TNPSC Thervupettagam

பள்ளி வயதில் பாதை மாறலாமா மாணவர்கள்?

August 4 , 2024 162 days 137 0
  • மதியம் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அது. மாணவர்களின் கலவரக் குரல் ஆசிரியர் அறையை எட்டியதும் சாப்பிட்ட கையைக்கூடக் கழுவாமல் அந்தப் பெண் ஆசிரியர் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடி சம்பவ இடத்தை அடைந்தார். ஒன்பதாம் வகுப்பில், இரண்டு மாணவர்கள் துரத்த ஒருவன் அவர்களிடம் சிக்காமல் பெஞ்சில் ஏறித் தாவி ஓடித் தப்பிக்க முயன்றுகொண்டிருந்தான்.

பாகுபடுத்தும் அடையாளங்கள்

  • இரு மாணவர்கள் சேர்ந்து ஒருவனை அடித்த அடியைக் கண்டு நடுங்கிப்போன ஆசிரியை அடிப்பவர்களின் கைகளைப் பிடித்துத் தடுக்க முயன்றார். தப்பி ஓடிய மாணவன் விழுந்துவிட துரத்தியவர்கள் அருகில் வர, அங்கே கிடந்த மண்வெட்டியைத் தூக்கி அடிக்க முயன்றனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்தவன் விலகிக்கொள்ள அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். கயிறு கட்டியதில் தொடங்கிய சாதிய மோதல் மண்வெட்டியைத் தூக்கி அடிக்கும் அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது என்பதை அறிந்துகொண்ட ஆசிரியர்கள் பயத்தில் உறைந்துபோயினர்.
  • மாணவர்கள் தங்கள் கையில் கட்டியிருக்கும் சாதிக் கயிறுகளைப் பறிமுதல் செய்வதுதான் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களின் முதல் வேலை. நாள்தோறும் சாதியப் பிரிவினை குறித்து வகுப்பில் தொடர்ந்து பேசினாலும், ‘நெயில் பாலிஷ் கலர்’ மூலம் தன் சாதியை அடையாளப்படுத்திக் கொள்வதில் தொடங்கி, சாதிக் கட்சித் தலைவரின் முதல் எழுத்துக்களை வரைந்துகொள்வதையும், தேர்வு அட்டை தொடங்கிப் புத்தகப் பை வரை அனைத்திலும் சாதி அடையாளத்தைப் பொறித்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதையும் மாணவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எது சமூக நீதி?

  • சாதிக் கட்சிகளின் தொடர் ஊடுருவல் ஒவ்வொரு ஊரிலும் நடந்துகொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இன்னொருகுழுவினரின் மீது வெறுப்பை வளர்த்து, சாதிக் கட்சியின் அடியாட்களாகவும் சாதித் தலைவருக்கான கூலிப்படையினராகவும் மாணவர்கள் மாறிவருவது பெரும் அச்சத்திற்குரிய ஒன்று. இப்படிப் பேசும்போது சக ஆசிரியர் ஒருவர், “சாதியைப் பள்ளியிலிருந்தே நீக்க வேண்டும். இட ஒதுக்கீடு தேவையில்லை. அதுதானே இன்னார் என்று அடையாளப்படுத்துகிறது?” என்று கூறினார். இது மிகத் தவறான புரிதல். ஓடுதளத்தில் ஓடக்கூடிய ஐந்து குழந்தைகளில் நான்கு பேர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்போது ஒரு மாணவன் மாற்றுத் திறனாளி எனில் அவர்கள் ஐவரையும் எப்படி ஒரே தொலைவுக்கு ஓட அனுமதிக்க முடியும்? அது எப்படிச் சமூக நீதியாகும்?
  • ஏற்கெனவே காலங்காலமாக சிறந்த கல்வியைப் பெற்று அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் இருக்கும் சமூகத்தினருக்கும் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டுச் சமீபத்தில் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்த சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவது எப்படிச் சமூக நீதியாகும்? வளர்ச்சி குறைந்த குழந்தைக்குக் கூடுதலான ஊட்டம் கொடுக்க வேண்டியதுதானே அவர்களுக்குச் செய்யும் நியாயம். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் கூறுகிறது.
  • இளம்பருவக் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் திரைநட்சத் திரங்களும் விளையாட்டு வீரர்களும்தான் ஆதர்ச நாயகர்கள். அவர்கள் மூலமாகச் சாதி, மத அரசியலுக்குள் குழந்தைகள் சிக்காத வண்ணம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாதிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய திரைக் காட்சிகள் தணிக்கைக் குழுவினரால் திட்டவட்டமாக நீக்கப்பட வேண்டும். வயதும் வாலிபமும் கிளர்ச்சியூட்டும் சாகசச் செயல்களை செய்யத் தூண்டுகின்றன. சக நண்பர்கள் முன்பாகத் தன்னை நாயகனாகக் காட்டிக்கொள்வதற்காகச் செய்யும் சிறிய தவறுகள் ஒருவனுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப்போடுகின்றன என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

  • நண்பர்களால் தூண்டி விடப்பட்டுச் சாதி அமைப்பினரால் வளர்த்தெடுக்கப்பட்டுக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தன் வாழ்க்கையை இழந்து தற்போது மன மாற்றம் அடைந்து வாழும் மனிதர்களைப் பள்ளிக் குழந்தைகளோடு கலந்துரையாட ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ‘ரூட்டு தல’ போன்று கல்லூரிகளில் செயல்பட்ட மாணவர்களின் தற்கால வாழ்க்கைச் சூழலை அவர்களுடைய அனுமதியுடன் காணொளிகளாகத் தயாரித்து சென்னைக் காவல்துறை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. தங்களுடைய மிகையான, தேவையற்ற செயல்பாடுகளால் வாழ்க்கை எவ்வளவு மோசமாக மாறியது என்பதை அந்தக் காணொளியில் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் காணொளிகளைப் பள்ளி மாணவர்களுக்குக் காண்பித்து உண்மையைப் புரியவைக்க வேண்டும்.
  • காவல்துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளுக்குத் திட்டமிட வேண்டும். அரசும் நீதிமன்றமும் இணைந்து துரிதமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அறிவுசார் சமூகமே இன்றைய தேவை. அன்பு மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்யும். அனைத்து அடையாளங்களையும் தூக்கி எறிவோம். குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களைக் கோத்து அன்பால் கட்டுவோம் புதிய உலகை.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்