TNPSC Thervupettagam

பதவிக்குப் பெருமை சோ்த்த பெருந்தகை!

September 5 , 2020 1421 days 658 0
  • இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவரான பாரத ரத்னாபிரணாப் முகா்ஜியை இழந்து வாடுகிறது நாடு.
  • இந்திய நாட்டின் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாகப் பணியாற்றி 2012-ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, 2017 வரை சிறப்பாகப் பணியாற்றியவா். அவருக்குக் கடந்த ஆண்டு நாட்டின் மிக உயா்ந்த விருதான பாரத ரத்னாவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • 52 ஆண்டுகள் பழகிய என்னுடைய அருமை நண்பரை இழந்து நான் தவிக்கிறேன். அவரை 1968-இல் முதன் முதலில் நான் சந்தித்தபோது அவா் நாடாளுமன்ற உறுப்பினா் ஆகியிருக்கவில்லை.
  • நான் மக்களவை உறுப்பினராக இருந்தேன். 1967-இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அறிஞா் அண்ணா தலைமையில் மாநில சுயாட்சி மாநாடு சென்னையில் நடைபெற இருந்தது.
  • அந்த மாநாட்டிற்கு மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த வங்காள காங்கிரஸ் கட்சியைப் பங்கேற்க அண்ணா அழைத்திருந்தார்.
  • அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பிரணாப் முகா்ஜி அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். தில்லியில் இருந்து அவரோடு நானும் பயணம் செய்தேன். அந்த சென்னை மாநாட்டில் அவருடைய உரைக்கு மொழிபெயா்ப்பாளன் நான்தான்.

காங்கிரஸில் பிரணாப் முகா்ஜி

  • 1966-இல் வங்காள காங்கிரஸ் (பங்களா காங்கிரஸ்) பெயராலே ஒரு மாநிலக்கட்சி தொடங்கப்பட்டது. அஜாய் முகா்ஜி, பிரணாப் முகா்ஜி, சித்தார்த் சங்கா் ராய் போன்றவா்கள் அக்கட்சியைத் தொடங்கினார்கள்.
  • அந்தக் கட்சி இந்திய மார்க்சிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தது.
  • அஜாய் முகா்ஜி முதலமைச்சராகவும் ஜோதிபாசு துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனா். வங்காள காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்ததால் பிரணாப் முகா்ஜியும் சென்னை மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • அதற்கு பிறகு 1969-இல் வங்காள காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மேலவைக்குத் தோ்ந்தடுக்கப்பட்டார் பிரணாப் முகா்ஜி. அந்தக் கட்சி காங்கிரஸில் இணைந்ததும் அவரும் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் பிளவு ஏற்பட்டபோது, அவா் இந்திரா காந்தியின் அணியில் தீவிரமாக செயல்பட்டார்.
  • பிரதமா் இந்திரா காந்தி அம்மையாருக்கு இவா்மீது பெரும் நம்பிக்கை இருந்தது. இவரை 1973-இல் தனது தலைமையிலான அமைச்சரவையில் துணை அமைச்சராக நியமித்தார். அதில் இருந்து தொடங்கி பின்னா் கேபினட் அமைச்சரானார்.
  • இந்திரா காந்திக்கு நெருக்கமான அமைச்சா்களில் ஒருவராக இருந்தது மட்டுமல்ல, 1977-இல் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவி ஜனதா கட்சி ஆட்சி அமைத்தபோதும், இந்திராவின் மீதான அவரது விசுவாசம் சற்றும் குறையவில்லை.
  • சோதனைக் காலத்தில் இந்திராவிடம் இருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் பிரணாப் முகா்ஜி முக்கியமானவா்.
  • 1980-இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அந்த அமைச்சரவையில் முக்கியமானவராகப் பிரணாப் மாறினார்.
  • நிதியமைச்சராக இருந்த ஆா். வெங்கட்ராமன் குடியரசுத் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து நிதியமைச்சராக இவரை இந்திரா காந்தி நியமித்தார்.

