TNPSC Thervupettagam

பத்தியமான ஊட்டச்சத்து

February 23 , 2021 1429 days 683 0
  • உலக அளவில் ஊட்டச்சத்து அறிக்கை 2020, பதினைந்து முதல் நாற்பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்திய பெண்களில் 51.4% பேர் இரத்த சோகை கொண்டவர்கள் என கூறுகிறது. நம் நாட்டினில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 34.7% பேர் வளர்ச்சி குன்றியவர்கள் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது. இது ஆசிய பிராந்தியத்தின் சராசரி அளவான 21.8%-ஐ விட அதிகமாகும்.
  • இதேபோல் ஐந்து வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளில் 17.3% பேர் திசு கட்டழிவு (உயரத்திற்கான எடையில் குறைவு ஏற்படுதல்) பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதுவும் ஆசிய பிராந்தியத்தின் சராசரியான 9.1%-ஐ விட அதிகம்.
  • கரோனா தீ நுண்மி சமூக-பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளின் திசு கட்டழிவு 14.3% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகில் உடல் இளைத்த குழந்தைகளின் தாயகமாக விளங்கும் நம் நாடு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை களையும் பணியினில் இன்னும் அதிக கவனம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
  • நமது அரசுகள் குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பணிகளுடன் தாய்ப்பால் கொடுப்பதற்கான ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை களையும் சிகிச்சை ஆகியவற்றினையும் வழங்கி வருகிறது.
  • அங்கன்வாடி சேவைகளின் கீழ் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தகுதியான குழந்தைகளில் சுமார் 48 சதவீதம் பேரையும் கர்ப்பிணிப் பெண்களில் 51 சதவீதம் பேரையும் மட்டுமே அடைகிறது. இதுவே நகர்ப்புறங்களில், இந்த எண்ணிக்கை முறையே 40 சதவீதமாகவும் 36 சதவீதமாகவும் இருக்கிறது.
  • அங்கன்வாடி திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 15% குறைந்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில், அங்கன்வாடி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. 22 மாநிலங்களில் வாழும் 6 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் குறைந்தபட்சமாக 5.9% பேரும் அதிகபட்சமாக 29% பேரும் மட்டுமே போதுமான உணவு உட்கொள்வதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 இன் தரவுகள் கூறுகிறது.
  • கரோனா தீநுண்மி ஊட்டச்சத்து விநியோகத்திலும் பெரும் சீர்குலைவுகளை ஏற்படுத்திவிட்டது. கடந்த கடைசி காலாண்டில் தகுதியான குழந்தைகளில் 14.9% பேர் மட்டுமே இரும்பு மற்றும் போலிக் அமில சத்து ஊட்டத்தினை கூடுதலாக பெற்றனர்; நடப்பு ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் 9.1% பேர் மட்டுமே இரும்பு மற்றும் போலிக் அமில சத்து ஊட்டத்தினை பெற்றுள்ளனர்.
  • தேசிய சுகாதார இயக்கம் வழங்கிவரும் குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்ட தகுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 2.9%-ஆக இருந்தது; இதுவே 2020-21-ஆம் ஆண்டினில் வெறும் 0.3% பேர் மட்டுமே குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டனர்.
  • தற்போதுள்ள துணை ஊட்டச்சத்து திட்டம் மற்றும் போஷன் அபியான் என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஆகியவற்றை இணைத்து மிஷன் போஷன் 2.0 என்ற புதிய திட்டத்தினை சமீபத்திய நிதிநிலை அறிக்கையினில் இந்திய அரசு அறிவித்தது.
  • குழந்தை பிறந்ததில் இருந்து முதல் ஆறு மாதங்களுக்கான ஊட்டச்சத்தினை பற்றி துணை ஊட்டச்சத்து திட்டத்தில் ஏதும் சொல்லப்படாதது போல் மிஷன் போஷன் 2.0விலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது துணை ஊட்டச்சத்து திட்டத்தில் தீர்வில்லாத பல விஷயங்கள் மிஷன் போஷன் 2.0விலும் தீர்க்கப்படவில்லை என்பதற்கான உதாரணம்.
  • தற்போதைய நிதிநிலை அறிக்கையின்படி அங்கன்வாடி சேவைகள் உட்பட்ட திட்டங்கள் "சாக்ஷôம்' என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டின் சாக்ஷôம் நிதி ஒதுக்கீடு ரூ.20,105 கோடி. இது 2020-21-ஆம் ஆண்டின் அங்கன்வாடி நிதி ஒதுக்கீட்டான ரூ.20,532 கோடியை விட குறைவு.
  • இதேபோல் பிரதம மந்திரியின் தாய்மை வந்தனா திட்டம் உட்பட்ட திட்டங்கள் "சமர்த்தியா'வின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சாக்ஷôம் மற்றும் சமர்த்தியா இரண்டும் மிஷன் போஷன் 2.0-இன் கீழ் வரும் திட்டங்களாகும்.
  • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அனைவரும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி குறைந்தபட்சம் ரூ.6,000 பெறுவதற்கான பிரதம மந்திரியின் தாய்மை வந்தனா திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரதம மந்திரியின் தாய்மை வந்தனா திட்டத்திற்க்கான ஒதுக்கீடு ரூ .2,500 கோடி.
  • ஆனால் இந்த ஆண்டு சமர்த்தியா திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ .2,522 கோடி. இது தகுதியான அனைத்து பயனாளிகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • மிஷன் போஷன் தேவையுள்ள 112 மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஊட்டச்சத்தினை மேம்படுத்த துவங்கப்படும் என்று நமது நிதியமைச்சர் கூறியுள்ளார்.
  • அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமணி  (23-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்