TNPSC Thervupettagam

பறவைகளற்ற வான்வெளி

September 16 , 2023 482 days 373 0


https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/xlarge/1124297.jpg

  • நான் வளர்ந்த கிராமத்தில் அந்திமாலை நேரத்தில் வானில் சிறு சிறு பறவைக்கூட்டங்கள் அடையும் இடத்திற்கு பறந்து செல்லும் காட்சியை, அனுதினமும் பார்த்தது என் நினைவில் உறைந்துபோயிருக்கின்றது. கிளி, கொக்கு, மைனா எனப் பல விதமான பறவைக் கூட்டங்கள். அவ்வப்போது தனித்தனியாகப் பருந்துகள் பறந்து செல்லும். இன்றோ, மாலை வானில் வெகு அரிதாகவே பறவைகளைக் காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்?
  • அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இந்தியப் பறவைகளின் நிலை 2023 (State of India’s Birds 2023) என்கிற அறிக்கை இந்தக் கேள்வியை விரிவாக எதிர்கொள்கின்றது. பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் (BNHS), உலக இயற்கை நிதியகம் (WWF) போன்ற தன்னார்வ நிறுவனங்களுடன், மத்திய அரசின் இந்திய விலங்கியல் மதிப்பீட்டு நிறுவனம் ( ZSI) போன்ற பதிமூன்று அமைப்புகள் இணைந்து, ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்துள்ள அறிக்கை இது.
  • அரசுத் துறைகளுக்குள்ளேயே ஒன்றிணைந்து இயங்கும் வழக்கம் இல்லாத நம் நாட்டில், தன்னார்வ அமைப்புகளுடன் அரசு இணைந்து இந்த வேலையைச் செய்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்றே. ஆயிரக்கணக்கான பறவை ஆர்வலர்கள் களப்பணி செய்து திரட்டிய விவரங்களின் சாரம்தான் இந்த அறிக்கை.

பதிவு செய்யும் வசதி

  • இந்த அறிக்கை வெளிவர ஒரு முக்கியமான காரணம் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் ebird என்கிற தரவுதளம். 2002இல் தொடங்கப்பட்ட ebird எனும் இந்த மின்னணு வசதி, சாமானிய மக்களும் பறவையியலாளர்களாக இயங்க வசதி செய்கின்றது.
  • உலகெங்கும் உள்ள பறவை ஆர்வலர்கள் தாங்கள் அவதானித்த புள்ளினங்களைப் பற்றிய- பார்த்த இடம், காலம், நடவடிக்கை போன்ற -விவரங்களை இந்த வலைத்தளத்தில் பதிவிடலாம். ஒரே ஒரு பட்சியை நீங்கள் பார்த்தால்கூட, அதைப் பற்றி இங்கு குறிப்பிடலாம்.
  • பல ஆண்டுகளுக்கு முன் நான் கோவை நகரின் மத்தியப் பகுதியில் வசித்தபோது, எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த ஒரு சிறிய கருவேல மரத்தில் ஒரு Asian Brown Flycatcher என்கிற , தேன்சிட்டுவைவிட சிறிய, வலசை வரும் பறவையை அடிக்கடி பார்த்தது உண்டு. அதைப் பதிவுசெய்ய அன்றைக்கு வசதியில்லை.
  • இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் அறிக்கையில் நம் நாட்டிலிருந்து 30, 000 பறவை ஆர்வலர்கள் தாங்கள் திரட்டிய விவரங்களை இந்த தரவுதளத்தில் பதிவுசெய்து பங்களித்துள்ளனர். இதை உலகெங்குமுள்ள மற்ற பறவை ஆர்வலர்களும் பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

அச்சுறுத்தும் முடிவுகள்

  • 338 இந்தியப் பறவைகளின் நிலையை அலசும் இந்த அறிக்கை அபாய சங்கை ஊதுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில், இந்தப் பறவை இனங்களில் 60% குறைந்துவிட்டன என்று கூறுகின்றது. அதற்கான காரணங்களையும் முன்வைக்கின்றது.
  • இந்தியாவில் முன்பு கூட்டம் கூட்டமாக இருந்த செந்தலை வாத்து (Pink-headed Duck)இன்றைக்கு அற்றுப்போய் விட்டது. பரத்பூர் சரணாலயத்திற்கு ஒவ்வொரு குளிர்காலத்திலும் தவறாமல் வலசை வந்துகொண்டிருந்த சைபீரியப் பெருங்கொக்கு கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்ணில் படுவதில்லை. தமிழ்நாட்டிலிருந்த கானமயில், வரகுகோழி என்கிற இரண்டு பறவைகளும் இப்போது இங்கு கிடையாது.
  • சில பத்தாண்டுகளுக்கு முன் எளிதாக காணக்கிடைத்த பாறு எனும் பிணந்தின்னிக்கழுகுகள் இன்றைக்கு மறைந்துவிட்டன. கால்நடைகளுக்கு கொடுக்கும் வலிநிவாரணி டைக்ளோஃபெனாக் (Diclophenac) மருந்துதான், இக்கழுகுகளின் உடலில் சென்று இனப்பெருக்கத்தைத் தடுத்துவிட்டது என்று பறவையிலாளர்கள் சொல்கின்றார்கள்.
  • நாம் முன்பு எளிதில் காணக்கூடியதாக இருந்தபனங்காடை இன்றைக்குக் குறைந்துவிட்டது என்பதை இவ்வறிக்கை பதிவுசெய்கின்றது. முன்பு தொடர்வண்டியில் போகும்போது தந்திக்கம்பிகளில் இப்பறவைகள் அமர்ந் திருப்பதைப் பார்க்க முடிந்தது. சாரஸ் பெருங்கொக்கும் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றது என்றறிகின்றோம். ஆனால் மயில், குயில் போன்ற சில பறவைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

