பறவைகள் எப்போது தோன்றின?
- சிறகடித்து வானில் வட்டமிடும் பறவைகளைப் பார்க்கும்போது, நாமும் இதுபோல் பறக்க முடியுமா என்று நினைக்காதவர்கள் இருக்க முடியுமா? சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகச் சூரியன் உருவானபோது பூமியும் உருவானது. மலைகளும் பள்ளங்களும் உருவாகின. பின்னர் நீர் உருவானபோது, உயிரினங்களும் தோன்றின.
- உருவான உயிரினங்களில் மிக முக்கியமானது, ‘சயனோ பாக்டீரியா’. சுமார் 240 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பாக்டீரியா பூமியின் சூழல் மாற்றத்துக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. பூமியின் முதல் ஒளிச்சேர்க்கையாளர்களாக சயனோ பாக்டீரியாக்கள் இருந்தன. தண்ணீர், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயாரித்து, ஆக்சிஜனை வெளியிட்டன. அந்தச் சூழலில் வாழ முடியாத உயிரினங்கள் மடிந்தன.
- பூமியில் ஆக்சிஜன் உருவாகி, அதன் அளவு உயர்ந்துகொண்டே சென்று 35 சதவீதத்தை எட்டியது. ஒரு கட்டத்தில் சயனோ பாக்டீரியாக்களின் அழிவு காரணமாக, பூமியில் ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கியது. பிறகு ஆக்சிஜன் அளவு 15 சதவீதமாகக் குறைந்து, இன்று 21% சதவீதமாக இருக்கிறது. தரையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததுபோல் நீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவில்லை. அதனால்தான் சராசரியாகக் கடல் நீரில் 6 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதிக ஆக்சிஜன் தேவைப்படும் உயிரினங்களுக்குக் கடல் சூழ்நிலை சாத்தியமில்லாமல் போனதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
- சுமார் 70 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகப் பாசிகள் கடல் நீரில் தோன்றின. அதைவிடச் சிக்கலான நரம்பு மண்டலத்தைக் கொண்ட ஜெல்லி வகை உயிரினங்கள் சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.
- இப்படியாக நீரில் உருவாகிய ஒரு செல் உயிரிகள், பல செல் உயிரிகளாக மாறின. ஆக்சிஜன் தேவைக்காக அவை கடற்கரையை எட்டிப் பார்த்தன. நீரைவிட நிலம் நன்றாக இருக்கிறது என்பதால் நீண்ட நேரம் வாழ்ந்து பார்த்தன. தரையில் கிடைத்த அதிகப்படியான ஆக்சிஜன் அவற்றின் வாழ்க்கை முறையை மாற்றியது. அதனால் தரைவாழ் உயிரினங்களாக மாற ஆரம்பித்தன.
- சுமார் 42.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிலுரியன் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த மரவட்டை இனமான நியூமோடெஸ்மஸ் நியுமானி என்பது முதன்முதலில் அறியப்பட்ட நில விலங்கு. ஸ்காட்லாந்தின் அபெர்டீன்ஷர், ஸ்டோன்ஹெவன் அருகே இந்த இனத்தின் ஒற்றைப் புதைபடிவம் 2004ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
- தரையில் வாழ்ந்த உயிரினங்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டன. நடந்தவை ஓட ஆரம்பித்தன, ஓடியவை குதிக்க ஆரம்பித்தன, குதித்தவை மரத்தில் தொங்க ஆரம்பித்தன.
- சுமார் 14.5 கோடி ஆண்டுகளிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் பறக்கக்கூடிய உயிரினங்கள் உருவாகின. இப்படியாக டைனசோர் இனத்தின் ஒரு வகையான ஆர்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx) சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முதலில் பறக்கும் உயிரினமாக உருவானது. முதல் ஆர்கியாப்டெரிக்ஸ் புதைபடிவம் ஜெர்மனியின் பவேரியாவில் 1861இல் கண்டறியப்பட்டது.
- டைனசோர்களுக்கும் பறவைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பறக்கும் உயிரினங்கள் ஆர்கியாப்டெரிக்ஸ் என்பதைப் புதை படிவத்தில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவை நவீனப் பறவைகளைப் போல இறக்கைகள், இறகுகள், பறவைகளுக்கே உரிய முள்கரண்டி (furculae) எலும்பைக் கொண்டிருந்தன. இந்த எலும்புகள் உடலை இறக்கையுடன் இணைத்துப் பறப்பதற்குத் தேவையான அமைப்பையும் உருவாக்குகின்றன. இவற்றின் உடல் அமைப்பு பறவைக்கு ஒத்ததாக இருந்தாலும் பல் அமைப்பு டைனசோரைப் போன்று இருந்தது.
- இவை உண்மையில் பறந்து சென்றனவா, அல்லது மலை முகடுகளிலிருந்து காற்றில் சறுக்கிக்கொண்டே சென்றனவா என்கிற கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் முதன் முதலில் பறந்த உயிரினமாக இவை கருதப்படுகின்றன.
- பறவைகள் எப்படிப் பறக்க ஆரம்பித்தன என்பது சார்ந்து இரண்டு கருத்துகள் இருக்கின்றன. மரத்தை மையமாகக் கொண்டு பறந்தன அல்லது நிலத்தை மையமாகக் கொண்டு பறந்தன என இவற்றை வேறுபடுத்தலாம். பல தேவைகளுக்காக மரத்தில் ஏறிய உயிரினங்கள், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு இறங்கி ஏறுவதற்குப் பதிலாக, தாவி குதித்து ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குச் செல்ல இறக்கைகளைப் பயன்படுத்தின. இந்தத் தேவையின் காரணமாக இவை காற்றில் சறுக்கிச் செல்லும் பறவைகளாக மாறியிருக்கலாம்.
- அடுத்ததாக, தரையில் ஓடும் உயிரினங்கள் பறக்க ஆரம்பித்திருக்கலாம். பல காரணங்களுக்காகத் தரையில் வேகமாக ஓட வேண்டிய தேவை ஏற்பட்டபோது, ஓட்டத்தை மேம்படுத்த இறக்கை களைப் பயன்படுத்தி வேகத்தைக் கூட்டி இருக்கலாம். அது பிற்காலத்தில் ஓடுவதில் இருந்து பறப்பதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.
- இந்த இரண்டு கருதுகோள்களிலும் இறக்கைகள் இருந்தன. இறக்கைகள் பறப்பதற்குத் தேவைப் படுவதற்கு முன்பாகவே வெப்பக் கவசமாக இருந்திருக்கின்றன. உடலில் உருவான வெப்பத்தை வெளியேற்றாமல் பாதுகாக்க வேண்டிய வேலையை அவை செய்தன. இன்றும் பல பறவைகளின் இறக்கைகள் பறப்பதற்கு மட்டுமல்லாமல் வெப்பக் கவசமாகவும் இருக்கின்றன.
- டைனசோர் காலத்திற்குப் பிறகு உருவாகி இன்றிலிருந்து 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த கிரிடேசியஸ் (cretaceous) காலத்தில் எண்ணற்ற பறக்கும் உயிரினங்கள் தோன்றின. இப்படி உருவான பறவைகள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு, இன்று 11 ஆயிரம் வகைகளுக்கு மேலாக பூமியில் வாழ்ந்துவருகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2024)