TNPSC Thervupettagam

பயங்கரவாதத்தின் பழிவாங்கும் படலம் முடிவுக்கு வரட்டும்

September 1 , 2021 1066 days 500 0
  • கடந்த வியாழக்கிழமையன்று காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலும் அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களும் ஆப்கானிஸ்தானில் உடனடியாக அமைதியோ தீர்வோ தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதையே உணர்த்துகின்றன.
  • அதைக் காட்டிலும் முக்கியமானது, இவ்விரண்டு தாக்குதல்களிலும் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழக்க நேர்ந்திருப்பது.
  • வியாழக்கிழமையன்று நடந்த விமான நிலையத் தாக்குதலில் 170 ஆப்கானியர்களும் 13 அமெரிக்கப் படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.
  • இந்தத் தாக்குதலுக்குச் சர்வதேச ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே அமைப்பு பொறுப்பேற்றது.
  • அதைத் தொடர்ந்து, ஐஎஸ்கே இலக்குகளைக் குறிவைத்து நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமையன்று விமான நிலையத்தை நோக்கி இரண்டாவது தாக்குதலை நடத்த வந்த ஐஎஸ்கே பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
  • பிறிதொரு பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைச் சட்ட விரோதமானது என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
  • பயங்கரவாத அமைப்புகளுக்கிடையிலான உறவு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், அவர்கள் அனைவருமே அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தெரிகிறது.
  • திங்கட்கிழமையன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும் அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • ராக்கெட் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தவிர, இதர பயங்கரவாத அமைப்புகளாலும் மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
  • தவிர, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட நேர்கிறது. ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருப்பது, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தங்களது பாதுகாப்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்கியுள்ளது.
  • ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவுகின்ற பதற்றச் சூழல், இந்தியாவின் பாதுகாப்பில் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறியதைக் கொண்டாடும் விதமாகத் தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகச் செய்திகள் வருகின்றன.
  • தாலிபான்களை அனைத்து நாடுகளும் தொடர்புகொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் என்ற யோசனையை சீனா அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது.
  • அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கன் விஷயத்தைக் கையாள வேண்டும்.
  • ஆப்கானிஸ்தானில் உடைமைகளை இழந்து உயிர் பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்குக் கூடிய விரைவில் அமைதியான வாழ்வு அமையட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 09 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்