TNPSC Thervupettagam

பயங்கரவாதத்தை ஒழிக்க பன்மைத்துவத்தை வலுப்படுத்த வேண்டும்

November 11 , 2020 1355 days 618 0
  • ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டிருப்பது, ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
  • பிரான்ஸில் பாரீஸ் புறநகர்ப் பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது, நீஸ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் இறந்தது ஆகியவற்றை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வியன்னாவில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குஜ்திம் பெஜ்ஸுலாய் (வயது 20) அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
  • தேவாலயம் ஒன்றின் அருகே அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, காவல் துறையினரால் சுடப்பட்டார். ஏற்கெனவே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகத் தண்டிக்கப்பட்டவர் அவர்.
  • பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஆஸ்திரியாவிலும் பாதுகாப்பில் விழுந்துள்ள ஓட்டைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது.
  • இளைஞர்களிடம் பரவிவரும் பயங்கரவாதத்தை எப்படிச் சமாளிப்பது, ஐரோப்பாவின் சமூக ஒருங்கிணைப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகளை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
  • ஆஸ்திரியாவின் மரபியக் கட்சியைச் சேர்ந்த அதிபர் செபாஸ்டியன் குர்ஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற சரியான செய்தியையே இப்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
  • இந்தப் போரானது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலானது அல்ல, ஆஸ்திரியர்களுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையிலானது அல்ல, நாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  • ஆட்சியில் அமர்வதற்காக, இஸ்லாமிய வெறுப்பு கொண்ட மிகவும் தீவிரமான வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சியுடன் முதல் தடவையாக 2017-ல் கூட்டணி வைத்துக் கொண்டவர் குர்ஸ்.
  • மாற்று அரசியல் பேசும் பசுமைக் கட்சியுடன் இணைந்து தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பயங்கரவாதத்துக்கு நாட்டின் வலுவான எதிர்வினையைக் காட்டுவதற்காகத் தற்போது மேலும் தனது அரசியல் கூட்டணியை விஸ்தரித்துள்ளார்.
  • பயங்கரவாதிகள் சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்காக வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் பொதுமக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதால், இஸ்லாமிய வெறுப்பு மென்மேலும் வளர்கிறது. ஐரோப்பாவில் உள்ள தேசியவாதக் கட்சிகள் இத்தகைய நிகழ்வுகளைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
  • ஐரோப்பாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மதிப்பீடுகளின் மீதான இருமுனைத் தாக்குதல் இது. பயங்கரவாதிகளும் இதையே விரும்புகின்றனர்.
  • பிரான்ஸ், ஆஸ்திரியா போன்று பயங்கரவாதத்தால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளை அவர்களின் வழியில் தொடர்வதற்கு அனுமதிக்கவே கூடாது.
  • பயங்கரவாதத் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும், பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். கருத்தியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உரிய பதிலடிகளைக் கொடுக்க வேண்டும்.
  • அதேநேரத்தில், பன்மைத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களின் ஒத்துழைப்போடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (11-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்