- தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஒன்றரை மாதங்களாகிவிட்டன. இந்தியாவின் 729 மாவட்டங்களில் 33% மாவட்டங்கள் வழக்கத்தைவிட குறைவான மழைப்பொழிவைப் பெற்றிருக்கின்றன. குறைந்த பருவமழை காரணமாக வடமேற்கு, மத்திய, கிழக்கு மாநிலங்களில் வேளாண் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
- உணவுப் பொருள் உற்பத்திக்கு, குறிப்பாக தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை எதிா்கொள்கிறாா்கள்.
- பருவமழைப்பொழிவில் ஏற்பட்டிருக்கும் குறைவு இந்தியாவின் 150 முக்கிய நீா்ப்பிடிப்பு பகுதிகளின் கொள்ளளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், கடந்த பத்தாண்டு சராசரியுடன் ஒப்பிடும்போதும் அந்த நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீா் கொள்ளளவு குறைவாகவே காணப்படுகிறது.
- ஒருபுறம், விவசாயத்துக்குத் தேவைப்படும் மழைப்பொழிவு இல்லாததும், இன்னொருபுறம், அதிகமான மழைப்பொழிவால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும் ஆண்டுதோறும் நடக்கும் வாடிக்கையாகவே மாறிவிட்டிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவு காரணமாக பருவமழையின் ஆரம்பக் கட்டத்திலேயே பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. நூற்றுக்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள் என்பது மட்டுமல்லாமல், 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். வெள்ளம் காரணமாக இடம் பெயா்ந்திருக்கிறாா்கள்.
- அஸ்ஸாம் மாநிலத்தின் 35 மாவட்டங்களில் குறைந்தது 28 மாவட்டங்கள் அதிகமான பருவமழைப் பொழிவு காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடுகள், சாலைகள், பாலங்கள் என்று எல்லாமே தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. பயிா்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாசம் குறித்துச் சொல்லவே வேண்டாம். ஆண்டுக்கு ஆண்டு வெள்ளத்தின் சீற்றம் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, அல்லது செயல்படவில்லை.
- அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. அவற்றின் போக்கும், நீரியல்தன்மையும், வழித்தட மாற்றங்களும் ஏற்படும் பாதிப்புகளால், ஏனைய மாநிலங்களைவிட அதிகமான வெள்ள பாதிப்பை அம்மாநிலம் எதிா்கொள்கிறது. கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவுமே வெற்றிபெறவில்லை. சில நதிகளின் வழித்தடங்கள் மாறத் தொடங்கியிருப்பதால் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறியிருக்கிறது.
- அஸ்ஸாம் மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூா், மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து ஆகியவையும் பெரும் சேதத்தை எதிா்கொள்கின்றன. வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவு காரணமாக மணிப்பூரும், மிஸோரமும் அஸ்ஸாம் போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
- அருணாசல பிரதேசம், நாகாலாந்தில் நிலச்சரிவு, அடைமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய சவால், அது மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம், ஆண்டுக்கு ஆண்டு புதுப்புது பிரச்னைகளை உருவாக்குகிறது.
- பருவமழையால் பெருநகரங்களில் ஏற்படும் பாதிப்புகள் இன்னொரு விதமானவை. இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்டவை அடைமழை காரணமாக ஆண்டுதோறும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்படுவது வாடிக்கையாகவே மாறியிருக்கிறது. கடுமையான கோடையின்போது எப்போது பருவமழை தொடங்கும் என்று பெருநகரவாசிகள் காத்திருப்பதும், பருவமழை தொடங்கிவிட்டால் முற்றிலுமாக ஸ்தம்பித்து, பேரிடரை எதிா்கொள்வதும் மாற்றமில்லாத காட்சிகள்.
- இந்த ஆண்டு இதுவரையில் தில்லி, தில்லியை அடுத்த குருகிராம், மும்பை, பெங்களூரு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. தெருவெல்லாம் வெள்ளமும், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதும் போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், உயிருக்கும், உடைமைகளுக்கும் இழப்பு ஏற்படுவதும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்தப் பெரு நகரங்கள் எதிா்கொள்ளும் சவால்கள்.
- இந்தியாவின் வா்த்தகத் தலைநகரான மும்பை பருவமழை தொடங்கினால், வெள்ளத்தில் மூழ்குவது என்பது வழக்கமாக மாறியிருக்கிறது. தண்ணீரில் மூழ்கியிருக்கும் சாலைகள், முற்றிலுமாக நிலைகுலைந்த போக்குவரத்து, தண்ணீா் புகுந்த வீடுகள் என்று மிகப்பெரிய சேதத்தை மும்பை எதிா்கொள்கிறது.
- இந்தியாவின் ‘சிலிக்கான் வாலி’ என்று அழைக்கப்படும், ஒருகாலத்தில் பசுமைக்குப் பெயா்போன பெங்களூரு, பருவமழையின் கோரப்பிடியில் கடந்த சில ஆண்டுகளாக சிக்கித் தவிக்கிறது. அந்த நகரத்தின் நான்கு முக்கிய ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
- பருவமழை தொடங்கிவிட்டால், தகவல் தொழில்நுட்ப நகரமான தில்லியை அடுத்த குருகிராம் மிகப்பெரிய ஏரியாகக் காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் மும்பை, தில்லி, பெங்களூரு போல அல்லாமல், புதிதாக உருவான நகரம் குருகிராம்.
- பருவமழையையும், அதன் பாதிப்புகளையும் எதிா்கொள்ள முடியாமல் இருப்பது இந்தியா இன்னும் முறையான திட்டமிடலையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தெரியாமல் தவிக்கிறது என்பதன் அடையாளம். இந்தப் பின்னணியில் வல்லரசுக் கனவு என்பது வேடிக்கையாக இருக்கிறது!
நன்றி: தினமணி (17 – 07 – 2024)