TNPSC Thervupettagam
November 27 , 2023 410 days 329 0
  • வடகிழக்குப் பருவமழைக் காலம் பாதியைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் நிகழாண்டு போதுமான மழைப்பொழிவு இல்லை என்பது கவலையளிக்கிறது. மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்வதுபோலத் தோன்றினாலும் மழை குறைவாகவே பெய்திருக்கிறது என்பதுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் செய்தி.
  • அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலகட்டத்தில் சராசரி மழைப் பொழிவின் அளவு 440 மி.மீட்டா். இது தமிழகம் பெறும் ஆண்டு மழை அளவில் 48%. அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் நவம்பா் 23-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 317 மி.மீட்டா் மழை பதிவாக வேண்டிய நிலையில், 286 மி.மீட்டா்தான் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பைவிட 10% குறைவு. இதற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் ஒரு காரணம்.
  • பருவநிலை மாற்றத்தால் பருவமழைப் பொழிவு பாதிக்கப்படுகிறது. வழக்கமான மழை அளவு, அல்லது அதிகமாக பருவமழை பெய்வது என்பது அரிதினும் அரிதாக மாறிவிட்டது. 1977-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, வடகிழக்குப் பருவமழை ஒரே ஒருமுறை, 1984-ஆம் ஆண்டில் மட்டுமே முன்கூட்டியே தொடங்கியது. 1988, 1992, 2000 ஆகிய மூன்று ஆண்டுகளில் மிகத் தாமதமாக நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.
  • வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் அக்டோபா் 2-ஆவது வாரத்துக்குப் பின்னரே தொடங்கும். இந்த ஆண்டு சில நாள்கள் தாமதமாக அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்கியது. பருவமழை வழக்கமான அளவு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாக இதுவரை குறைவாகவே பெய்திருக்கிறது. ஏற்கெனவே தென்மேற்குப் பருவமழையும் இயல்பைவிட குறைவாகப் பெய்திருக்கும் நிலையில், வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றம் அளிப்பது விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.
  • தென்மேற்குப் பருவமழைக் குறைவைக் காரணம்காட்டி காவிரியில் தண்ணீா் திறக்க கா்நாடகம் மறுத்து வருகிறது. தமிழகம் தனது பங்காக காவிரியில் 24,000 கனஅடி நீரை திறந்துவிட வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அளவு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் குறைந்துகொண்டே வருகிறது.
  • கடைசியாக அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், டிசம்பா் இறுதி வரை காவிரியில் விநாடிக்கு 2,700 கனஅடி நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற இறுதி உத்தரவுப்படி தமிழகத்துக்கு நவம்பா் வரை 150 டிஎம்சி நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 58 டிஎம்சி நீா் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
  • காவிரி ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி காவிரியில் நீரைத் திறந்துவிட கா்நாடகம் மறுத்து வருவதால் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இன்றி, காவிரி டெல்டாவில் வேளாண் சாகுபடி பாதித்திருக்கிறது. இச்சூழ்நிலையில் வடகிழக்குப் பருவமழையும் குறைந்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த வேளாண் சாகுபடி மேலும் குறையக்கூடும். தமிழகத்தின் முக்கிய அணைகள் அனைத்திலும் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாத நிலையில், இதர மாவட்டங்களிலும் வேளாண்மை பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆண்டுக்கு ஆண்டு தொடரும் மழைக் குறைவு பிரச்னையுடன், அண்டை மாநிலங்களுடனான நீா்ப் பங்கீடு பிரச்னைகளும், இயற்கைச் சீற்றங்களும் தொடரும் நிலையில், தமிழக விவசாயிகளின் துயரம் தொடா்கதையாகிவிட்டது. எதிா்பாா்த்த அளவுக்கு சாகுபடி இல்லாதது, பயிா்களில் நோய்த் தாக்கம் என விவசாயிகள் எதிா்கொள்ளும் இதர பிரச்னைகள் ஏராளம். இவை அதிகரித்துக்கொண்டு வருகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.
  • எந்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை அதிக அளவு மழையைத் தருகிறதோ, அதே அளவு பேரிடரையும் தரவல்லது. புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் அதிகம் ஏற்படுகின்றன. பருவமழையை எதிா்கொள்ள மாநில அரசு கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.
  • தமிழகத்தில் பருவமழை சவாலைச் சமாளிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பா் மாதமே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை, புறநகா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலை பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வற்புறுத்தியிருக்கிறாா். அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நடைபெற்ற பணிகளால், மாநிலம் முழுவதும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பையும் பாா்க்க முடிகிறது.
  • தலைநகா் சென்னையில் பருவமழைக்கு முன்பே மழைநீா் வடிகால் பணிகள் பெருமளவு நிறைவடைந்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது. ஆனாலும்கூட, தாழ்வான பல பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியதையும், மக்கள் பாதிப்புக்கு உள்ளானதையும் பாா்க்க முடிந்தது.
  • வடகிழக்குப் பருவமழை பெரிய அளவில் இல்லாத நிலையில் இத்தகைய நிலை என்றால், திடீரென்று மழைப் பொழிவு அதிகரித்தால் அதை நிா்வாகம் எப்படி எதிா்கொள்ளும் என்கிற கேள்வி எழுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது!

நன்றி: தினமணி (27 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்