TNPSC Thervupettagam

பல்லுயிர்த் தன்மை கட்டுரைகள்

April 16 , 2023 449 days 274 0

நீல மலையின் நீல ரயில்

  • மலைகளின் ராணி’யான ஊட்டிக்குப் பலரும் சுற்றுலா போயிருக்கலாம். ஆனால், மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயிலில் ஊட்டிக்குச் சென்றது உண்டா என்று கேட்டால், பலரும் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். உண்மையில் ஊட்டி சுற்றுலாப் பயணமும் மலை ரயிலின் பயணமும் வெவ்வேறு அனுபவங்களைத் தரக்கூடியவை. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமான இந்த மலை ரயில் நிறுவப்பட்ட கதையும் அதன் பயணமும் சிலிர்ப்பைத் தருபவை.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் மலைப் பிரதேசங்களைத் தங்கள் வசதிக்கேற்ப ஆங்கிலேயர்கள் நவீனப்படுத்தினார்கள். குளு குளு மலைகளுக்குச் சமவெளிப் பகுதியிலிருந்து ரயில் பாதையை உருவாக்கி ரயில் விட்டுச் சாதனை புரிந்தார்கள். இந்தியாவில் உள்ள நான்கு மலை ரயில் பாதைகளில் ஒன்றுதான் ஊட்டி மலை ரயில் பாதை. சிம்லா மலை ரயில் பாதை, டார்ஜிலிங் - இமாலயன் ரயில்பாதை, மாதேரன் மலை ரயில் பாதை ஆகியவை மற்ற மூன்று பாதைகள்.
  • ஊட்டி மலை ரயில் என்றழைக்கப் படும் நீலகிரி மலை ரயிலின் வரலாறு நெடியது. நூற்றாண்டைக் கடந்த இந்த மலை ரயிலுக்குப் பாதை அமைக்கும் திட்டம் 1854லேயே உருவாகிவிட்டது. ஆனால், 1886இல்தான் பணிகள் தொடங்கின. இதற்காக ‘நீலகிரி ரயில்வே கம்பெனி’ என்கிற அமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். மிகவும் செங்குத்தான இந்த மலை ரயில்பாதை அமைக்கும் பணியில் அன்றைய மதராஸ் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.
  • மிகவும் சிரமப்பட்டுதான் இந்த மலை ரயில்பாதையை அவர்கள் அமைத்தார்கள். பாறைகளைக் குடைந்து, பள்ளத்தாக்கில் பாலங்களை அமைத்து, செங்குத்தான மலைப்பாதையில் பயணிக்கப் பற்சக்கரங்களைக் கொண்டு ரயில்பாதையை உருவாக்கினார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் 13 ஆண்டுகளில் இப்பணிகளை அவர்கள் முடித்தார்கள்.
  • 1899இல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 27 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 15 அன்று மலை ரயில் தன் பயணத்தைத் தொடங்கியது. பின்னர், 1903இல் நீலகிரி ரயில்வே கம்பெனியை பிரிட்டிஷ் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குன்னூர் - உதகமண்டலம் இடையே 19 கி.மீ. நீளத்துக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு, 1908 அக்டோபர் 15 அன்று மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கிய மலை ரயில் போக்குவரத்து இன்றுவரை தொடர்கிறது.
  • மேட்டுப்பாளையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி 7349 அடி உயரத்தில் உள்ள ஊட்டிக்கு மலை ரயில்பாதை செல்கிறது. 46 கி.மீ. நீளப் பாதையின் இடையே 16 குகைகள், சிறிதும் பெரிதுமாக 250 பாலங்கள், 108 வளைவுகள் எனச் செங்குத்து மலையில் பல இக்கட்டுகளைக் கடந்து ஆங்கிலேயர்கள் சாதித்திருக்கிறார்கள். இடைப்பட்ட தொலைவில் 11 ரயில் நிலையங்களையும் அமைத்தார்கள். ஊட்டி மலை ரயில் ஆங்கிலேயர்களின் கொடை என்றாலும், பற்சக்கரப் பொறியியல் உதவியை சுவிட்சர்லாந்து பொறியாளர்களே செய்தனர்.
  • கல்லாற்றிலிருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தின் நடுவில் பற்சக்கரங்களைப் பிடித்தபடிதான் ரயில் செல்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ள உலகின் இரண்டாவது ரயில்பாதை இது. அதுபோல உலகிலேயே 19 கி.மீ. நீளத்துக்கு பற்சக்கரத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருப்பதும் இங்கு மட்டுமே. காலத்துக்கு ஏற்ப ஊட்டி மலை ரயில் பல மாறுதல்களை இன்று அடைந்துவிட்டாலும், அந்த ரயில் தரும் பயண அனுபவமும் சிலிர்ப்பும் இன்னும் மாறாமலேயே இருக்கின்றன.
  • இன்றைக்கு 124 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஊட்டி மலை ரயிலுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் 2005இல் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னம் என்கிற அங்கீகாரமும் கிடைத்தது. அதற்கு முன்பே 1999இல் டார்ஜிலிங் -இமாலயன் மலை ரயில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. 2008இல் சிம்லா மலை ரயிலும் அந்தப் பெருமையில் இணைந்தது.

