- நவம்பர் 8ஆம் தேதி இன்று. 2016ஆம் ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடந்து சரியாக 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
- நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றது குறித்தும் இன்று பல தரப்பிலும் அலசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
- இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடந்து 5 ஆண்டுகளுக்குப் பின் நாடு எப்படி இருக்கிறது என்று ஒரு பார்வை..
- கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டாலும், தற்போது, நாட்டில் பணப் புழக்கம் மெல்ல அதிகரித்துதான் உள்ளது.
- அதே வேளையில், எண்ம (டிஜிட்டல்)பணப் பரிவர்த்தனையும் மக்களிடையே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.
- கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காரணமாக பொருளாதார விகிதங்கள் பெரிய அளவில் மாறுபட்டன. கடந்த நிதியாண்டில், கரோனா அச்சம் காரணமாக, மக்கள் பலரும் அவசரத் தேவைகளுக்காக பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருந்தனர்.
- இதுவும் ஒரு வகையில் பணப்புழக்கம் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- அதே வேளையில், எண்ம பரிவர்த்தனைகளும், கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் பயன்பாடு, இணைய வங்கிச் சேவை, பணப்பரிமாற்ற செயலிகள் போன்றவற்றையும் ஏராளமான மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதும் அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு
- என்னதான் இவ்வளவையும் சொன்னாலும், மறுபக்கம், அதே விஷயம்தான். மக்களிடையே பணப் புழக்கம் குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளது.
- கருப்புப் பணத்தை ஒழிக்க, பணப்புழக்கத்தைக் குறைக்க என்ற முழக்கங்களோடு, 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எண்ம பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கவே செய்தன.
- ஆனால், பணப்புழக்கம்? ஒரேயடியாக உயரவில்லை என்றாலும் கூட, மிக மெதுவாக அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது.
- ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.17.74 லட்சம் கோடி. இது 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 29.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.2,28,963 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.
- பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாறாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.
- தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 ரூ.500, ரூ.2000 ஆகியவை புழக்கத்தில் உள்ளன.
இணைய வழியில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய பல வழிகள் வந்துவிட்டன.
- வங்கிகள் வழங்கும் டெபிட்/கிரெடிட் அட்டைகள்
- யுஎஸ்எஸ்டி
- யுபிஐ
- செல்லிடப்பேசி செயலிகள்
- வங்கிகள் வழங்கும் ப்ரீபெய்ட் அட்டைகள்
- இணையதள வங்கிச் சேவை
- செல்லிடப்பேசி வங்கிச் சேவை
- மைக்ரோ ஏடிஎம்கள்
- பாயிண்ட் ஆஃப் சேல் போன்றவை அவற்றில் சில.
- இவ்வளவு வசதிகள் இருந்தும் சிலர் இந்த இணையவழி அல்லது எண்ம பணப் பரிவர்த்தனைகள் மீது அதிருப்தி அடைகிறார்கள்.
அதற்குக் காரணம்..
- முறைகேடு
- மோசடி
- பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம்
- திருட்டு அச்சம்
- அதிகம் செலவிடுவோம் என்ற அச்சம்
- போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றைக் களைந்தால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
- கையில் பணமிருக்கும் போது திருட்டு பயம் மட்டும்தான் இருந்தது. ஆனால் தற்போது வங்கியிலிருக்கும் பணம் பல வகைகளில் திருடப்படுவது குறித்து காவல்துறை தரப்பிலும், சைபர் காவல்துறை தரப்பிலும் முன்னெச்சரிக்கைத் தகவல்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. குறிப்பாக வங்கி அட்டைகள் மூலமாக.
- காவல்துறையினர் கொடுக்கும் எச்சரிக்கைத் தகவல்களைக் கவனத்தில் கொண்டு மக்கள் விழிப்புடன் இருந்தால் இதுபோன்ற மோசடிகளை நிச்சயம் தவிர்க்க, தடுக்க முடியும்.
பொதுவாக மோசடிகள் நடைபெறும் வழிகள்..
- மின்னஞ்சலில் இணைய முகவரியை அனுப்புதல்
- செல்லிடப்பேசிகளில் குறுந்தகவல்கள்
- இதர செயலிகளில் குறுஞ்செய்திகள்
- மோசடியான இணையப் பக்கங்களுக்கு திருப்புதல்
- இணையவழியில்
- என மோசடிகள் பல வகைகளில் நடக்கின்றன. ஆனால், ஓடிபி எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல் மிகவும் முக்கியம். அதனை யாரிடமும் பகிரக் கூடாது என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
சரி இந்த மோசடிகளிலிருந்து தப்ப என்ன செய்யலாம்?
- புதிய மோசடி வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
- அங்கீகாரம் பெற்ற தளங்கள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுங்கள்.
- கடவுச்சொல், மின்னஞ்சல் தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- அவ்வப்போது கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
- கணினிகளில் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பதிவேற்றி பயன்படுத்துங்கள்.
- அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, பணம் வைத்திருந்தாலும், எண்ம வழிகளில் பணப்பரிவர்த்தனை செய்தாலும் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதில் கவனம் தேவை.
நன்றி: தினமணி (08 - 11 - 2021)