TNPSC Thervupettagam

பறவைப் பயணம்: புதையல் வேட்டையா, சமூகச் செயல்திட்டமா?

June 22 , 2024 26 days 68 0
  • பறவை நோக்குதலா? அதில் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும்?  2012ஆம் ஆண்டில் நான் பறவை நோக்கலில் ஈடுபட்டபோது என்னிடம் பலரும் எழுப்பிய கேள்விகள் இவை. முதல் இரண்டு கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடிந்தாலும், மூன்றாவது கேள்விக்கு ‘இயற்கையைப் புரிந்துகொள்ளுதல், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி’ என்று நான் சொன்ன பதில் பலருக்குத் திருப்திகரமாக இல்லை. வார இறுதி நாள்களில் சில தன்னார்வலர்களுடன் இணைந்து இயற்கைச் சூழலில் பறவையினங்களை அடையாளம் காண்பதும், அவற்றின் குணாதிசயங்களை நோட்டமிடுவதுமான‌ பொழுதுபோக்கில் ஈடுபடலானேன். அதன் பிறகு அலுவலகத்திலோ வீட்டிலோ இருக்கும்போது மைனா, தவிட்டுக்குருவி போன்ற பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை ஆண்டுகளாக நாம் எளிதாகக் கேட்டுவந்த இந்த ஒலிகள் என் செவிகளை அடையாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

கற்றல் எனும் முதல் படி

  • பறவை நோக்கர்களின் உற்ற துணை இருகண்நோக்கியும் (binocular) பறவைக் கையேடும். இவற்றைக் கொண்டு நானும் என் மனைவியும் முதன் முறையாக ஒரு பறவையைச் சிங்காநல்லூர் குளத்தில் அடையாளம் கண்டோம். பிறர் உதவியின்றி அப்பறவையின் அடையாளங்களைக் குறிப்பெடுத்து, கையேட்டில் தேடி ‘பொரி மீன்கொத்தி’ (Pied Kingfisher) என்று அறிந்தபோது ஏற்பட்ட இன்பத்தை எப்படி மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும்? இதன் பிறகு வந்த காலத்தில் நான் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்களை கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே அடையாளம் காண முடிந்தது. இந்த ஆர்வத்திற்கும் பயிற்சிக்கும் ஆரம்ப காலத்தில் பேருதவியாக இருந்தது சாலிம் அலி பறவையியல் - இயற்கை வரலாற்று மையம் (SACON) முதலிய அமைப்புகளும், அதில் இருந்த பட்டறிவும் திறனும் மிகுந்த இயற்கை ஆர்வலர்களும்தான்.

தனிப்பட்ட பயன்கள்

  • எந்த ஒரு செயலிலும், இதனால் நமக்கு என்ன பயன் எனும் கேள்வி எழும். தொழில்முறையில் நான் இயந்திரப் பொறியாளன். பறவை ஆர்வப் பொழுதுபோக்கில் நான் கற்றுக்கொண்ட விவரங்களைப் பணியிலும் என்னால் செயல்படுத்த முடிந்தது. எடுத்துக்காட்டாக முறைப்படுத்தப்பட்ட தரவுத் திரட்டு, அதை மென்பொருளைக் கொண்டு நிரல் படங்களாகக் காட்சிப்படுத்துதல் போன்றவை. அதிவேகமான இயந்திர வாழ்க்கையிலிருந்து நம்மைப் பிரித்து முற்றிலும் எளிய இயற்கைச் சூழலுக்குள் வாரத்தில் சில மணி நேரம் இட்டுச்செல்வதற்கான வாய்ப்பு இது. ஒவ்வொரு முறையும் தூய்மையான காற்றில், நல்ல நடைப்பயணத்துடன், கண்களுக்கும் புத்துணர்வு தரும் புதிய கற்றல் கிடைக்கிறது. விடுமுறை நாள்களில் பொழுதுபோக்காகத் தொடங்கி, இப்பொழுது ‘மக்கள் விஞ்ஞானி’ (Citizen Scientist) எனும் தளத்திற்கு உயர்ந்திருக்கிறது எனது பறவை ஆர்வம்.

