TNPSC Thervupettagam

பல கட்டத் தேர்தல்கள் இதோடு முடியட்டும்!

April 30 , 2021 1365 days 571 0
  • ஒருவழியாக ஐந்து மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருப்பது நிம்மதிப் பெருமூச்சைத் தருகிறது.
  • சென்னை மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களின் கடுமையான சாடல்களின் பின்னணியில், வாக்கு எண்ணிக்கை சார்ந்து தேர்தல் ஆணையம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசுவாசம் தருகின்றன.
  • வாக்குப்பதிவுச் சாவடிகளிலுமே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது என்றாலும், இதுபோன்ற ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு நீடிக்கும் வகையில் பல கட்டங்களாகத் தேர்தலை அது திட்டமிட்டதையும், பெருங்கூட்டங்கள் கூடிய தேர்தல் பிரச்சாரங்களை அது வேடிக்கை பார்த்ததையும் ‘பொறுப்பற்றதனத்தின் உச்சம்’ என்று வர்ணித்தால் அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
  • கரோனா மறுஅலை சீற்றத்துக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகளே பெரிதும் பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியதும், உத்தர பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் கரோனா தொற்றுக்குள்ளான அரசு அதிகாரிகளில் 135 பேர் இறந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் மக்கள் உணர்வின் பிரதிபலிப்பே ஆகும்.
  • 2019 மக்களவைத் தேர்தலையே ஏழு கட்டங்களில் நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் 2021 வங்க சட்டமன்றத் தேர்தலை, எட்டு கட்டங்களாகப் பிரித்து நடத்த முற்பட்டது எந்த வகையிலுமே நியாயப்படுத்தக் கூடியது அல்ல.
  • வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கும் இடையே கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்துவந்த நிலையிலும்கூட தேர்தல் அட்டவணையை ஆணையம் மறுபரிசீலிக்கவில்லை.
  • வங்க முதல்வர் மம்தாவின் கோரிக்கையையும் அது புறந்தள்ளியது. கடைசியில் கட்சிகள் தாமாக முன்வந்து பேரணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவிக்கும் வரை அரசியலர்களின் பொறுப்பற்ற பிரம்மாண்ட பேரணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்.
  • அதேபோல, தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக ஒரு மாநிலத்தின் நிர்வாகம் பல நாட்களுக்குப் பாதிப்புக்குள்ளாவதன் மோசமான விளைவுகளையும் கரோனா காலம் நமக்குக் காட்டிவிட்டது.
  • முக்கியமான பாடம் என்னவென்றால், தேர்தல்களைப் பல கட்டங்களாக நடத்தும் கலாச்சாரத்திலிருந்து படிப்படியாகத் தேர்தல் ஆணையம் விடுபட வேண்டும்; தேர்தல் அறிவிப்புக்கும், முடிவுகள் அறிவிப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
  • ஒரு மாநிலத்துக்குள்ளான வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்தி முடிப்பது என்ற முடிவு இதில் முக்கியப் பங்காற்றலாம்.
  • வன்முறைகளைக் காரணமாகக் காட்டிப் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் தகவல்தொடர்பு, தேர்தல் நடைமுறைகள் ஆகியவற்றில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் உரிய திட்டமிடலோடும், கறாரான அணுகுமுறையோடும் அணுகினால் ஒரே கட்டத் தேர்தல் என்பதும், குறுகிய காலத்தில் தேர்தல்களை முடிப்பதும் சாத்தியமே!

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 04 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்