TNPSC Thervupettagam

பணி நேரமும் உற்பத்தித் திறனும்

November 10 , 2023 428 days 231 0
  • அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்தியாவின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளதால் வாரத்திற்கு 70 மணி நேரம் இளைஞர்கள் உழைக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், உற்பத்தி திறனை அதிகரித்தால் மட்டுமே, வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நாம் போட்டியிட முடியும் எனவும் கூறியிருந்தார். அவரின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உருவாயின.
  • தற்போதைய நிலையில் எழுபது மணி நேர உழைப்பு மட்டுமே உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் உழைப்பை நேரடியாக உற்பத்தித் திறனோடு மட்டுமே ஒப்பிட முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் நாளும் வளர்ந்து வருகிறது.
  • சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு தரும் புள்ளிவிவரம், அதிகப்படியான வேலை நேரம் உற்பத்தித்திறனை குறைக்கும் என்கிறது. அதாவது கரோனா தீநுண்மி காலகட்டத்தில் பணியாளர்களுக்கு உகந்த வேலை நேரத்தை உண்டாக்கித் தந்த காரணத்தால் அவர்களின் பணித்திறன் அதிகரித்ததுடன் குடும்பம், பணி என இரண்டிலும் சரி சமமான நேரத்தை அவர்களால் செலவழிக்க முடிந்தது என்கிறது அந்த ஆய்வு.
  • மேலும் தற்போது தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரு நாளுக்கான எட்டு மணி நேரப் பணி என்பதும் எளிதாக வாய்க்கவில்லை. வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1800-களில் நாளொன்றிற்கு 15 மணி நேரத்திற்கு மேலாக தொழிலாளர்கள் அடிமை போல் பணியாற்றி உள்ளனர். பின்பு தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக 12 மணி நேரமாக அது மாற்றம் பெற்றது.
  • அதன் பின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு 1919-இல் பணி நேரத்தை எட்டு மணி நேரமாக நிர்ணயம் செய்தது. அதுவே வாரத்திற்கு ஒரு தொழிலாளியின்  சராசரி பணி நேரமாக 48 மணி நேரம் என்றானது. அதாவது ஒரு நாளைக்கு எட்டு மணி நேர பணி, எட்டு மணி நேர ஓய்வு மற்றும் எட்டு மணி நேர உறக்கம் என்கிற வகையில் கணக்கிடப்பட்டுள்ளது.
  • சில நாடுகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் தினசரி 12 மணி நேர வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்று இருப்பது போல் நமது மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை சட்டத்தில் திருத்தமாக இதனை கொண்டு வந்தது.
  • அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை குறித்த மசோதா சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இம்மசோதாவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இம்மசோதா திரும்பப் பெறப்பட்டது.
  • மேலும் உலகளவில் எடுத்துக் கொண்டால் தொழிலாளர்களுக்கான வரையறை செய்யப்பட்ட பணி நேரத்தில் (48 மணி நேர வாரப் பணி) இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. அரபு நாடு வாரத்திற்கு 52.58 மணி நேரப் பணி என்கிற நிலையில் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 30 சதவீத மக்கள்தொகையினர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • "ஹார்வர்ட்' மேலாண்மை இதழில் வெளியான கட்டுரை ஒன்று, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணி நேரத்திற்கு உகந்த பணியாளர்களாக இந்தியர்களும், சீனர்களும் உள்ளனர் என்று தெரிவிக்கிறது.
  • சரி, உண்மையாகவே உற்பத்தித்திறனுக்கும் அதிக நேர பணிக்கும் நேரடியானத் தொடர்பு உள்ளதா என்று மீண்டும் அலசினால் இல்லை என்றே கூறவேண்டியிருக்கிறது. பணியாளர்களுக்கான அதிக பணி நேரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளான கேம்பியா, பூடான், லீசொதோ, காங்கோ போன்ற நாடுகளில் உற்பத்தித்திறன் குறைவாகவே இருக்கிறது.
  • அதுவே அரபு நாடுகளிலும் கத்தாரிலும் அதிக அளவிலான தொழில் முதலீடுகள் இருக்கும் காரணத்தால் கூடுதல் பணி நேரத்திற்கு தகுந்த உற்பத்தித்திறன் இருக்கிறது. மற்றொருபுறம் நார்வே, டென்மார்க், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் பணியாளர்களின் பணி நேரம் குறைவாக இருந்தாலும் உற்பத்தித்திறன் அதிகரித்து காணப்படுவதுடன் குடும்பம் - பணி என இரண்டிலும் சரிசமமான நேரத்தை அவர்களால் செலவிட முடிகிறது.
  • உதாரணத்திற்கு உலகளவில் அதிக பணி நேரத்தில் முதலிடம் வகிக்கும் அரபு நாட்டில் வாரத்திற்கு சராசரியாக 52 மணி நேர பணி மூலம் ஒரு மணி நேரத்திற்கு பணியாளர் உற்பத்தித்திறன் ஜிடிபி அளவில் 42.99 என்று உள்ளது. அதுவே ஏழாவது இடம் வகிக்கும் இந்தியாவின் 48 மணி நேரப் பணி மூலம் கிடைப்பது 8.47 ஜிடிபி-யாக உள்ளது.
  • உலகளவில் குறைந்த பணி நேரமான வாரத்திற்கு 29 மணி நேரத்தைக் கொண்டிருக்கும் ஆஸ்திரிய நாட்டின் பணியாளர் உற்பத்தித்திறன் ஜிடிபி அளவில் மணிக்கு 62.8 என்கிற விதத்தில் உள்ளது. மேலும் பல ஆய்வுகளும் குறைந்த பணி நேரம் பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன.
  • அதே சமயம் பணி நேரம் என்பது ஒவ்வொரு துறைக்கும் உற்பத்தித்திறனை வேறுபடுத்திக்காட்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் பணி நேர நீட்டிப்பு என்பது அந்தந்தத் துறைக்கு ஏற்ப மாறக்கூடியது ஆகும்.
  • மேலும், பணி நேரம் கூடும்போது அதற்கேற்ப ஊதியம் கூடாத நிலையில் பணியாளர்கள் மனதளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். முதலில், பணி நேர நீட்டிப்பு என்பதே பணியாளர்களை மனதளவில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வாரத்திற்கு 50 மணி நேர பணியைக் காட்டிலும் 35 மணி நேர பணியே உற்பத்தித்திறனை பணியாளர்களிடத்தில் கூட்டுகிறது என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவு. 
  • அதிலும் ஒரு நாளைக்கு இருக்கும் எட்டு மணி நேர பணி நேரத்தில் கூட கிட்டத்தட்ட  இரண்டரை மணி நேரத்தை சமூக வலைதளங்களுக்கு பணியாளர்கள் செலவிடுவதாக ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.
  • எனவே பணி நேரத்தை கூட்டுவதால் பணித்திறன் கூடும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை; அதற்கு மாற்றாக பணியாளர்களுக்கு தேவையான வசதிகளையும், அவர்களுக்கு உகந்த பணி சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தாலே போதும். உற்பத்தித்திறன் நிச்சயம் அதிகரிக்கும்.

நன்றி: தினமணி (10 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்