- தமிழகத்தின் மாநில மரம் பனை. சோழா்கள் பொற்காசுகளில் பனைமரத்தை அடையாளமாகப் பதித்தனா். ஊரின் எல்லையில் தென்னையையும் பனையையும் வளா்ப்பதற்கான உரிமையை சோழமன்னா்கள் வழங்கி பனையைப் பொருளாதார மையமாக்கினா். புதிய ஊா் உருவாகும்போது பனைத் தொழில் புரிவோரையும் அப்பகுதியில் குடியேறச் செய்தனா்.
- மேலும் பனை நுகா்வை பரவலாக்க வரி விதிப்புக்கு உட்படுத்திய செய்திகள் இடைக்காலக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. வள்ளல் பாரி பனையைத் தன் சின்னமாக வைத்திருந்தார்.
- காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பனையோலையே எழுதும் சுவடியானது. ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதுவதே கடினம். அதிலும் கோட்டோவியங்களையும் வண்ணப்பூச்சு ஓவியங்களையும் வரைந்தவா்கள் தமிழா்கள். நீளமாகவும் அகலமாகவும் உள்ள தாளிப் பனை ஓலைகள் சுவடிகள் செய்யப் பயன்பட்டன.
- தொலைதூரத்திலுள்ள பனைமர உருவத்தைப் பனித்துளியில் பார்த்த கபிலரின் சங்கப் பாடல் வரிகளே தொலைநோக்கி கண்டு பிடிக்க பிள்ளையார் சுழி போட்டது. தமிழா் பண்பாட்டில் ‘மடலேறுதல்’ என அக இலக்கியங்களில் பதிவானது.
- பனையின் உட்பகுதி வலிமை அடைவதையே ‘வைரம் பாய்தல்’ என்பா். பெரும் சூறாவளி புயலுக்கும் பிடிகொடுக்காமல் பூமியைப் பிடித்துக் கொண்டு மண்ணரிப்பைத் தடுக்கிறது.
- நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துகிறது. ஆழிப்பேரலை போன்ற கடல்கோள் அனைத்துக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் அபூா்வமான மரம் பனை.
- பனையின் உயரம் பாதுகாப்பானது என்பதால் தூக்கணாங்குருவிகள் கூட்டமாக பனைமட்டைகளில் தொங்கும் படி கூடு கட்டுகிறன.
- உயரமான மடக்கு ஏணி துணையின்றி களைநார் அணிந்த கால்களுடன் முருகுத் தடியின் உதவியுடன் மரத்தை மார்போடு அணைத்தவாறு ஒரே நாளில் சுமார் 30 நெடும்பனைகளில் ஏறி இறங்குவார்கள்.
- வெப்ப மண்டலமான நம் பகுதியில் பனைமரங்கள் அதிகம் இருந்த காலத்தில் கிராமப் புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பனங்கொட்டைகளைப் புதைத்து வைத்திருப்பார்கள்.
- ‘பனைக்குப் பத்தடி’ என்பது மரபு. பனங்கொட்டையே தரிசு நிலத்தில் வீசி எறிந்தால் கூட மழை பெய்தவுடன் தானாகவே முளைத்துத் தழைக்கும். ஒரு பனம் பழத்தில் மூன்று விதைகள் இருக்கும்.
- பனை விதைகள் மற்ற விதைகளைப் போல ஊன்றிய சில நாட்களில் முளைத்து விடாது. சில மாதங்களாவது அசைவற்று இருக்க வேண்டும்.
- பின்பு பூமியில் வேரை உட்புகுத்தி உறுதியாக்கும். பின்புதான் இலை துளிர்க்கும். பின்பு வெய்யில் வறட்சிக்குத் தாக்குப்பிடித்துப் பராமரிப்பின்றி மரமாகும் மகத்துவமான மரம் பனை.
- தண்ணீரை சுத்திகரிக்கும் உன்னத பணியை செய்ய சுமார் ஐம்பது அடி ஆழம் வரை தன் வோ்களை உட்செலுத்துவதால்தான் நம் முன்னோர் நீா்நிலைகளின் ஓரங்களில் பனங்கன்றுகளை நட்டு வளா்த்தனா்.
