TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப மறுசிந்தனை அவசியம்

December 16 , 2020 1497 days 655 0
  • பாரீஸ் ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகளை நினைவு கூரும் ‘பருவநிலை லட்சியம் குறித்த மெய்நிகர் மாநாட்டை ஐநா நடத்தியிருக்கிறது.
  • இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியா கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்தும் பாதையில் தான் நடைபோட்டுக்கொண்டிருப்பதாக உறுதிபடக் கூறியது.
  • ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம் சமீபத்தில் கரிம உமிழ்வு இடைவெளி குறித்த அறிக்கை 2020-ஐ வெளியிட்டது.
  • கரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பாரீஸ் ஒப்பந்தம் தொடர்பாகத் தங்கள் நிபந்தனையற்ற ஈடுபாட்டைச் செலுத்தும் ஒன்பது ஜி20 நாடுகளின் பட்டியலை அந்த அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது வரவேற்கத் தகுந்தது.
  • உலகின் கரிம உமிழ்வில் ஜி20 நாடுகள் 78%-க்கு காரணமாக இருக்கின்றன. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சில நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் இலக்குகளை மேலும் தாங்கள் விஸ்தரிக்கப்போவதாக இந்த மாநாட்டில் உறுதிகூறின.
  • பெருந்தொற்றின் காரணமாகப் பசுங்குடில் விளைவு வாயு உமிழ்வு சற்றே குறைந்திருக்கிறது. இது எல்லா நாடுகளும் தங்கள் வளர்ச்சிப் பாதைகளை மறு ஆய்வு செய்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது.
  • முன்னுதாரணமில்லாத இந்த நிகழ்வு உலகமெங்கும் உள்ள நாடுகள் தங்கள் பொருளாதாரத்துக்கு புத்துயிர் தருவதற்கு நிதியூட்டம் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்தியாவுக்கும் இந்தத் தருணத்தில் ஒரு சவால் எழுந்துள்ளது. பெருந்தொற்று மறுவாழ்வு நடவடிக்கைகளை மரபான கொள்கைகளிலிருந்து விலகி பசுமைக் கொள்கைகளைச் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதாக இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுக்கொண்டார். பாரீஸ் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை2030-ல் 250 கோடி டன்களிலிருந்து 300 கோடி டன்கள் வரை கார்பன் டையாக்ஸைடை கிரகிக்கக்கூடிய அளவுக்கு இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரிக்க வேண்டும்.
  • இதில் உயிர்ப்பன்மையைப் பாதுகாத்தல், பருவநிலையில் நல்ல தாக்கத்தைச் செலுத்துதல், உள்ளூர்ச் சமூகங்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல் என்று பல்வேறு நன்மைகளும் அடங்கியுள்ளன. ஆனால், வனப்பரப்பை விஸ்தரித்தல் குறித்து மாநிலங்கள் அளித்த தரவுகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
  • 100 ஜிகாவாட்கள் சூரிய மின்னுற்பத்தியை இலக்காகக் கொண்டு, கூரை மேல் சூரியத் தகடுகள் வைப்பதை அதிகரிக்க வேண்டும். மாநிலங்கள் இதற்கு முன்னுரிமை கொடுப்பதுபோல் தெரியவேயில்லை.
  • பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு மக்கள் பொதுப் போக்குவரத்தை நாடுவதைவிட சொந்த வாகனங்களை நாடுவதால் கரிம உமிழ்வு அதிகரித்திருக்கிறது. சைக்கிள் ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் ஏற்ப நகரங்களில் மாற்றம் செய்ய எல்லா மாநில அரசுகளுமே தவறியிருக்கின்றன.
  • ஸ்காட்லாந்தில் 2021-ல் ஐநா பருவநிலை மாற்றத்துக்கான மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்கும் முன்னதாக இந்தியா எதிர்கால கரிம உமிழ்வுகள், தனது பசுமை முதலீடுகள் குறித்தெல்லாம் தெளிவாகத் திட்டமிடல் வேண்டும்.

நன்றி: இந்து தமிழ்திசை (16/12/2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்