TNPSC Thervupettagam

பரவும் பறவைக் காய்ச்சல்! | பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை

January 12 , 2021 1470 days 617 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து தேசம் இன்னும் முற்றிலுமாக விடுபடவில்லை என்றாலும்கூட, ஓரளவுக்கு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.
  • விடியலுக்குக் காத்திருக்கும் வேளையில், பேரிடியாய் விழுந்திருக்கிறது பரவி வரும் பறவைக் காய்ச்சல் குறித்த செய்தி. அண்டை மாநிலமான கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா அருகிலுள்ள பா்வாலா என்கிற பகுதிதான் ஆசியாவிலேயே மிக அதிகமாக கோழிப் பண்ணைகள் காணப்படும் பகுதி. நூற்றுக்கணக்கான கோழிப் பண்ணைகளில் ஏறத்தாழ ஒரு கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் பறவைக் காய்ச்சலால் இங்கே உயிரிழந்திருக்கின்றன.
  • ஹரியாணாவைத் தொடா்ந்து பறவைக் காய்ச்சல் ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பரவியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் வேதனைக்குரிய செயல்பாடு என்னவென்றால், உடனடியாக பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பதுதான்.
  • பா்வாலாவில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலுள்ள சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டபோது, போதுமானதாகவும் முறையாக அனுப்பப்படாததாகவும் இருந்ததால் மீண்டும் ரத்த மாதிரியை அனுப்ப நோ்ந்தது.
  • கால விரயம், ஏற்படுத்திய பாதிப்பைத் தவிா்த்திருக்கலாம். ஹரியாணா மாநில அதிகாரிகள் செய்த குளறுபடிகள் போதாதென்று, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தன் பங்குக்கு முதலில் பறவைக் காய்ச்சலை உறுதி செய்து, பிறகு அதை மறுத்து வெளியிட்ட அறிக்கை குழப்பத்தை மேலும் அதிகரித்தது.
  • இந்தியாவில் 2005-06-இல் மகாராஷ்டிரம், மத்திய பிரதேச மாநிலங்களில் பல லட்சம் கோழிகள் எந்தவிதக் காரணமும் இல்லாமல் செத்து விழுந்தபோதுதான் பறவைக் காய்ச்சல் குறித்த விவரம் முதலில் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, இரண்டு மூன்று முறை இதேபோல இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பேரழிவை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது.
  • இந்த முறை கவலையளிக்கும் செய்தி என்னவென்றால், பறவைக் காய்ச்சல் வழக்கத்தைவிட அதிகமாக இந்தியாவில் பரவி இருக்கிறது என்பதுதான்.
  • குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்றுப் பரவல் பல பறவைகளின் உயிரை பலி வாங்கிவிட்டன என்றால், சத்தீஸ்கா், தில்லி, மகாராஷ்டிர மாநிலங்களில் நோய்த்தொற்று அறிகுறிகள் தொடங்கிவிட்டன.
  • ஹிமாசல பிரதேசத்தில் கோழிகள், முட்டைகள் விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. போபாலில் உள்ள விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் ராஜஸ்தான் ஜலாவா் மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட இறந்துபோன காகங்களில் பறவைக் காய்ச்சல் இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால், பறவைக் காய்ச்சல் கோழிகளுடன் நின்றுவிடவில்லை என்பது தெரிகிறது.
  • ஹிமாசல பிரதேசம் பாலம்பூரிலுள்ள விலங்கியல் கல்லூரி, அந்த மாநிலத்திலுள்ள ஏரிகளில் ஆய்வுகளை நடத்தியது. அதன்படி, பான்ங் ஏரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயங்களுக்கு, உலகெங்கிலுமிருந்து பறந்து வரும் பறவைகளில் 2,500-க்கும் அதிகமான பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறந்திருப்பதாக அரசிடம் தெரிவித்திருக்கிறது.
  • பறவைக் காய்ச்சல் கிருமிகளை வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் மட்டுமல்லாமல், வனப்பகுதிகளில் காணப்படும் பறவைகளும்கூட பரப்புவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
  • எச்5என்8 பிரிவிலுள்ள தீநுண்மிகள்தான் இந்த முறை பரவி வரும் பறவைக் காய்ச்சலுக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காய்ச்சலின் மிதமான பாதிப்பு என்பது முட்டை உற்பத்தியை பாதிப்பதாக இருக்கும் என்றால், கடுமை அதிகரித்தால் பறவைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.
  • அண்டை மாநிலமான கேரளத்தை பறவைக் காய்ச்சல் கடுமையாக பாதித்திருக்கும் நிலையில், தமிழகம் பயப்படாமல் இருக்க முடியாது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் ஏறத்தாழ 50,000-க்கும் அதிகமானோா் வாத்து வளா்ப்பில் ஈடுபடுகிறாா்கள்.
  • அந்தப் பண்ணைகளில் உள்ள வாத்துக்களை கொல்வதற்கும், முறையாக அடக்கம் செய்வதற்கும், இழப்பீடு வழங்குவதற்கும் கோடிக்கணக்கில் செலவாகப் போகிறது. வாத்துகளுக்கு காப்பீடு பெறப்பட்டிருந்தால் இதில் பெரும் பகுதியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியிருக்கும். கால்நடைகளைப் போலவே, வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் காப்பீட்டுத் திட்டம் முன்பு இருந்தது.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக கேரள அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. இதுபோன்ற தவறான முடிவுகள் மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்ளும்போதுதான் வெளிவருகின்றன.
  • முன்பெல்லாம் கேரளத்தில் குஞ்சு பொரிக்கும் வாத்துகள் அங்கேயே வயல்வெளிகளில் விட்டு வளா்க்கப்பட்டதுபோய், இப்போது பண்ணைகளில் வளா்க்கப்படுகின்றன. முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக லட்சக்கணக்கில் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றன. அதனால், கேரள மாநிலத்திலுள்ள வாத்துகளை பாதித்திருக்கும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவுவது தவிா்க்க முடியாதது என்று தோன்றுகிறது.
  • பறவைகள் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதை சோதனைச் சாவடிகள் மூலம் தடுத்துவிட முடியாது. உலகெங்கும் வானத்தில் பறந்து திரியும் பறவைகளால் பரவுகின்ற நோய்த்தொற்று பறவைக் காய்ச்சல் என்பதை நினைவில் கொண்டு கவனமுடன் இருக்க வேண்டியது நமது கடமை.

நன்றி: தினமணி  (12- 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்