர் பாலினப் பாகுபாட்டின் காரணமாகப் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வு ஆகிய வாய்ப்புகளை இழக்கின்றனர் என்று சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதானது, பணியிடங்களில் பாலினப் பாகுபாடு கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு ஒரு பெரும் சவால் என்றே கருதப்பட வேண்டும்.
- கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலையும் அதன் விளைவாக வேலைவாய்ப்பின்மையும் நிலவுகிறது என்றாலும், மற்ற நாடுகளில் பணிபுரியும் பெண்களைக் காட்டிலும் ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சம ஊதியம் மற்றும் சம வாய்ப்புகளுக்காகக் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாகவும் ‘லிங்டுஇன் வாய்ப்புகளுக்கான குறியீடு-2021’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
- கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சந்திக்க வேண்டியிருக்கும் சிக்கல்களுக்கும், பணியில் சேர்ந்த பிறகு பாலினப் பாகுபாட்டின் காரணமாக அவர் இழக்க நேரும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட முன்னேற்ற வாய்ப்புகளுக்கும் இந்த ஆய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலினப் பாகுபாடு
- இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 22% பேர் தாங்கள் பணியாற்றும் இடங்களில் பெரிதும் ஆண் பணியாளர்கள்தான் விரும்பப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
- 37% பெண்கள், ஆண்களைக் காட்டிலும் தங்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, ஆண்களைக் காட்டிலும் தங்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- ஏறக்குறைய 71% பெண்கள் தங்களது பணிவாய்ப்புகளுக்குக் குடும்பப் பொறுப்புகள் ஒரு குறுக்கீடாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- பணிபுரியும் பெண்களில் 63% பேர் அத்தகைய குடும்பப் பொறுப்புகளின் காரணமாகவே தாங்கள் பணியிடங்களில் பாகுபாட்டுக்கு ஆளாக நேர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
- பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது உடனடி அவசியம் என்பதைத்தான் இத்தகைய ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
- பணிபுரியும் இருபாலரிடையே குடும்பப் பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் நெகிழ்வுகளை அனுமதிப்பதன் வாயிலாக அவர்களையும் உழைப்புச் சக்தியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது பணிகளை வழங்கும் நிறுவனங்களிடமே இருக்கிறது.
- பணிநேரங்களில் நெகிழ்வு, கூடுதல் விடுமுறைகள், பணித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைப் பெண்களுக்கு வழங்கப் பணிவழங்குநர்கள் முன்வர வேண்டும்.
- அதே நேரத்தில், பெண்கள் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்குக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு உதவ வேண்டியதும் அவசியம்.
- ஆண்களும் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய குடும்பப் பொறுப்புகளையும்கூட பெண்களின் மீது சுமத்துவது என்பது பெண்களின் பணிவாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
- பெருந்தொற்றுக் காலத்தில் பெண்களின் குடும்பப் பொறுப்புகள் மேலும் அதிகரித்துவிட்டன என்பதே உண்மை. உலகளவிலான பொருளாதார மந்த நிலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் உழைப்புச் சக்திக்கும் உரிய பங்கை அளிக்க வேண்டும்.
- அதன் வாயிலாக, அவர்களிடம் பொருளாதாரத் தன்னம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு, பணிவழங்குநர்களும் குடும்ப உறுப்பினர்களும் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (03-03-2021)