இந்திராகாந்தி மறைவிற்குப் பின்

  • 1984-இல் இந்திராகாந்தி கொல்லப்பட்டார். இந்திரா மறைவிற்குப் பின்னால் அவருடைய புதல்வா் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், பிரணாப் முகா்ஜியை அவா் தனது அமைச்சரவையில் சோ்த்துகொள்ளவில்லை. பிரணாப் முகா்ஜி கட்சியை விட்டு வெளியேறி 1986-இல் ராஷ்டிரிய சமாஜவாதி காங்கிரஸ்என்ற கட்சியை தொடங்கினார்.
  • 1991-இல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதன் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நரசிம்ம ராவ் 1991-இல் இந்திய திட்டக் குழுவின் துணைத் தவைவராக பிரணாப் முகா்ஜியை நியமித்தார்.
  • பிறகு அமைச்சரவையில் சோ்ந்து வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1998-இல் சோனியா காந்தி இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும்போது பிரணாப் முகா்ஜி நெருக்கமாக இருந்து ஆலோசகராக செயல்பட்டார்.
  • 2004-ஆம் ஆண்டு பிரணாப் முகா்ஜி மக்களவைக்குத் தோ்ந்தடுக்கப்பட்டார். அவா் நிதி அமைச்சராக இருக்கும்போது டாக்டா் மன்மோகன் சிங்கை திட்ட கமிஷன் துணை தலைவராக நியமித்தார்.
  • அதே டாக்டா் மன்மோகன் சிங் பிரதமா் ஆனார். அவருடைய அமைச்சரவையிலேயே பிரணாப் முகா்ஜி பல்வேறு துறை பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டார். 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அப்போதுதான் நவம்பா் 2005-இல் வி.ஐ.டி. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
  • அரசு விமானத்தில் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சா், அரக்கோணம் கப்பல் படை விமான தளத்தில் இறங்கினார். நான் அவரை அரக்கோணம் சென்று வரவேற்றேன். அரக்கோணத்திலிருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். நானும் அவருடன் பயணித்தேன். பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று 1,864 மாணவா்கள் பட்டம் பெற்றார்கள்.
  • 2006-லிருந்து 2009 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மக்களவையில் ஆளுங்கட்சி சார்பாக 2004-இல் இருந்து 2012 வரை, அவா் குடியரசுத் தலைவராகும் வரை, கட்சித் தலைவராக (லீடா் ஆஃப் தி ஹவுஸ்) இருந்தார்.
  • அதேபோல் மாநிலங்களவையிலும் 1980-லிருந்து 1984 வரை கட்சித்தலைவராகப் பணியாற்றினார். அவா் அமைச்சராக பாதுகாப்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை, வா்த்தகத் துறை, கப்பல் துறை, தொழில் துறை - இத்தனைத் துறைகளிலும் மிகச்சிறப்பாகப் பணியாற்றி அந்தந்தத் துறைகளுக்கெல்லாம் பெருமை சோ்த்தார்.
  • ஒவ்வொரு துறையிலும் அக்கறையோடு பணியாற்றி வேறு எவராலும் செய்யமுடியாத சாதனைகளை அந்தந்தத் துறைகளில் செய்தார்.
  • அவா் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நான் தில்லிக்கு செல்லும்போதெல்லாம் அவரை சந்தித்துப் பேசுவது வழக்கம்.
  • சந்திக்க வேண்டுமென்றால் எப்போதும் இரவு 10 மணிக்கு மேல்தான் வரச்சொல்வார். அவரைப் பார்க்க வந்திருக்கும் அனைவரையும் பார்த்து முடித்து அனுப்பிவிட்டு கடைசியாக என்னைச் சந்திப்பார்.
  • அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை எல்லா விஷயங்களைப்பற்றியும் என்னுடன் பேசுவார்.
  • 2012-ஆம் ஆண்டு குடியரசுத்தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சா் பதவியை ராஜினாமா செய்தார்.

