TNPSC Thervupettagam

பனங்கள் விற்பனையை அரசே தொடங்கலாமா?

July 30 , 2024 166 days 126 0
  • ‘உடல் ஆரோக்​கியத்து​க்கு உகந்த பனை மரக் கள்ளை நிபந்​தனையின்றி விற்க அரசு அனுமதிக்க வேண்​டும்’ - புதுக்​கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்​புச் செயலாளர் நடராஜன், மதுரை உயர் நீதிமன்​றத்​தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்​பிட்டிருக்​கும் வார்த்தைகள் இவை.
  • சங்க காலம் தொடங்கி, தற்போது வரைக்​கும் கள் மருந்​தாகவும் உணவாகவும் இருப்​பதைத் தனது மனுவில் அவர் குறிப்​பிட்டுள்ளார். இந்த வழக்கு ஜூன் 27இல் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்​முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பாலசுந்​தரம், கள்ளச் சாராயம் குடித்த பலர் சமீபத்​தில் பலியாகியுள்​ளதைச் சுட்டிக்​காட்டி, இது போன்ற சம்பவங்​களைத் தடுக்கப் பனை மரக் கள் விற்​பனையை அனுமதிக்க வேண்​டும் என வாதாடினார்​.
  • இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கை​யானது அரசின் கொள்​கைரீதியான முடிவுகளுடன் தொடர்​புடையது. எனவே, இந்த வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்​டும்’ என உத்தரவிட்டதுடன், அடுத்​தகட்ட விசாரணையை நான்கு வாரங்​களுக்கு ஒத்திவைத்​தனர். கள்ளக்​குறிச்சி சம்பவத்து​க்​குப் பின்னர் கள் குறித்த உரையாடல் பல்வேறு தளங்​களில் நிகழ்ந்​தவண்ணம் உள்ளது. இந்த வழக்​கும் அதற்கு ஓர் எடுத்து​க்கா​ட்டு.

ஆங்கிலேயரின் அடக்குமுறை:

  • ‘கள்’ என்கிற வார்த்தை திராவிட மொழியில் வேர்​கொண்​டது. சங்க காலம் தொடங்கி, நமது மண்ணில் உயிர்ப்​புடன் இருக்​கிறது. அத்தனை திராவிட மொழிகளிலும் கள் என்றே அது அழைக்​கப்​படுவது, திராவிட இனக் குழுக்​களிடையே நிலவிய ஒற்றுமைக்கான சான்​றாகும்.
  • பனங்கள் சங்க காலத்​திலிருந்தே உணவாகவும் மருந்​தாகவும் களிப்​புண்​டாக்​கும் உற்சாக பானமாகவும் இருந்துவந்​திருக்​கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்​தில், தங்கள் வெளிநாட்டு மதுவை விற்பனை செய்​வதன் மூலம் அபரிமிதமாக வரி வசூலிக்க முடியும் என ஆட்சியாளர்கள் நம்பினர்.
  • ஆனால், இவ்விதக் கடுமையான போதைக்​குப் பழகாத தமிழக மக்கள், ஆங்கிலேயரின் போதை வஸ்துக்களை விரும்ப​வில்லை. உற்சாகம் அளிக்​கும் மருந்தான கள் கைவசமிருக்​கையில் உடலுக்​குத் தீங்கு விளைவிக்​கும் வெளிநாட்டு மதுவை எவரும் சீண்​டிக்​கூடப் பார்க்​கவில்லை. வரி வசூல் பாதிக்​கப்​படும் என்கிற ஒற்றைப் பார்​வையில், பனங்கள் விற்​பனையை ஆங்கிலேயர்கள் இரும்​புக்​கரம் கொண்டு அடக்​கினர்.
  • வட இந்தியாவிலும் இப்படியான அத்துமீறல்கள் அரங்​கேறின. அங்கு காணப்​படும் மஹுவா என்ற மரத்​தின் பூக்​களிலிருந்து மது தயாரிக்​கும் பழங்​குடியினரைக் கட்டுப்​படுத்த மஹுவா மரங்​களையே இல்லாமல் ஆக்கினர் ஆங்கிலேயர்​கள். நாடு விடுதலை பெற்றுப் பல ஆண்டுகளுக்​குப் பின்னர், தமிழகத்​தில் கழக ஆட்சியில் இரண்டு முறை கள்ளுக்​கடைகள் திறக்கப்​பட்டன.
  • இம்முறை கள்ளுக்​கடைகளுக்​குப் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்​கிக் கொடுக்க வேண்​டும் என்றும், பனையேறிகள் தாமே கள் இறக்க அனுமதியில்லை என்றும் கூறப்​பட்டது. பனையேறிகளிடம் வாங்​கும் பதனீரைக் கள்ளுக்​கடையில் வைத்து ‘கள் உறை’ ஊற்றிப் புளிக்​கச்​செய்து கள்ளாக்கி விற்பனை செய்​யப்​பட்டது.