பெரும் சீரழிவு

  • புள்ளினங்கள் மறைவதற்கு ஒரு முக்கிய காரணம் அவற்றின் வாழிடங்கள் சிறப்பாக - பாலை நிலம், புல்வெளிகள், நீர் நிலைகள்- சீரழிந்து போவதுதான். வானம்பாடி, ஆள்காட்டிக்குருவி போன்றவை புல்வெளிகளை உறைவிடமாகக் கொண்ட புள்ளினங்கள் . கல்கெளதாரி , காடை ஆகியவை பாலை நிலத்தில் இரை தேடி, தரையிலேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை.
  • நீர்நிலைகளும் பாதிக்கு மேல் மறைந்துவிட்டன. எஞ்சியிருக்கும் நீர்ப்பரப்புகள் பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டால் சீரழிந்துவிட்டன. ஓர் ஏரியில் பறவை எதுவும் இல்லையென்றால், அங்கே மீன், தவளை போன்ற சிற்றுயிர்கள் ஏதுமில்லை என்று பொருள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்கள் நீரிலும் மண்ணிலும் நஞ்சாகக் கலந்துவிட்டன. இரை ஏதுமில்லாததால் பறவைகளின் எண்ணிக்கை குறைகின்றது. இது ஒரு வேதியியல் சீரழிவு.

நம் கவலை எதைப் பற்றியது? 

  • மற்றொருபுறம், இன்று பறவையை அவதானிக்கும் ஆர்வம் பெருகியிருப்பதையும் காண்கின்றோம். சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இதற்கென சில குழுக்கள் இயங்கிவருகின்றன. பறவைகளை அவதானிப்பது பற்றிப் பயிலரங்குகளும் நடத்தப் படுகின்றன. காட்டுயிர்க்கென வெளியாகும் சில சஞ்சிகைகளில் பறவைகளைப் பற்றிய நல்ல கட்டுரைகளைக் காணமுடிகின்றது. பறவைகளை இனங்காண தமிழ் களக்கையேடுகள் வந்துள்ளன.
  • நம் சுற்றுச்சுழல் நல்ல நிலையில் இருக்கின்றதா, இல்லையா என்பதை பறவைகளின் நிலை சுட்டிக்காட்டுகின்றது. அவை குறைவது அந்த உறைவிடம் சீரழிந்துவிட்டதைக் காட்டுகின்றது. சில பறவைகள் ஓர் உறைவிடத்தில் மட்டுமே வாழும். பறவையியலாளர்கள் இதை ஓரிட வாழ்வி என்பர். பழனிமலைச் சிரிப்பான் (Palani Laughing Thrush) ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
  • கொடைக்கானலைச் சுற்றியுள்ள மலைகளில் மட்டுமே இது வாழ்கின்றது. அறுபதுகளில் நாங்கள் கொடைக்கானலுக்கு செல்லும்போதெல்லாம் இந்தப் பறவை எழுப்பும் மனங்கவரும் ஒலி அவ்வப்போது காற்றில் மிதந்துவரும். இன்று கார் ஹாரன் ஒலிதான் அந்த வெளியை நிரப்புகின்றது.

இந்தப் போக்கை மாற்ற முடியுமா?

  • சுற்றுச்சூழலை மீட்டெடுக்க முடியுமா? நாம் எதிர்நோக்கியிருக்கும் காலநிலை மாற்றத்தால் நிலைமை இன்னும் மோசமடையுமா? ஓர் அரசு எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது என்று பாருங்கள். காவிரியில் ஓர் அணை கட்டுவதைப் பற்றிப் பேசுகின்றோம். பழனியையும் கொடைக்கானலையும் இணைத்து கேபிள் கார் வசதி கொண்டுவரலாமா என்று ஆய்வு நடக்கின்றது.
  • அந்தமானின் பரந்த மழைக்காடுகள், மேம்பாடு என்கிற பெயரில் அழிக்கப்படுகின்றன. இங்கே மனதில் கொள்ளவேண்டியது என்னவென்றால் சுற்றுச்சூழல் பற்றிய எல்லாப் பிரச்சினைகளின் வேர்களும் அரசியலில் போய் முடிகின்றன. புள்ளினங்களைப் பற்றி கவலைப்படுவது யார்?

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்