சமூகவியல் செயல்பாடு

  • நமது செயல்களால் சமூகத்துக்குப் பங்களிக்க முடியுமானால், அதைச் செவ்வனே செய்தல் வேண்டும். பறவைகளைத் தேடிக் காண்பதும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் அவற்றைக் கண்டு ரசிப்பதும் முதல் படிதான். அடுத்த கட்டங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கை முன்னகர்த்த எனக்கு வழிகாட்டியவர் பறவை ஆர்வலர் கோ.பரமேஸ்வரன். இவர் அமெரிக்காவில், முப்பது வருடங்கள் இருந்த காலத்தில் அங்கிருக்கும் ‘சியாட்டில் ஆடோபான் சொசைட்டி’யில் (Seattle Audobon Society) தன்னார்வலராகப் பங்காற்றிச் சுற்றுப்புறப் பறவைக் கணக்கெடுப்புச் செயல்முறைகளைக் கற்றுக்கொண்டார். அவர் தலைமையில் சில தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ‘மக்கள் அறிவியல் செயல்திட்டம்’ (Community Science Programme) அடிப்படையில் கோவையைச் சேர்ந்த‌ பேரூர் குளத்தில் முறையான மாதாந்திரப் பறவைகள் கணக்கெடுப்பைத் தொடங்கினோம்.
  • குழுச்செயலாகத் தொடங்கிய கணக்கெடுப்பு இயல்பாகவே ‘பேரூர் லேக் ஃபோரம்’ (Perur Lake Forum/ இணையதள இணைப்பு: https://perurlakeforum.org/) ஆக உருவெடுத்து 2024 ஏப்ரல் மாதத்துடன் பத்து வருடங்களைக் கடந்துவிட்டது. இந்தப் பயணத்தில்தான் பறவை நோக்கல் வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், அறிவியல் கண்ணோட்டத்துடன் தரவுகளைச் சேகரித்து, பறவைகளின் வாழிடத்தையும் பாதுகாக்க வேண்டும் எனும் சமூக அக்கறை கொண்ட செயல்பாடாக முன்னகர்ந்தது.
  • இங்கு நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது பறவை நோக்குவோர் பலர் அதிக பறவை இனங்களைக் காண்பதையும், அரிதான பறவையைக் கண்டறிவதையும் ஒரு போட்டியைப் போலச் செய்துவருகிறார்கள். இவர்களால் பெரும் கெடுதல் நேராவிட்டாலும், அவர்களது திறனும் ஊக்கமும் தேவைக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன. பறவை யினங்களும், அவற்றின் வாழிடங்களும் அருகிவரும் நிலையை உணராமல், அதன்காரணங்களை அறிய முற்படாமல், எங்கிருந்தோ வழிதவறி வரும் அரிய பறவையைக் காணப் படையெடுத்துச் செல்பவர்களைப் புதையல் வேட்டையர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் இதை மட்டுமே செய்யாமல், மாதாந்திரப் பறவைகள் கணக்கெடுப்பை அனைத்துக் குளங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுத்தினால், ஒரு பகுதியில் உள்ள‌ பறவைகளின் நிலையைக் குறித்த துல்லியமான முடிவுகளைப் பெறலாம்.

களச்சூழலும் ஆய்வு முடிவுகளும்

  • இது போன்ற மாதாந்திரக் கணக் கெடுப்புகளும், தரவுகளின் அடிப்படையில் அமைந்த‌ பகுப்பாய்வு முடிவுகளும், நடைமுறைக்கு உகந்த செயல்திட்டங்களை உருவாக்கக்கூடியவை. இது ஒரு தனிமனிதருக்கான வெற்றி அல்ல, இது ஒரு குழுச் செயல்பாடு. இதைச் செய்வதற்குப் பறவைகள் மீதான ஆர்வமும், மாதத்தில் மூன்று மணி நேர அர்ப்பணிப்பும் இருந்தாலே போதும். பேரூர் குளத்தில் பொதுவாகக் காணப்படும் நீர்ப்பறவைகள் பற்றிய எங்கள் ஆய்வைக் குறித்த கட்டுரையை Indian Birds எனும் பறவைகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி இதழில் அண்மையில் எழுதி வெளியிட்டிருக்கிறோம்.

