- பிரான்ஸின் நீஸ் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதும் பலர் காயமடைந்ததும் உலகையே கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிறது.
- இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸில் செச்சன்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பள்ளி ஆசிரியரைக் கொன்ற அதிர்ச்சியிலிருந்து பிரான்ஸ் மீளாத நிலையில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு நடந்திருக்கிறது.
- நீஸ் நகரத்தின் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் துனீஸியாவைச் சேர்ந்தவர்; அவர் இப்போது காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கிறார்; தாக்குதல் நடத்திய பிறர் தப்பித்து ஓடினாலும் படுகாயங்கள் காரணமாக இறந்துவிட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதம்தான் இதன் மூலசக்தி.
- பிரான்ஸ்தான் ஐரோப்பாவிலேயே அதிக அளவுக்கு முஸ்லிம் சமூகத்தினரைக் கொண்ட நாடு; தாராளத்துக்குப் பேர்போன அந்நாடு சமீப காலமாக இப்படி மத அடிப்படைவாதத்துக்கு இலக்காகிவருவது பயங்கரவாதிகள் எந்த மதத்தின் பெயரால் தாக்குதலை நடத்துகிறார்களோ, அதே மதத்தினருக்குத்தான் பெரும் கேட்டை உருவாக்குவதாக மாறிக்கொண்டிருக்கிறது.
- ஆட்சேபத்துக்கு உரிய வகையிலான கேலிச்சித்திரங்களை மறுபடியும் பிரசுரிப்பது என்று ‘சார்லீ ஹெப்டோ’ பத்திரிகை எடுத்த முடிவின் பின்னணியில் உருவெடுத்திருக்கும் தாக்குதல் இது.
- என்றாலும் கடந்த 8 ஆண்டுகளாக 200 பேருக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட வன்முறைத் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான் இந்நிகழ்வையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
- பிரான்ஸின் வலியும் கோபமும் புரிந்துகொள்ளக் கூடியவை; பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு வளைந்துகொடுக்க மாட்டோம் என்று அந்நாட்டின் தலைவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர்.
- கூடவே கருத்துச் சுதந்திரத்துக்கும் பிரான்ஸ் அரசும் பொதுச் சமூகமும் உறுதிப்பட துணை நிற்பது உத்வேகம் அளிக்கிறது.
- எந்த மதத்தின் பெயரால் வன்முறைகள் ஏவப்பட்டாலும், அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய, மத அடிப்படைவாதிகளைத் தனிமைப்படுத்தக் கூடிய செயல்பாட்டில் ஒட்டுமொத்த சமூகமும் இணைந்துகொள்ள வேண்டிய நாட்களில் இன்றைய உலகம் இருக்கிறது.
- மத அடிப்படைவாதிகள் இந்த உலகை நாகரிகங்களின் மோதல் களமாகக் காண்பவர்கள். மதத்தைப் பொறுத்தவரை குறுகலான பார்வை கொண்ட அவர்கள், தங்களின் பார்வையுடன் மாறுபடும் எவர் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடத் தயங்காதவர்கள்.
- எந்த மதத்திலும் இவர்களுடைய எண்ணிக்கை சொற்பமே என்றாலும், தாங்கள் சார்ந்த மதத்துக்கு மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பெரும் கேட்டை விளைவிப்பவர்களாகிவிடுகிறார்கள். ஆக, ஒட்டுமொத்த சமூகமாகவும் இதை எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது.
- பிரான்ஸில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அல்கொய்தா, ஐஸ் போன்ற அமைப்புகளின் சித்தாந்தத்தால் உந்துதல் பெற்றவர்கள்.
- பிரான்ஸில் பிளவுபட்டுக் கிடக்கும் சமூகங்களுக்கிடையே இந்தத் தாக்குதல்களெல்லாம் மேலும் பிளவை அதிகரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை; மேலும், தீவிர வலதுசாரிகள் இஸ்லாமிய வெறுப்பை மேலும் முடுக்கிவிடவும் இந்தத் தாக்குதல்கள் வழிவகுக்கும்.
- நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சமூகங்கள் இடையே மத அடையாளங்கள் சார்ந்து வெறுப்பு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
- இதுதான் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் முன்னுள்ள பெரும் சவால்.
- ஜனநாயகம், மதச்சார்பின்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று குடிமையிய மதிப்பீடுகளுக்குப் பேர் போன பிரான்ஸுக்கு அந்த வல்லமை நிறையவே இருக்கிறது.
- இந்தப் போரில் பிரான்ஸ் வெல்வது ஒட்டுமொத்த உலகுக்குமே மிகவும் முக்கியமானது.
நன்றி : இந்து தமிழ் திசை (03-11-2020)