TNPSC Thervupettagam

பரிசோதனைகள் முழுமையடையாத தடுப்பூசிகளுக்கான இந்தியாவின் அவசர அனுமதி சரியா?

January 7 , 2021 1475 days 643 0
  • அவசரநிலைப் பயன்பாடாக கரோனா தடுப்பூசியைப் போடுவதற்கு பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவும் தயாராகிவருகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும், ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிப்பது புதிய நடைமுறை. அந்நிய நாடுகளில் உள்ளதைப் போல் தெளிவான விதிமுறைகள் ‘இந்திய மருந்து ஒழுங்குமுறைச் சட்ட’த்தில் இல்லை.
  • இந்தப் போதாமைகளைப் பயன்படுத்திக்கொண்டு, தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி கொடுத்துவிடக் கூடாது என்று 17.12.2020 தேதியிட்ட ‘இந்து தமிழ் திசை’யில், ‘கூடாது தடுப்பூசிக்கு அவசர அனுமதி’ என்ற கட்டுரையில் இதே பக்கத்தில் நான் எழுதியிருந்தேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
  • முக்கியமாக, 3-ம் கட்ட ஆய்வு முடிவுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் இந்தத் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்திருப்பது மருத்துவ உலகில் வலுத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. பொதுவாக, ஆய்வுக் கட்டத்தில் இருக்கும் ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பும் நோய்த் தடுப்புத் திறனும் முதலில் முயல், சுண்டெலி உள்ளிட்ட விலங்குகளிடம் பரிசோதிக்கப்படும்.
  • அந்த முடிவுகள் திருப்தியாக இருந்தால், அடுத்த கட்டத்தில் சிறு மனிதக் குழுவில் அது பரிசோதிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில்தான் அதன் செயல்திறன் பரிசோதிக்கப்படும்.
  • இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்; புதிய தடுப்பூசியின் உண்மையான செயல்திறன் உறுதிப்படும்.

அனுமதிக்கு ஏன் அவசரம்?

  • நடந்துள்ளது என்னவென்றால், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2-ம் கட்ட ஆய்வில் 400 தன்னார்வலர்களில் 185 பேரின் நோய்த் தடுப்புத் திறன் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் 3-ம் கட்ட ஆய்வு இன்னும் முடியவில்லை.
  • அதனால் இதன் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லை. ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி நவம்பர் மத்தியில்தான் 26 ஆயிரம் தன்னார்வலர்கள் கொண்ட மூன்றாம் கட்ட ஆய்வுக்குள் நுழைந்திருக்கிறது. இதன் முடிவுகள் மார்ச்சில்தான் தெரியவரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். அப்படியிருக்கும்போது, ‘அனுமதிக்கு ஏன் இந்த அவசரம்?’ என்பது வல்லுநர்களின் கேள்வி.
  • அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக, சீனாவில் உருவாகும் ‘அடினோ வைரஸ் ஏந்துபொருள்’ தடுப்பூசி 3-ம் கட்ட ஆய்வுக்கு முன்னரே அவசரநிலைப் பயன்பாட்டுக்கு வந்ததை ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
  • இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சீனாவில் அந்தத் தடுப்பூசி ராணுவத்தினரிடம் மட்டுமே பரிசோதிக்கப்பட்டது. ஆனால், ‘கோவேக்ஸின்’, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், இப்படி அவசரகதியில் அனுமதி அளிக்க என்ன அவசியம் என்ற கேள்வியும் எழுகிறது.

வெளிப்படைத் தன்மை இல்லை!

  • அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) பைசர், மாடர்னா நிறுவனங்களின் ‘எம்ஆர்என்ஏ தடுப்பூசி’களுக்கு அவசரகால அனுமதி அளித்தது. அப்போது அந்தத் தடுப்பூசிகளைப் பரிந்துரை செய்த வல்லுநர்கள் மேற்சொன்ன நிறுவனங்கள் தங்களிடம் ஒப்படைத்த மூன்று கட்டத் தரவுகளைப் பொதுவெளியில் காண்பிக்கும் வகையில் அந்த நிகழ்வை ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பினர்.
  • பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தனர். அதுபோல் பிரிட்டன் அரசும் அந்த இரண்டு தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் நாட்டில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டுப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியது.
  • அதனால், அங்கு சர்ச்சைகள் இல்லை. மாறாக, இந்தியாவில் அம்மாதிரியான வெளிப்படைத் தன்மை இல்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினையே. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டதை அறிவித்த அன்று, ஊடக நிருபர்கள் அத்தடுப்பூசிகளின் செயல்திறன் தொடர்பாகக் கேட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லப்படாமலேயே கூட்டம் முடிக்கப்பட்டது.