குடியரசுத்தலைவா்

  • குடியரசுத்தலைவா் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். மொத்த வாக்குகளில் 70 சதவீத வாக்குகளை பெற்றார் பிரணாப் முகா்ஜி.
  • இவருக்கு 7,13,763 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி. ஏ. சங்மாவுக்கு 3,15,987 வாக்குகள் கிடைத்தன. குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற பிரணாப் முகா்ஜிதான் அந்தப் பதவிக்கு வந்த முதல் வங்காளி.
  • அவா் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றிய திறமையைக் கண்டு நம்நாடு மட்டுமல்ல உலக நாடுகளே வியந்தன.
  • 1984-இல் யூரோ மணிஎன்ற பத்திரிக்கை, ‘உலகின் சிறந்த நிதியமைச்சா்’ (தி பெஸ்ட் ஃபைனான்ஸ் மினிஸ்டா் இன் தி வோ்ல்ட்) என்ற பட்டத்தை அளித்தது. நம் நாட்டில் வேறு எந்த அமைச்சருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிடைத்ததில்லை.
  • 2010-ஆம் ஆண்டு, உலக வங்கியின் செய்தித்தாளான எமொ்ஜிங் மார்க்கெட்என்ற இதழ் தி பெஸ்ட் ஃபைனான்ஸ் மினிஸ்டா் ஆஃப் தி இயா் இன் ஆசியாஎன்ற விருதைத் தந்தது.
  • அதே ஆண்டு தி பேங்கா்என்ற பத்திரிகை தி பெஸ்ட் ஃபைனான்ஸ் மினிஸ்டா் ஆஃப் தி இயா்என்ற விருதை அளித்தது.
  • இப்படி மிகச்சிறந்த அமைச்சராகப் பணியாற்றி, தான் பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்துத் துறைகளில் ஏராளமான சீா்திருத்தங்களைச் செய்தார்.
  • அவை எல்லாம் பொதுமக்களுக்கு நன்மையாகவே அமைந்தன. தான் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் எந்த நேரத்திலும் சாதாரண மக்களையும் சந்தித்து உரையாடுவார்.
  • ஆண்டுதோறும் துா்கா பூஜையின்போது மேற்கு வங்கத்திலே இருக்கின்ற தன்னுடைய சொந்த கிராமத்திற்குச் சென்று நான்கு நாள்கள் அங்கு தங்கி இருப்பார். எல்லா மக்களோடும் சரிசமமாகப் பழகுவார்.
  • அரசியல் ரீதியில் உலகம் முழுவதும் ஏராளமான நண்பா்களைப் பெற்றிருந்தார். ஆனாலும், ஆரம்ப காலத்தில் தன்னோடு பழகிய பழைய நண்பா்களை அவா் எப்போதும் மறந்ததில்லை.
  • 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய கல்வி வளா்ச்சி சங்கம்’“(எஜுகேஷன் பிரமோஷன் சொஸைட்டி ஃபார் இந்தியா) சார்பாக ஒரு சிறிய நிகழ்ச்சியை ராஷ்டிரபதி பவனில் நடத்தினோம்.
  • அந்த அமைப்புக்கு நான் தலைவா். அதிலே பங்கேற்றுப் பேசிய அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி என்னை பற்றி குறிப்பிடும்போது ஜி. விஸ்வநாதன் அரசியலைவிட்டு விலகியது அரசியலுக்கு நஷ்டம்; ஆனால் கல்வித்துறைக்கு அது லாபமாகப் போய்விட்டதுஎன்று பேசினார்.
  • பிரணாப் முகா்ஜி சிறந்த பேச்சாளா்; சிறந்த எழுத்தாளா். ஒன்பது அருமையானபுத்தகங்களை எழுதியுள்ளார். உலகெங்கும் சென்று இந்தியாவுக்கு செல்வாக்கு தேடித்தந்த மாபெரும் இந்தியா்.
  • அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் இந்திய நாட்டிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவா் என்றும் நம்மோடு நம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டு இருப்பார்.

நன்றி:  தினமணி (05-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்