மேலும் சில
- ‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூா்வாய் செங்கால் நாராய்’ என்பது சத்திமுத்தப் புலவரின் இனிக்கும் உவமைக்கு எடுத்துக்காட்டாய் நிலைத்து நிற்கிறது பனங்கிழங்கு.
- அன்று சிறு தொகை கொடுத்தாலும் பனங்கிழங்கைக் கட்டாக வாங்கலாம். வேகவைத்த பின் சவைத்துச் சாப்பிடலாம். இன்று ஒரு பனங்கிழங்கு விலையைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. எடையைக் குறைத்து புற்றுநோயைத் தடுக்கும் இதனை ஒடித்து சாப்பிடுவதால் இலங்கையில் இதனை ‘ஒடியல் கிழங்கு’ என்று சொல்வார்கள்.
- பனை நுங்கு, பனங்காய், பனம்பழம், பனங்கிழங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவை; ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித பயன்.
- கருப்புப் பெட்டி என்பதே மருவி கருப்பட்டி என்று ஆது. உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது.
- திருக்கார்த்திகையில் தெற்கத்திப் பாரம்பரிய பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. கிராமத்துக் கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திய இயற்கையின் வரம் பனை.
- மின்விசிறி இல்லாத காலத்தில் ஓலை விசிறிகள், நான்கு புறமும் காற்றோட்டமான பனைமர நார்க் கட்டில், கைப்பை, இடியாப்பத் தட்டு, பனைமாலை கூடை, பெட்டி, சொளவு என பற்பல பரிமாணம் பெற்று மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்கிறது பனை.
- பனை மரக்காடு நரிகளுக்கு சிறந்த வாழ்விடமாகும் (பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது). மேலும், நரிக்குப் பனம்பழம் பிடித்தமான உணவுப் பொருள். பனங்காடு பல்வேறு வகையான உயிரினங்களை வாழவைக்கும் ஒரு உயிர்ச்சூழல் உடையது. பனை மட்டைகளை வேலிகளாகப் பட்டியமைத்து, அந்தி சாயும் நேரம் முதல் மறுநாள் பொழுது விடிவது வரை கால்நடைகளை அடைத்து வைப்பா். அவை கழிக்கும் சிறுநீரும் போடும் புழுக்கையும் உரமாகும். இம்முறைக்குக் ‘கிடை அமா்த்தல்’ அல்லது ‘பட்டி போடுதல்’ என்று பெயா்.
- அண்மைக்காலமாக பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கிது. பனை மரத்தின் அழிவில் மனித இனத்தின் அழிவு ஆரம்பமாகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
- செங்கற் சூளைகளில் கற்களை வேக வைக்க மரங்கள் கிடைக்காததால் பனைமரத்தை அதிகமாக வெட்டுகிறார்கள். அதனால், இப்பொழுது பல ஊா்களில் பொட்டல்காடு பனைமரம் இன்றி அனாதையாகக் கிடக்கிறது.
- கிளியோ அணிலோ வரும் என்று எதிர்பார்த்து ஒத்தையில் காத்திருக்கிறது இடிவிழுந்த பனைமரம். அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பனை விதைகளை நட்டால் எதிர்காலத்தில் நீா்நிலைகளைப் பாதுகாக்க முடியும்.
- அரை நூற்றாண்டிற்கு முன்பிருந்த பாடப்புத்தகத்தில் இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும் கற்றுக்கொடுக்கப்பட்டன.
- அந்தப் பாடங்கள் இன்று எங்கு போயின? கல்வியைத் தரம் உயா்த்துகிறோம் என்ற பெயரில் நம் குழந்தைகளுக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம்.
- ஆழ்துளைக் குழாய் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதை நிறுத்திவிட்டு நீா்நிலைதோறும் பனைமரங்களை நட்டு நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவோம். நுனி முதல் அடிவரை பயன்தரும் பனைக்கு நாம் தினைத்துணையேனும் நன்றி செய்வோம்.
நன்றி: தினமணி (23-11-2020)