TNPSC Thervupettagam

பரவுகிறது அம்மை: தடுப்பூசி

September 25 , 2019 1890 days 1066 0
  • இந்த ஆண்டு உலக சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பத்து விஷயங்களில் ஒன்றாக, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காட்டும் தயக்கம் இருக்கிறது.
  • சமூக வலைதளங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்பட்ட வதந்திகளால், அதை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மறுக்கிறார்கள்.
தடுப்பூசி
  • இதனால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் கட்டுக்குள் இருந்த அம்மை நோய் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.
  • தடுப்பூசி மருந்துகள் எல்லா நாடுகளிலும் போதிய கையிருப்பு இருந்தும், இலவசமாக அதைப் போட்டுவிட அரசுகள் தயாராக இருந்தும் இந்நோயை மக்கள் தங்கள் அறியாமை காரணமாக வரவழைத்துக்கொள்வது மிகவும் துயரமானது.
புள்ளிவிவரம்
  • 2019-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 182 நாடுகளிலிருந்து 3,65,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இதே காலத்தில் அம்மைக்கு ஆட்பட்டோரின் எண்ணிக்கை 900% அதிகம்.
  • ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர், நைஜீரியாவில் இந்த எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதே காலத்தில் 90,000 பேருக்கு அம்மை போட்டிருந்தது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தமுள்ள 53 நாடுகளில் 49 நாடுகளைச் சேர்ந்த 1,74,000 பேருக்கு அம்மை போட்டிருக்கிறது. ‘அம்மை இல்லாத நாடுகள்’ என்ற பட்டியலிலிருந்து பிரிட்டன், கிரீஸ், செக் குடியரசு, அல்பேனியா விலக நேர்ந்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 வயது முதல் 34 வயது வரையுள்ளவர்கள் மத்தியில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, மணல்வாரி அம்மைகளுக்குத் தடுப்பூசி போடுவதால் எந்த நன்மையும் இல்லை என்ற கருத்து எப்படியோ பரவியுள்ளது.
  • இந்தத் தடுப்பூசிகள் நோயைத் தடுக்கும் என்பதை இந்த வயதுக்காரர்கள் நம்ப மறுக்கின்றனர்.
இந்தியாவில்....
  • தடுப்பூசி போடுவதால் அம்மை வராது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளைச் சேர்ந்தவர்களில் 52% பேர் மட்டுமே உறுதியாக நம்புகின்றனர். 38% பேர் ‘தடுப்பூசிகள்தான் அம்மையைப் பரப்புகின்றன’ என்றும் நம்புகின்றனர்.
  • இந்தியாவிலும் இதே போன்ற கருத்துள்ளவர்கள் உள்ளனர். இந்தியாவின் 121 மாவட்டங்களில் 45% குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட முடியவில்லை. பெற்றோரே தவிர்த்திருக்கின்றனர். 24% பேர் ஊசி போட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தனர்.
  • தடுப்பூசிகள் பற்றி இவ்வளவு பேருக்கு அவநம்பிக்கையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது வியப்பானது. அம்மைக்காகப் போடப்படும் தடுப்பூசிகள் அந்நோயோடு வேறு சில தொற்று நோய்களையும் தடுக்கின்றன.
  • தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அம்மை நோயை வரவழைத்துக் கொண்டால், அந்த நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு செல்களைக் கொன்று, தொற்றக்கூடிய இதர நோய்களுக்கு உடலை இரையாக்கிவிடுகின்றன.
  • சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வாதங்களை ஏற்று அறியாமையில் மூழ்கும் போக்கு நல்லதல்ல. இப்படியான வதந்திகளைத் தடுப்பதிலும் மக்களை அறிவுமயப்படுத்துவதிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்