TNPSC Thervupettagam

பயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது

August 5 , 2019 1794 days 846 0
  • சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆபத்தானது.
  • ஒரு தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்தத் திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.
  • தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது மிக ஆபத்தானது. பயங்கரவாதி என்ற முத்திரையால் தனிநபருக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள், ஒரு அமைப்புக்கு ஏற்படுவதைவிட அதிகம்.
  • மேலும், கைதுக்கும் சிறைக்காவலுக்கும் அந்தத் தனிநபர்கள் உள்ளாக்கப்படுவார்கள்; நீதிமன்றத்திலிருந்து ஜாமீன் பெற்ற பிறகும் அவர்களின் பயணங்களும் செயல்பாடுகளும் முடக்கப்படும்; கூடவே, பயங்கரவாதி என்ற முத்திரை வேறு.
  • ஆகவே, குழுக்கள், அமைப்புகளைவிட தனிநபர்கள் இந்தப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான நடைமுறைகள் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது.
  • தவறான முத்திரை குத்துதல் என்பது ஒரு மனிதரின் புகழ், பணிகள், வாழ்வாதாரம் அனைத்துக்கும் சரிசெய்ய முடியாத அளவில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிடும்.
  • சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அரசு பயங்கரவாதிகளையும் அவர்களின் அனுதாபிகளையும் சும்மா விடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்டுகள்’ என்ற குறிப்பையும் தனது பேச்சினிடையே இழையோட விட்டார்.
  • இதெல்லாமே இந்தச் சட்டத் திருத்தம் எதிர்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைத் தெரிவிக்கின்றன.
  • கூட்டாட்சிக்கு எதிரான அம்சங்களை இந்த மசோதோ கொண்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வாதிட்டிருக்கின்றனர்.
  • பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுவோரின் சொத்துகளைப் பறிமுதல்செய்யும் உரிமையைத் தேசிய விசாரணை முகமைக்குக் கொடுத்திருப்பது மாநில அரசின் உரிமைகள் மீதான மற்றுமொரு தாக்குதல். இதுவரை மாநிலக் காவல் துறை தலைமைதான் அதற்கு அனுமதி வழங்கிவந்தது.
  • மேலும், இன்னொரு பிரிவின்படி என்ஐஏ ஆய்வாளர்களே பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பார்கள். இதுவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரோ காவல் உதவி ஆணையரோ விசாரித்துவந்தார்கள். அதெல்லாம் இனி இருக்காது.
  • 2004-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களே பயங்கரவாதச் செயல்களைத் தண்டிக்கவும், அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் குழுக்களை ‘பயங்கரவாத அமைப்பு’களாக அறிவிக்கவும் போதுமானவையாக இருந்தன.
  • நாடாளுமன்றம் அதில் 2008-லும் 2013-லும் சில திருத்தங்கள் செய்து பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட ஒரு சட்டரீதியான சட்டகத்தை வலுப்படுத்தியது. பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதில் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பதிலோ, பயங்கரவாதச் செயல்கள் பொறுத்துக் கொள்ளப்படக் கூடாது என்பதிலோ துளியும் சந்தேகம் இல்லை.
  • ஆனால், குடிமக்கள் மீது சட்டத்தை ஏவும்போது அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள கடப்பாட்டை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி – இந்து தமிழ்திசை (05-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்