நீரும் உயிரும் தரும் மேற்கு மலை

  • மனிதர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், தாஜ்மகால் போன்ற கட்டிடக் கலை அற்புதங்களை நமது மரபுச் சின்னங்களாகப் போற்றப்படுவதைப் போல் இயற்கை செழுமையையும் அற்புதங்களையும் நமது மரபுப் புதையல்களாகப் போற்ற வேண்டும் என்பார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
  • இந்தியாவின் மேற்குப் பகுதி முழுவதும் ஓர் இயற்கை அற்புதமாக விரிந்து கிடக்கிறது மேற்கு மலைத்தொடர். இது உலகில் உள்ள 36 உயிர்ப்பன்மை செழிப்பிடங்களில் (Global biodiversity hotspots) ஒன்று. அத்துடன் உயிர்ப்பன்மை மிகுந்த உலகின் 8 முதன்மைச் செழிப்பிடங்களில் ஒன்றாகவும் மேற்கு மலைத்தொடர் மதிக்கப்படுகிறது. யுனெஸ்கோ உலக இயற்கை மரபுத் தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்ப்பன்மை செழிப்பிடம்

  • இமய மலைத்தொடரைப் போல் உயரமானது இல்லையென்றாலும், இமய மலைத்தொடரைவிடப் பழமையானது மேற்கு மலைத்தொடர். ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்ட இந்த மலைத்தொடர், குஜராத்தின் தபதி ஆறு தொடங்கி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டுள்ளது.
  • இதன் பெரும்பகுதி நான்கு பெரிய தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்துக்கும் குறைவான பரப்பைக் கொண்ட மேற்கு மலைத்தொடர், நாட்டின் 30 சதவீதத் தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகளைக் கொண்டுள்ளது.
  • உலகிலேயே அதிகப் புலிகள், ஆசிய யானைகள் இந்தக் காடுகளிலேயே வசித்துவருகின்றன. நீலகிரி மலைப் பகுதியில் மட்டும் 10,000 யானைகள் இருப்பதாகவும், மேற்கு மலைத்தொடரின் தெற்குப் பகுதி உலகின் 10 சதவீத வேங்கைப் புலிகளின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது.
  • ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள செந்நாய், காட்டு மாடுகள் இங்கு வசிக்கின்றன. மேற்கு மலைத்தொடருக்கே உரிய தனித்துவ உயிரினங்களான வரையாடு (தமிழ்நாட்டின் மாநில விலங்கு), சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன. உலக அளவில் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள 325 உயிரின வகைகள் இங்கு வாழ்ந்துவருகின்றன.

உயிர் தரும் காடு

  • நீலக்குறிஞ்சி போன்ற அரிய தாவர வகைகளின் தாயகமும் மேற்கு மலைத்தொடர்தான். வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள், சோலைப் புல்வெளிகள் எனப் பல்வேறுபட்ட காடுகளைக் கொண்டது இம்மலைத்தொடர். மருத்துவத் தாவரங்கள், வேளாண் தானியங்களின் காட்டு உறவுத்தாவரங்கள், பழங்கள், நறுமணப் பொருள்களின் மரபு ஆதாரங்கள் இந்தக் காடுகளில் உள்ளன.
  • இந்தியாவின் 40 சதவீதப் பகுதிக்கு உயிரூட்டும் சிக்கலான ஆறு அமைப்புகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியாக மேற்கு மலைத்தொடர் திகழ்கிறது. இந்தியப் பருவமழையின் போக்கில் பெரும் தாக்கம் செலுத்தக் கூடியது இதன் காடுகள். தென்மேற்குப் பருவக்காற்றின் மழை மேகங்களைத் தடுத்து தென் மாநிலங்களுக்கு மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது.
  • தென்னிந்தியாவில் வாழும் 25 கோடி மக்களுக்குத் தேவையான ஆறுகள், காட்டு ஓடைகள், வாய்க்கால்களுக்கு மேற்கு மலைத்தொடரே பிறப்பிடம். அந்த வகையில் தென்னிந்திய மண்வளம், நீர்வளத்தின் ஆதாரமாக இந்தப் பகுதி உள்ளது. சுருக்கமாகத் தென்னிந்திய மக்களின் உயிர், மேற்கு மலைத்தொடரில் உறைந்துள்ளது எனலாம்.