பனையேறிகளுக்கு விரோதமானது:

  • இக்கடைகளில் பல்வேறு விதமான போதை அளிக்​கும் தாவரங்​கள், மாத்​திரைகள் சேர்க்​கப்​பட்டதாகப் பரவலான கருத்துகள் நிலவுகின்றன. இப்படித்​தான் கள் கலப்​படம் செய்​யப்​பட்டது. ஆகவே கள்ளுக்கடை என்பது காலாவதியான, சூழலுக்​குப் பொருந்​தாத, பனையேறிகளுக்கு விரோதமான ஓர் அமைப்பு மட்டுமே.
  • கள்ளுக்கடை என்பதைப் போதைக்கான ஓர் இடமாக சுவீகரிக்​கும் போக்கு தமிழகத்​தில் மேலோங்​கியிருக்​கிறது. அது உண்மைதான். இன்றும் டாஸ்மாக்​குக்கு எதிராகவும், கள்ளச் சாராயத்தை ஒழிக்​கவும் கள்ளுக்​கடையைத் திறக்க வேண்​டும் என்னும் நிலைப்​பாட்டில் இருந்து வருகின்ற எண்ணம் இது. அவ்வித எண்ணங்​களுக்​குச் சற்றும் பொருந்தாத தொலைவில் இருக்​கிறது பனை மரக்கள்.
  • கடைகளுக்கு வரும்​போது அங்கே வருகின்ற ‘குடிகாரர்​க’ளைத் திருப்​திப்​படுத்​தும் நோக்​கில் பனை மரக் கள்ளுக்கு போதையேற்றம் செய்​யப்​படுகின்​றது. அப்படியான சூழலில் பலவிதக் கலப்​படங்கள் நிகழச் சாத்​தியம் உண்டு. கள் விஷமாகிவிடும் நிகழ்​வுகள் இப்படிப்​பட்ட ஒருங்கிணைக்​கப்​பட்ட கள்ளுக்​கடைகளிலேயே நடைபெறும்.
  • ஆகவே, போலிகளை உருவாக்​கும் வாய்ப்​புள்ள கள்ளுக்​கடைகளைத் திறப்​பதில் உள்ள தீங்​கினை அரசு உணர வேண்​டும். கள்ளுக்கடை வேண்​டும் எனப் பொத்​தாம்​பொதுவாகக் கோஷம் எழுப்பு​கிறவர்​கள், அது எப்பேர்ப்​பட்ட தீங்​கினைத் தமிழகத்​தில் ஏற்படுத்தி​யிருக்​கிறது என வரலாற்​றைப் புரட்டிப்​பார்த்​துத் தெரிந்துகொள்வது நலம். ஆக கள் விற்​பனைக்கு, இன்றைய சூழலுக்​குப் பொருந்துகிற பனையேறிகளுக்​குப் பயனளிக்கிற வேறு வழிமுறையை நாம் பரிசீலிக்க வேண்​டும்.
  • பனங்கள் மீதான தடைதான் பனைத் தொழிலை நலிவுறச் செய்​தது. பனையிலிருந்து 801 பொருள்கள் கிடைக்​கும் என்று குடந்தை அருணாசலம் தனது ‘தாலவிலாசம்’ என்கிற நூலில் பதிவுசெய்​திருக்​கிறார். பனைத் தொழிலின் மிக முக்கிய அங்கம் பனையும் பனையேறியும்​தான். இந்தப் பிணைப்பை எவரும் அழிக்கக் கூடாது.

