- கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளச்சந்தை பணத்தை திரும்பப் பெறுவது, தீவிரவாதத்திற்கு வரும் பணத்தைத் தடுப்பது போன்ற காரணங்களால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதன் இலக்குகளை எட்டியதா?
- மேலும், பணத்தை சார்ந்து இருந்த இந்திய சந்தையை டிஜிட்டல் மயமாக்க இந்த நடவடிக்கை உதவும் என்ற அரசின் முடிவு சரியானதாக அமைந்ததா?
- பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நுகர்வு கலாசாரத்தில் உள்ள பெரும்பகுதி மக்களுக்கு பொருந்தாத வகையில் உற்பத்தி நோக்கி மட்டுமே இலக்கு நிர்ணயித்த அரசின் முடிவு கைக்கொடுத்ததா?
- பண மதிப்பிழப்பு தொடர்பான இது போன்ற கேள்விகளை மக்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். இத்திட்டம் அறிமுகப்படுத்தி 5 ஆண்டுகளான இடைவெளியில் மனதில் எழும் பதில் தான் பண மதிப்பிழப்பு வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பதை உணர்த்தும்.
- 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியான இந்த அறிவிப்பால், சாமானிய மக்கள் அச்சத்திற்கும், திண்டாட்டத்திற்கும் உள்ளானதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.
- அரசு இயந்திரத்தால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சாமானிய மக்கள் தங்களின் சிறுசிறு சேமிப்புகள் செல்லாக்காசாகிவிடக்கூடாது என்ற பதட்டத்தில் அதனை மாற்றுவதற்காக ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாயில்களிலும் கால்கடுக்க காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளுக்காக வியர்வை சிந்தினர். இதில் சில உயிரிழப்புகளும் அடங்கும்.
- ஆனால், கோடிகோடியாக கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருந்த அரசுக்கு நெருக்கமான முக்கிய புள்ளிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எந்தவித அங்கலாய்ப்புமின்றி இடது கையால் கையாண்டனர். பெரு முதலாளிகள், நிர்வாகிகள் வீடுகளில் பின்னாளில் வருமானவரி சோதனையில் கண்டறியப்பட்ட கோடிக் கணக்கிலான புதிய ரூபாய் நோட்டுகளே அதற்கு சாட்சி.
- கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த முயற்சியில் பெருமுதலாளிகள் யாரும் சிக்கியதாக அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால், நாட்டின் பெரும்பதியான பணம் அத்தகைய சிலரிடம் மட்டுமே உள்ளது.
- இந்திய பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒருசில நபர்களுக்காக, அவர்களுக்கான நுகர்வோராக இருக்கும் கோடிக்கணக்கான மக்களை மறந்து தவிக்கவிட்டதே இதன் பெரிய சறுக்கல்.
- வங்கிகளில் பணத்தை மாற்ற வரும்போது வருமானத்திற்கு அதிகமாக பணம் செலுத்துபவர்களிடம் உரிய ஆவணம் இல்லை என்றால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆனால் தற்போது அமைச்சர்கள், தொழிலதிபர்கள் இல்லங்களில் நடத்தப்படும் சோதனைகளில் கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகள் சிக்குவது அரசு இயந்திரத்தின் மீது கேள்வி எழுப்புகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன?
- மக்கள் பட்ட துயரம் ஒருபுறம் இருந்தாலும், நிர்ணயித்த இலக்கை எட்டவாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை கைக்கொடுத்திருக்க வேண்டும்.
- மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரு வெற்றித் திட்டமாக அறிவித்து ஓட்டு கேட்க முடியாத அளவிற்குதான் இந்த திட்டம் உள்ளது.
- பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி போன்ற திட்டமும் இந்திய பொருளாதாரத்தை மேலும் சோதனைக்குட்படுத்தியது என்றே கூறலாம்.
- பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி-யும் தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பெரும் பின்னடைவுக்குக் காரணம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- "கறுப்புப்பணத்தை ஒழிக்க கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானதல்ல. அதைச் செயல்படுத்திய விதம்தான் தவறு என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்திருந்தார்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சாத்தியமானதா?
- பணமதிப்பிழப்பின் விளைவுகளில் ஒன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போன்று இதுவும் சாமானிய மக்களுக்கு எட்டாத அல்லது பொருந்தாத பெரும் முயற்சியாகவே உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இன்று கூட அதன் முழு நோக்கத்தை எட்டவில்லை.
- இணையவழி திருட்டையும், சைபர் குற்றங்களையும்தான் அது அதிகரித்த்து. எந்தவொரு புதிய திட்டத்திலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அவ்வாறு இல்லை.
- பெரும்பாலான மக்களுக்கு இதன் பயன்பாட்டில் சிக்கல் ஏற்படுத்தியதால், இணையவழி குற்றங்களையே இது அதிகரித்தது. வேலையில்லா திண்டாட்டம் போன்ற கிளைக்காரணிகள் இதில் அடங்கும்.
- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் நோக்கம் நாட்டு மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குவைத்துக்கொள்வது, கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு கியூஆர் கோட் மூலம் பணத்தை செலுத்துவது அல்ல.
- தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணம் வெளிச்சத்திற்கு வந்து அவை, அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான்.
- அரசுக் கட்டுப்பாட்டில் அவை வந்திருந்தால், புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்திருக்கும். ஆனால் இன்றைய தேதியில் கூட 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் பார்ப்பது அரிதாகியுள்ளது.
- அரசும் புதிய 2000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம் அதிக மதிப்புள்ள நோட்டுகள் ஓரிடத்தில் தேங்கியதுதான்.
- பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் சரிசெய்ய முடியவில்லை என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட 2016 - 2017ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையும் தெரிவித்தது.
- பண மதிப்பிழப்பு மூலம் பணம் தான் மாறியதே தவிர, அதை வைத்துக்கொண்டிருப்பவர்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
- உற்பத்தித் துறையில் முதலீடுகள் அதிகரிக்கிறதே தவிர அந்த உற்பத்திகளை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கையில் மாற்றங்கள் நிகழவில்லை.
- ஒருவேளை உற்பத்திகள் தேங்காத அளவிற்கு நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதையே பொருளாதார வளர்ச்சியாக கருத்தில் கொள்ளலாம்.
- நவம்பர் 8 - பணமதிப்பிழப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாள் (2016)
நன்றி: தினமணி (08 - 11 - 2021)