TNPSC Thervupettagam

பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதன் அவசியம்

February 25 , 2020 1784 days 763 0
  • இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் எனும் நிலையில், நமது பொருளாதார முன்னேற்றத்தில் கல்வி ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால்,  கவனம் செலுத்தப்படாத, புறக்கணிக்கப்படும் துறையாகக் கல்வி மாறிவருகிறது. தனியார்மயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்வி குறித்த அரசின் கவனம் படிப்படியாகக் குறைந்து வருவது தவறான போக்கு.
  • அவசர நிலைச் சட்டத்தைத் தொடர்ந்து அன்றைய இந்திரா காந்தி அரசு, பொதுப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றியபோது, மாநில அரசுகள் எதிர்த்துப் பேச முடியாமல் வாயடைத்திருந்தன. ஜனதா ஆட்சி ஏற்பட்டபோது மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல யாரும் வற்புறுத்தவில்லை. 

கல்வி

  • விடுதலை பெற்றது முதல் நாம் எல்லாத் தளங்களிலும் கல்வியைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. உயர் கல்வியில் ஏனைய பல நாடுகளைவிட இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், அதே அளவிலான அல்லது திருப்தி அளிக்கும் வகையிலான முன்னேற்றம் தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி நிலைகளில் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.
  • அதிவேகமாகப் பொருளாதாரம் வளர்ந்தபோதும்கூட, கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் ஜிடிபியில் 4% அளவைத் தொட்டதில்லை.
  • 2012-இல் ஜிடிபியில் 3.3% கல்விக்காக ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போதுவரை அந்த அளவைத் தொட்டது இல்லை. 1966-இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷனின் பரிந்துரையான ஜிடிபியில் 6% கல்வி ஒதுக்கீடு என்பது கனவாகத்தான் இன்றுவரை தொடர்கிறது.

நிதிநிலை அறிக்கையில்....

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், கல்விக்கான ஒதுக்கீடு வழக்கம்போல போதுமான அளவு வழங்கப்படவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும், நல்ல அறிவிப்புகளும் இல்லாமல் இல்லை. 100 முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு இணையதள வழிக் கல்விக்கு அனுமதி வழங்க முற்பட்டிருப்பது வரவேற்புக்குரிய முயற்சி. உயர் கல்விச் சாலைகளில் சேர்ந்து படிக்க வசதியாக, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு இது வரப்பிரசாதமாக அமையக்கூடும்.
  • திறன் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடைவெளியை நிரப்பி, இது வேலையில்லாத் திண்டாட்டத்தை சற்று குறைக்க உதவக்கூடும். 150 உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியுடன் இணைந்த பட்ட, பட்டயப் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த உதவும்.

கொள்கை முடிவு

  • 2020-21 நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.99,311.52 கோடி. அதில் உயர் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.39,466.52 கோடி. கடந்த ஆண்டுக்கான கல்வி ஒதுக்கீட்டில் 3% அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது எந்தப் பயனும் அளிக்கப் போவதில்லை. விலைவாசி உயர்வு அளவுக்குக்கூட அதிகரித்த ஒதுக்கீடு இல்லையென்றால், நிர்வாகச் செலவினங்கள் போக புதிய திட்டங்களுக்கு என்ன கிடைத்துவிடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • கல்வியைத் தனியார் துறையின்கீழ் ஒப்படைத்துத் தனது கடமையைத் தட்டிக்கழிப்பது என்று முந்தைய மன்மோகன் சிங் அரசின் கொள்கை முடிவை வார்த்தை பிசகாமல் பின்பற்றுகிறது நரேந்திர மோடி அரசு. அரசின் நேரடிக் கண்காணிப்பும் முனைப்பும் இல்லாமல் கல்வித் துறை தனியார் துறையிடம் விடப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது நடுத்தர, சாமானிய மக்கள் என்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 
    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற  மிகப் பெரிய வெற்றி, அரசுப் பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நல்ல தரமான கல்வியின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதை ஏனைய மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும்.
  • கல்வித் துறையில் 100% அந்நிய  வணிகக் கடனுக்கும், அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டும் அதனால் பெரியதொரு மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தொடக்கக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்வி வரையிலான கல்வியின் தரம் குறித்து ஆண்டுதோறும் "ஏசர்' அறிக்கை வெளிச்சம் போட்டும்கூட, மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயலாற்றிப் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் இருக்கின்றன. தேசியக் கல்விக் கொள்கையும், அனைவருக்கும் கல்வித் திட்டமும், கல்வி பெறும் உரிமைச் சட்டமும் தீர்வாகிவிடாது.

அரசுப் பள்ளிகளில்

  • 2013-14 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 13 லட்சம் அரசுப் பள்ளிகளில் 9.1% மட்டுமே கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்திருக்கின்றன. 2017-18-இல் அதுவே 13% அதிகரித்தது. தற்போது ஆண்டுக்கு 1% அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாம் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை 100% உறுதிப்படுத்த எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ தெரியவில்லை. இது குறித்து 2020-21 நிதிநிலை அறிக்கை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
  • சர்வதேசத் தரத்திலான உயர் கல்வியை உறுதிப்படுத்துவதில்  முனைப்புக் காட்டுவதில் மகிழ்ச்சி, அதே நேரத்தில் கடையேனுக்கும் கடைத்தேற்றம் வழங்கும் விதத்திலான அடிப்படையில், பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதும், கல்வி கற்கும் நிலையை மேம்படுத்துவதும் இல்லாமல் போனால், பொருளாதார முன்னேற்றத்துக்கு அர்த்தம் எதுவும் கிடையாது!

நன்றி: தினமணி (25-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்