இந்த ஆய்வின் முடிவுகள்:

  •  மே‍ 2014 இல் இருந்து ஏப்ரல் 2020 வரை, பேரூர் குளத்தில் 125 பறவை இனங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதில் மொத்தமுள்ள‌ 49 நீர்ப்பறவை இனங்களில், நீர்மட்டம் நடுத்தரமாக இருக்கும்போதுதான் 29 இனங்களின் எண்ணிக்கை அதிகமாக‌க் காணப்பட்டது. மேலும் இந்த நீர்மட்டத்தில் மட்டும்தான் ஈரமானசேற்றுப் பகுதிகளில் ஏறக்குறைய 80 விழுக்காடு கரையோரப் பறவைகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன.
  •  பேரூர் ஏரியில் பதிவான நீர்ப்பறவைகளில் 47 விழுக்காடு நீர்ப்பறவை இனங்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் குறைந்திருந்தது.
  • எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்ட 12வகையான‌ நீர்ப்பறவைகளில், 8 இனங்கள் கடுமையாகவும் 4 இனங்கள் அதிகமாகவும் பாதிக்கப் பட்டிருந்தன.

இந்தத் தாக்கங்களுக்கான காரணங்கள்,

  • 1. குளக்கரையில் தார்ச்சாலை அமைத்து, அதை விரிவுபடுத்தியது.
  • 2. முறையற்ற மண் அள்ளுதல்
  • 3. வணிக மீன்பிடிப்பு - அதற்காகக் குளத்தில் நீர் இருப்பைச் செயற்கையாக‌ அதிகப்படுத்தியது.
  • பேரூர் குளத்தின் வரலாற்று முரண் என்ன வென்றால், அது ஒரு காலத்தில் ‘பறவைகள் சரணாலயம்’ ஆகச்‌ சாத்தியமுள்ள‌ தளமாகக் கருதப்பட்டது. சரியான நேரத்தில் அந்த நிலை கிடைத்திருந்தால், மணல் அள்ளுதல் போன்ற முறையற்ற வளச்சுரண்டல் நடவடிக்கைகளைத் தடுத்திருக்க முடியும். தற்போது குளிர்காலத்தில் வலசை வரும் வாத்துகளையும் கரையோரப் பறவைகளையும் அரிதாகவே காண முடிகிறது. இரைச்சலின்றி, இயற்கையுடன் கூடிய‌ பொழுது போக்குக்கு ஆனதாக இருந்த இடம், இப்போது பரபரப்பான போக்குவரத்து வழித்தடமாக மாறிவிட்டது.

தேவை கலந்தாய்வு

  • உலக மக்கள்தொகையில் 17.8 விழுக்காடு மக்கள் இந்தியாவில் உள்ள‌ 2.42 விழுக்காடு நிலப்பரப்பில் வாழ்கிறோம். எனவே, ஈரநிலப் பகுதியின் சிறிய இழப்புகூட நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து இனியாவது மக்களும் அதிகாரிகளும் பொறுப்பான சூழலியல் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி பொழுதுபோக்காகத் தொடங்கிய என் பறவை ஆர்வம், மகிழ்ச்சியான செயல்பாடாக மாறியதுடன் சமூகப் பங்களிப்புக்கும் வாய்ப் பளிக்கிறது. இதுபோன்ற நல்ல பொழுதுபோக்கு ஒன்றைப் பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்து நாட்டிற்கும் நன்மை பயக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்