- இரண்டாவது முறையாக மீண்டும் ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். அந்த நாட்டின் அரசியல் வரலாறு இதுவரை 3 அரசியல் சாசனங்களையும், 3 ராணுவ ஆட்சிகளையும் மட்டுமல்ல, 31 பிரதமா்களையும் சந்தித்திருக்கிறது. அந்தப் பிரதமா்களில் ஒருவா்கூட தங்களது ஐந்தாண்டு பதவிக்காலத்தை இதுவரையில் நிறைவு செய்ததில்லை.
- இப்போது பதவியேற்றிருக்கும் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு நிறைவு செய்வோம் என்கிற நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகம்தான். எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ‘திருடா்கள், வாக்குத் திருடா்கள்’ என்று கோஷம் எழுப்ப அதற்கிடையில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டிருக்கிறாா். அவைத் தலைவா் ஆயாஸ் சாதிக், 336 உறுப்பினா்கள் கொண்ட அவையில் ஷாபாஸ் ஷெரீஃப் 201 வாக்குகளையும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட உமா் அயூப்கான் 92 வாக்குகளையும் பெற்ாக அறிவித்தாா். தனிப் பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் போதுமானவை. தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அல்லாமல் அவையின் 70 நியமன உறுப்பினா்கள் பாகிஸ்தான் மக்களவையில் இருக்கிறாா்கள்.
- கடந்த மாதம் 8-ஆம் தேதி நடந்த மக்களவைக்கான தோ்தலில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா் என்பது மட்டுமல்லாமல், அவரது தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஏ- இன்சாஃப் கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னம் முடக்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. சிறையிலிருக்கும் இம்ரான் கானின் வழிகாட்டுதலில் அவரது கட்சியினா் அனைத்துத் தொகுதிகளிலும் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனா்.
- அப்படியிருந்தும் 93 இடங்களைக் கைப்பற்றி அவையில் அதிக இடங்களைப் பெற்ற குழுவாக அந்த சுயேச்சைகள் உயா்ந்தனா். 2022 ஏப்ரல் மாதம் ராணுவத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானத்தில் பதவியிழந்த இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டாலும், அவரது செல்வாக்கு சரியவில்லை என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 75 இடங்களையும், மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் வென்றிருக்கின்றன.
- இப்போது அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ராணுவத்தின் ஆசியுடன் ஆட்சி அமைக்க முற்பட்டிருக்கின்றன. பேநசீா் புட்டோவின் கணவா் ஜா்தாரி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளாா். பாகிஸ்தானைப் பொருத்தவரை ராணுவம் போா்களில் தோற்றாலும்கூட, தோ்தல்களில் தோற்காது என்று பரவலாகக் கேலி செய்யப்படுகிறது. அது இந்தமுறையும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப செயல்படவில்லை என்பதால்தான், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவியிலிருந்து அகற்றப்பட்டாா். ராணுவத்தின் துணையுடன் அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய இம்ரான் கான் பதவியில் அமா்த்தப்பட்டாா். இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது.
- இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு, ராணுவத்தின் வழிகாட்டுதலில் மீண்டும் நவாஸ் ஷெரீஃபின் பினாமி ஆட்சி பதவியில் அமா்த்தப்பட்டிருக்கிறது. மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் ஏன் மீண்டும் பிரதமராகாமல் தன்னுடைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃபை மீண்டும் பிரதமராக்க அனுமதித்தாா் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2018 தோ்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரைப் பதவியிலிருந்து அகற்றி வாழ்நாள் காலம் தடைவிதித்து சிறையில் அடைத்ததும் ராணுவம்தான்.
- பாகிஸ்தானிலிருந்து சிகிச்சைக்காக வெளியேறி லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த நவாஸ் ஷெரீஃப் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவா் மீண்டும் நாடு திரும்ப வழிகோலியதும் ராணுவம்தான். அவா் தலைமையில் இப்போது ஆட்சி அமைவதில் ராணுவத்துக்கு எவ்விதத் தடையும் இல்லாத நிலையில், அவா் ஏன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை தனது தம்பியைப் பிரதமராகவும், தனது மகள் மரியம் நவாஸை பஞ்சாபின் முதல்வராகவும் பதவியில் அமா்த்தி ராணுவத்துடன் நேரடித் தொடா்பில்லாமல் மறைமுக ஆட்சி நடத்தும் எண்ணம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கூட்டணி ஆட்சியின் பிரதமராகவும், ராணுவத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டும் பிரதமராக இருக்க அவா் விரும்பவில்லை என்றும் கொள்ளலாம்.
- எப்படி இருந்தாலும் அதிக காலம் ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணா்ந்து, பதவிப் போட்டியிலிருந்து அவா் விலகி விட்டாா் என்றும் சிலா் கருத்து தெரிவிக்கின்றனா். தோ்தல் முறைகேடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஆட்சியின் மீதான அவநம்பிக்கை மேலோங்கி காணப்படுகிறது. ஏற்கனவே விலைவாசி உயா்வால் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட தட்டுப்பாடு தொடா்கிறது. 2022-இல் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் பாதிப்பிலிருந்து இன்னும்கூட அந்த நாடு மீண்டெழவில்லை. பாகிஸ்தானின் குவாதா் துறைமுகத்தை தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டது சீனா.
- கடனில் மூழ்கித் தத்தளிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற முந்தைய ஷாபாஸ் ஷெரீஃப் அரசு சா்வதேச நிதியத்திடம் 300 கோடி டாலா் கடன் வாங்கியிருக்கிறது. அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் மக்களைப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றன. அரசியல், பொருளாதார, பாதுகாப்பு ரீதியாக பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை ராணுவத்தால் வழிநடத்தப்படும் ஷாபாஸ் ஷெரீஃப் அரசு எப்படி மீட்கப் போகிறது?
நன்றி: தினமணி (11 – 03 – 2024)