முரண்பட்ட தகவல்கள்

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பலராம் பார்கவா இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது, ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த இறுதிக் கட்டத் தரவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது உண்மைதான் என்றாலும், சில நிபந்தனைகளுடன் அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் ஆய்வு அடிப்படையில்தான் (Clinical trials) இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
  • இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றது. அவர் கருத்துப்படி இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி நடைமுறை 3-ம் கட்ட ஆய்வுக்குச் சமமானது.
  • அப்படிப் பார்த்தோமானால் சில அறிவுசார் கேள்விகள் நம்மிடம் எழுகின்றன. ஓர் ஆய்வுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களையும் ‘பலிகடா’ ஆக்குவது சரியா?
  • ஆய்வில் ‘வேஷம்போட்ட தடுப்பூசி’ (Placebo) செலுத்திக்கொண்டவர்கள் இல்லாமல் எப்படி இந்தத் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒப்பிட முடியும்? புதிய தடுப்பூசிக்குப் பக்கவிளைவுகள் உண்டா என்பதை அறிய பயனாளிகளை யார், எப்படித் தொடர்ந்து கண்காணிக்கப்போகிறார்கள்? வழக்கத்தில், ஆய்வுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்தின் செலவை அந்த நிறுவனம்தான் ஏற்க வேண்டும்.
  • ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராகிறதே, ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.
  • ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியாவிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, ‘கரோனா பாதிப்பு அதிகரித்தால், கூடுதல் தேவைக்காக மட்டும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியைப் பயன்படுத்த இருப்பதாகவும், இது ஒரு ‘மாற்று மருந்து’தான் என்றும் கூறியுள்ளார்.
  • இந்தக் கருத்தைக் கடுமையாக மறுத்துள்ளார், கிருஷ்ணா எல்லா. ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் மற்ற தடுப்பூசிகளுக்கு நிகரானதுதான். ‘மாற்று மருந்து’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். மேலும், ‘பிரிட்டன் வைர’ஸுக்கு எதிராக இது செயல்படும் என்ற அரசின் தகவலுக்கும் ஆதாரம் இல்லை.
  • இம்மாதிரியான முரண்பட்ட தகவல்கள் தடுப்பூசிகளின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தளரச்செய்வதாகவும், இந்திய ஆய்வுக் கட்டமைப்பின் மீதே சந்தேகப்பட வைப்பதாகவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
  • ஏற்கெனவே இந்தியாவில், பல்வேறு நிலையில் உள்ள 242 மாவட்டங்களில் 18,000-க்கும் அதிகமானவர்களிடம் டிசம்பரில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டதில் 69% பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
  •  இந்தச் சூழலில், ஒன்றிய அரசு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமானத்தின் அடிப்படையில் அனுமதி கொடுத்த விதம் சந்தேகத்துக்கு உட்படுவதால், பொதுவெளியில் பெரிய அளவில் தடுப்பூசிகள் புறக்கணிக்கப்படலாம். இதனால், இந்தியா கரோனாவுக்கு எதிராக இதுவரை வெற்றிகரமாக நடத்திவந்த யுத்தத்துக்கே பலனில்லாமல் போகலாம்.

என்ன செய்யலாம்?

  • கரோனா தடுப்பூசிகளின் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமானால், தடுப்பூசிகளின் அனைத்துக் கட்ட ஆய்வுத் தரவுகளையும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச வைரஸ் வல்லுநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு உரிய பதில்கள் தரப்பட வேண்டும். அவர்கள் கருத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அந்தத் தடுப்பூசிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
  • அடுத்து, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் நாம் பார்த்ததுபோல், முதல் கட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பிரபலங்களும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். அவர்கள் செய்தி ஊடகங்களில் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து உறுதி கொடுக்க வேண்டும்.
  •  அடுத்த கட்டத்தில் கரோனா முன்களப் பணியாளர்கள், முதியோர் என வரிசைப்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுமானால் உரிய நிவாரணத் தொகைக்கும் அரசு உறுதியளிக்க வேண்டும்.
  • அப்போதுதான் உலகின் பெரிய தடுப்பூசித் திட்டம் என்று பிரதமர் சொல்வது முழுமையான செயலுக்கு வரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 -01 -2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்