சில யோசனைகள்:

  • கட்டுப்​படுத்​தப்​பட்ட விற்​பனையாகக் கள்ளை விற்கக் கீழ்க்​கண்ட யோசனைகளை அரசு பரிசீலிக்​கலாம். முதலில், கள் இறக்கப் பனையேறுகின்​றவர்கள் அனைவரும் முறையாக உரிமம் வைத்​திருக்க வேண்​டும். உரிமம் எளிமையாகக் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்​டும்.
  • பனை மரம் ஏறுகிறவர், கள் இறக்​கும் பனைமரங்கள் இருக்​கும் இடங்​களிலிருந்து 500 – 1,000 மீட்டர் தொலைவுக்​குள்​ளேயே விற்பனை செய்ய வேண்​டும். பனை மரத்​திலிருந்து இறக்கிய கள் சுமார் இரண்டு மணி நேரம் நல்ல தரத்​தில் இருக்​கும். ஆகவே, காலை 6 - 8 மணி வரைக்​கும், மாலை 4 - 6 மணி வரைக்​கும் என அந்தந்த மாவட்டத்து​க்கு என உகந்த நேரத்​தைத் தெரிவுசெய்யலாம்.
  • ஒவ்வொரு மாவட்டமும் அவற்றுக்கு உகந்த 100 நாள்​களைக் கள் விற்பனை நாள்​களாகத் தெரிவுசெய்ய வேண்​டும். இது காவல் துறை, பனையேறிகள், ஏனைய அரசு அதிகாரிகளுக்​கும் உள்ள உறவினைச் சீர்ப்​படுத்​தும். பனையேறியிடமிருந்து ஒருவர் ஒரு லிட்டர் கள் மட்டுமே எடுத்​துச்​செல்ல அனுமதிக்க வேண்​டும். பனையேறி அல்லாதோரிடம் ஒரு லிட்டருக்​கும் அதிகமான கள் காணப்​பட்டால், முறை கேடாகக் கள் வைத்​திருப்​பவர் எனக் காவல் துறை அவர்​களைக் கைது செய்​யலாம்.
  • பனை ஏறுகின்ற ஒவ்வொரு பனையேறியும் அந்தந்தக் கிராம முன்னேற்​றத்து​க்கு என்று குறைந்​தபட்சத் தொகையினை நிர்​ணயித்து, அதனை முன்​பணமாகச் செலுத்த ஊக்கப்​படுத்​தலாம். பனையேறி ஒருவர் விற்கும் கள்ளில் கலப்​படம் செய்​யப்​படுவது கண்டறியப்​பட்டால், வாழ்​நாளில் அவர் மீண்டும் பனைமரம் ஏறாதபடி தண்டனை வழங்கலாம் (இதைவிடப் பெரிய தண்டனை ஒரு பனையேறிக்​குக் கிடையாது).
  • கள் தடை சார்ந்த கொள்கை முடிவை அரசு மாற்றினால், தமிழகம் முழுக்கவே சுமார் 10 லட்சம் இளைஞர்​களுக்கு உடனடியாகச் சுயதொழில் செய்ய சாத்​தியக்​கூறு இருக்​கிறது. தற்போதைய திமுக அரசு தமிழகத்​தில் பல்​வேறு நலப்​பணிகளை முன்னெடுத்து​வருகிறது. இச்​சூழலில் கள்​ளக்​குறிச்சி கள்​ளச் சாராயச் சாவுகள் ஏற்​படுத்திய களங்​கம் மக்​கள் மனதில் ஆறாத வடுவாக நிலைபெற்றுவிட்டது. இச்​சூழலில், பனங்கள்ளை முறைப்படி விற்பனை செய்​ய அனுமதித்தால், அதற்கு நிச்​சயம் நல்​ல பலன்கள் கிடைக்​கும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்