TNPSC Thervupettagam

பரிசோதனைக்கு எழுபது உயிர்கள் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

November 1 , 2023 431 days 259 0
  • யாஹியா அயாஷ், ஹமாஸில் சேரும் போதே தளபதியாகச் சேரவில்லை. சாதாரண வீரராகத்தான் ஹமாஸின் ராணுவத்துக்குள் நுழைந்தார். அப்போது ராணுவமும் பெரிதல்ல. சில நூறு வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் அயாஷ் சாதித்த சில செயல்களும் அவர் அளித்த யோசனைகளும் அவரை மிக விரைவில் ராணுவத் தலைமை பொறுப்புக்கு உயர்த்தின. முக்கியமாக அன்றைக்கு ஹமாஸுக்கு ஆயுதங்கள் கிடைத்த வழி சார்ந்து அவர் சொன்ன சில மாற்று யோசனைகள்.
  • தொடக்கத்தில் ஹமாஸ் சிரியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் ஆயுதங்களைத் தருவித்தது. சிரியாவாவது பரவாயில்லை. பக்கத்து நாடு. ஈரானில் இருந்து கடல் மார்க்கமாகவே அவர்கள் ஆயுதங்களை வரவழைத்தார்கள். இஸ்ரேலியக் கடற்படைக்குத் தெரியாமல் காசா கடல் பரப்பில் அவற்றை (ஜம்போ சைஸ் கேப்ஸ்யூல் வடிவிலான கன்டெய்னர்களில்) இறக்கி, ஊருக்குள் கொண்டுவரப் பெரும் பாடாக இருந்திருக்கிறது. அப்படிக் கொண்டு வரும் ஆயுதங்களைச் சேகரித்து வைப்பதற்காகத்தான் முதல் முதலில் சுரங்க அறைகளை அமைக்கத் தொடங்கினார்கள். ஆயுதங்களின் வரத்து அதிகரித்த போது சுரங்கங்களின் நீளம் கூட்டப்பட்டது.
  • ஆனால் வருகிற ஆயுதங்களைத் தரப் பரிசோதனை செய்யும் போது அநேகமாகச் சரிபாதி உதவாத சரக்குகளாகப் போய்க் கொண்டிருந்தன. கள்ளச் சந்தை ஆயுதங்களுக்கு கேரண்டி, வாரன்டியெல்லாம் கேட்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, அவற்றின் விலையும் ஒரிஜினல் விலைக்குக் குறைந்தபட்சம் இரு மடங்காக இருந்தது.
  • அயாஷ் ஒரு வழி சொன்னார். நாம் ஏன் ஆயுதங்கள் வாங்க வேண்டும்? நமக்கு வேண்டிய ஆயுதங்களை நாமே தயாரிப்பதுதான் நீண்ட நாள் நோக்கில் சரியாக இருக்கும். அவருக்கு ஆயுதங்கள் தயாரிப்பில் சிறிது அனுபவம் இருந்தது. தவிர, ஆயுதத் தயாரிப்பாளர்கள் பலரோடு நெருக்கமான தொடர்பும் இருந்திருக்கிறது. ஹமாஸுக்குத் தேவையான ஆயுதங்களை காசாவிலேயே தயாரித்துத் தர, தேவையான வல்லுநர்களைக் காசாவுக்கே வரவழைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
  • சொன்னதுடன் நில்லாமல் அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார். 1992-ம் ஆண்டு தொடக்கம் முதல் 1993-ம்ஆண்டின் தொடக்கம் வரை ஹமாஸ் தனது சொந்த ஆயுதத் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. அந்நாட்களில் ஹமாஸின் அரசியல் பிரிவினர்தாம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்களே தவிர, ராணுவத்தினர் அல்லர்.
  • ஒரு பக்கம் யாசிர் அர்ஃபாத் எப்படியாவது இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை உலகறிய நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்தார். மறுபக்கம், முற்றிலும் கெட்டுக் குட்டிச் சுவராகியிருந்த பெயரைச் சிறிதாவது காப்பாற்றி வைத்துக் கொள்ள அர்ஃபாத்துக்குச் சிறிது இணங்கிப் போகவேண்டிய கட்டாயத்தில் இஸ்ரேலிய அரசும் இருந்தது. அமெரிக்க மத்தியஸ்தம், ஓஸ்லோ ஒப்பந்தம், உலக நாடுகளின் ஆதரவு என்று அமோகமாக ஒரு நூதனத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
  • இது எதுவுமே உருப்படாது; தயவு செய்து அமைதி ஒப்பந்த யோசனையைக் கைவிடுங்கள் என்று ஷேக் அகமது யாசின், யாசிர் அர்ஃபாத்திடம் சொல்லிப் பார்த்தார். சுதந்திர பாலஸ்தீன் அமைவதற்கு அமைதியைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று அர்ஃபாத் சொன்னார். ஹமாஸ், கொதித்துப் போனது.
  • ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு நம் வழிக்குகந்த எதிர்ப்பைக் காட்டியே தீர வேண்டும் என்று ஹமாஸில் அன்றைக்கு இருந்த அத்தனைப் பேரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். மிகச் சரியாக அதே சமயத்தில் யாஹியா அயாஷின் சுதேசி ஆயுதத் தயாரிப்புப் பணிகள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கி, முதல் சுற்றுத் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தயாராயின. உதிரி பாகங்கள் ஒருசில மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வந்திருந்தன. தோட்டாக்கள் மற்றும் குண்டுகளுக்கான மூலப் பொருட்களை யாஹியா சிரியா, லெபனான் மற்றும் ரஷ்யாவில் இருந்து (இதில் மட்டும் சந்தேகம் உள்ளது. தான்சானியாவாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.) தருவித்திருந்தார். அவரது நண்பர்களான ஆயுதத் தயாரிப்பு வல்லுநர்களுடன் ஹமாஸின் வீரர்களைப் பணியாற்ற வைத்துத் தானே முன்னின்று அவர் தயாரித்த ஆயுதங்களைப் பரீட்சை செய்து பார்த்துவிட்டுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று நினைத்தார்.
  • ஏழு இலக்குகளைத் தீர்மானம் செய்தார். ஏழும் இஸ்ரேலிய இலக்குகள். குறிப்பிட்ட காலக்கெடுவைத் தமக்குத் தாமே நிர்ணயித்துக் கொண்டு, ஏழு இடங்களிலும் அடுத்தடுத்துத் தாக்குதல்களை மேற்கொண்டார். எந்தக் குண்டும் ஏமாற்றாமல் வெடித்தது. எழுபது பேர் பலி. அங்கே ஓஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான அதேநேரம். ஒப்பந்தத்தை ஹமாஸ் முற்றிலுமாக எதிர்க்கிறது என்பதை இந்த மொழியில் அவர்கள் பதிலாகத் தந்தார்கள். அதற்கு முன் ஹமாஸ் இப்படியெல்லாம் செய்து பார்த்திராத இஸ்ரேல் அரசு, உண்மையிலேயே திகைத்துப் போனது. யாரால் இது, எதனால் இது என்று பதறிக் கொண்டு ஆளைத் தேடத் தொடங்கினார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்