சுற்றிச் சுழலும் பிரச்சினைகள்

  • ஆனால், மேற்கு மலைத்தொடரின் பெரும் பகுதி தேயிலை, காபி, ரப்பர், எண்ணெய்ப் பனைத் தோட்டங்களுக்காக ஆங்கிலேயர் காலத்திலிருந்து அழிக்கப்பட்டுவருகிறது. வெட்டுமரத் தொழில், மரக் கடத்தல், ஓரினப் பயிர் வளர்ப்பு போன்ற காரணங்களாலும் இக்காடுகள் அழிந்துவருகின்றன.
  • அத்துடன் சூழலியல் சுற்றுலா, யானை வழித்தடங்களிலும் காட்டின் எல்லை களிலும் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள சொகுசுத் தங்கும் விடுதிகள் போன்றவை ஆபத்தாக உள்ளன. காட்டை ஊடறுத்துச் செல்லும் சாலைகள், அணைக்கட்டுகள், கால்நடை மேய்ச்சல் போன்ற தொடர் மனிதத் தலையீடு களால் மேற்கு மலைத்தொடர் காடுகளும் உயிரினங்களும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
  • இவற்றின் விளைவாக யானை, புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர் – மனித எதிர்கொள்ளல், யானை வழித் தடங்களில் மனித ஆக்கிரமிப்பு, காட்டுயிர் கடத்தல்-கள்ள வேட்டை, பழங்குடிகள் வெளியேற்றப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மேற்கு மலைத்தொடரை மையமிட்டுள்ளன. இவற்றுக்கு ஆக்கபூர்வமான தீர்வைக் காண்பதிலேயே தென்னிந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

கலாபகஸ் தீவுகள் எனும் உயிர்க்கோளம்

  • உலகிலேயே அரிய உயிரினங்கள் வசிக்கும் இடம் என்றால் அது கலாபகஸ் தீவுகள்தாம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுனெஸ்கோ மரபுத் தலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இது. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கலாபகஸ் தீவுகள் ஈக்வடார் நாட்டின் ஒரு மாகாணம்.
  • கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளின் வெடிப்பால் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகளுக்குள் உருவானவை இந்தத் தீவுகள். 13 பெரிய தீவுகள், 6 சிறிய தீவுகள், 107 தீவுத் திட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இளஞ்சூடாகவும் குளிர்ச்சியாகவும் கடல்நீரோட்டங்கள் தீவுகளைச் சுற்றியிருப்பதால், உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது. உயிர்க்கோளமாகத் திகழும் கலாபகஸ் தீவுக் கூட்டங்களில் ஒரு தீவில் இருக்கும் உயிரினங்களைப் போல இன்னொரு தீவில் இருப்பதில்லை.
  • மனிதர்கள் வருகை: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தாமஸ் டி பெர்லங்கா, 1535இல் பனாமாவிலிருந்து பெரு செல்லும் வழியில் கலாபகஸ் தீவுக்கு சென்றார். ஸ்பெயின் மன்னருக்குத் தீவு குறித்துக் கடிதம் எழுதினார். ஸ்பெயினி லிருந்து மாலுமிகள் வர ஆரம்பித்தனர்.
  • 1832இல் ஸ்பெயினிட மிருந்து ஈக்வடாருக்கு இந்தத் தீவுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடமானது. 1960க்குப் பிறகு மீன்பிடித் தொழில் காரணமாக மக்கள் இங்கே குடியேற ஆரம்பித்தனர். தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் தீவுகளில் வசிக்கின்றனர்.

டார்வின் ஆராய்ச்சி

  • விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1835இல் எச்.எம்.எஸ். பீகிள் பயணத்தின்போது கலாபகஸ் தீவில் ஐந்து வாரங்கள் தங்கினார். பரிணாமக் கோட்பாடு குறித்து அவர் எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of the Species) என்கிற நூலில் கலாபகஸ் தீவும் இடம்பெற்றுள்ளது.

அரிய உயிரினங்கள்

  • கலாபகஸ் தீவுகளின் நிலப்பகுதியிலும் கடலிலும் 2,900க்கும் மேற்பட்ட உயிரினங்கள் காணப்படு கின்றன. அவற்றில் 25 சதவீத இனங்கள் இந்தத் தீவுகளில் மட்டுமே காணப்படுபவை. ஸ்பானிய மொழியில் ‘கலாபகஸ்’ என்றால் ஆமை என்று பொருள். 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ராட்சத ஆமைகள் இங்கே காணப்படுகின்றன.
  • இங்கு உள்ள பூபி பறவைகளின் நடனம் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். நீரில் நீந்தும் பல்லிகள், சிறிய பென்குயின்கள், கூட்டமாகச் செல்லும் சிவப்பு நண்டுகள், கடல் சிங்கங்கள், கடல் உடும்புகள், சம்மட்டித் தலைச் சுறாக்கள், அம்மமணி உழுவை, சப்பாத்திக் கள்ளிகள், கறுப்பு வெள்ளை அலையாத்தி தாவரங்கள் போன்றவை இங்கே உள்ளன.

இரவு வான்

  • உலகின் பிற பகுதிகளிலிருந்து இரவு வானைப் பார்ப்பதைவிட, கலாபகஸ் தீவிலிருந்து பார்க்கும்போது துல்லியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். காரணம், இங்கே ஒளி மாசு இல்லை. ஒரே நேரத்தில் வட, தென் அரைக் கோளங்களின் விண்மீன்களை இங்கே ரசிக்க முடியும்.

பாதுகாக்கப்பட்ட பகுதி

  • 1959இல் கலாபகஸ் தீவில் உள்ள 97 சதவீத நிலப் பகுதிகள் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டன. சாண்டா குரூஸ் தீவில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம் இத்தீவுக் கூட்டங்களில் காணப்படும் மதிப்புமிக்க உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புரிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றிவருகிறது.

நன்றி: தி இந்து (16 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்