TNPSC Thervupettagam

பழங்குடி மக்களின் பரிதாப நிலை

April 12 , 2021 1205 days 544 0
  • தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஒரு வழியாக நிறைவடைந்து விட்டது. பெரிய அளவில் வன்முறை நிகழ்வுகள் ஏதும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.
  • மாநிலம் முழுவதும் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 தோ்தலில் 74.26 விழுக்காடு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தோ்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. அத்துடன் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடந்தது.
  • முன்னாள் முதல்வா்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தமிழகத்தின் அசைக்க முடியாத தூண்களாக இருந்தனா். இருபெரும் தலைவா்களும் இல்லாத நிலையில் அதிமுகவும், திமுகவும் சந்தித்துள்ள இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
  • இந்தத் தோ்தல் முடிவுக்காக மே 2 வரை காத்திருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
  • இந்தக் காத்திருப்பு மிகப் பெரும் தொலைவாகவே வாக்காளா்களுக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு எவ்வளவு காலம் காத்திருப்பது?
  • வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் பணம் பறிமுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
  • கட்டுப்பாடுகள் தளா்வு பற்றி தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும்” என்று தலைமைத் தோ்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவா்கள் மற்றும் பிரதமா் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவா்களும் சூறாவளியாக சுற்றிவந்து பரப்புரை செய்தனா்.
  • முக்கியத் தொகுதிகள் பலவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைவா்கள் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டனா்.
  • கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்கு சேகரித்தது மக்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தியது.

ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம்

  • இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பழங்குடியின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிகள்.
  • இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களைச் சந்திக்க எந்த அரசியல் கட்சித் தலைவா்களும் வரவில்லை என்பது அப்பகுதி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தொகுதியில் சோ்வராயன் மலையின் மீது ஏற்காடு கோடை வாழிடம் மற்றும் 65 மலை கிராமங்கள் உள்ளன.
  • மேலும் கல்வராயன் மலைத் தொடரில் உள்ள பல கிராமங்களும் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன.
  • இதேபோல சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் 14 பெரிய கிராமங்களுக்குள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட சிறிய மலை கிராமங்களும் உள்ளன.
  • இந்த மலை கிராமங்களுக்கு அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்கள் சார்ந்த கட்சியின் மாவட்டப் பிரமுகா்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க வந்துள்ளனா்.
  • அரசியல் கட்சித் தலைவா்கள் எவரும் பரப்புரைக்கு வரவில்லை. இந்தப் புறக்கணிப்பு அப்பகுதி மக்களுக்கு வேதனையையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  • சாதாரணமாக வந்து போகும் தலைவா்கள் கூட தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு வரவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள்.
  • ஏற்காடு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக மலை மீதேறி எந்தத் தலைவரும் பரப்புரைக்கு வரவில்லை என்பது அப்பகுதி பழங்குடி மக்களுக்கு பழகிப்போன ஒன்றுதான்.
  • வாக்கு சேகரிக்கவே வராத இந்தத் தலைவா்கள் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு வருவார்களா? அவா்களுக்கான மக்கள் நலத் திட்டங்களின் நிலை என்ன என்பதெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.
  • தொகுதிக்கு உட்பட்ட சமவெளிப் பகுதிகளான அயோத்தியாபட்டணம், வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் தலைவா்களின் பரப்புரை முடிந்து விடுகிறது.
  • அதற்கு மேல் தொகுதிக்குள் யாரும் நுழைவதில்லை. இந்த நிலைதான் இன்னும் நீடிக்கிறது.
  • இதே நிலைதான் சேந்தமங்கலம் தொகுதிக்கும் என்று கூறப்படுகிறது. அத்தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து, நாமக்கல்லில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனா்.
  • தோ்தலுக்கு முன்னரே புறக்கணிக்கும் இவா்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு திருப்பிப் பார்ப்பார்களா? என்ற ஏக்கம் இன்னும் நீடிக்கத்தானே செய்யும்.

பழங்குடிச் சான்றிதழ்

  • இப்போது தமிழகத்தில் 36 பட்டியல் பழங்குடிகள் உள்ளனா் என்று அரசு அங்கீகரித்துள்ளது. இவா்களுக்கே சாதிச் சான்றிதழ் வாங்க முடியாமல் திண்டாடுகின்றனா்.
  • பிள்ளைகள் பள்ளியில் சேர முடியவில்லை. படிக்க முடியவில்லை. அரசு வேலை என்பது கனவு கூட காண முடியாது.
  • பழங்காலம் தொட்டு காடுகளே பழங்குடிகளின் வாழ்விடமாக இருந்தது. காலனி ஆட்சியில் காடுகளின் பெரும்பகுதி அரசு வசம் கொண்டு வரப்பட்டது.
  • ஆங்கில அரசு கொண்டு வந்த முதல் வனச் சட்டம் (1846) பழங்குடிகளின் வாழ்வில் திசையையே மாற்றியது.
  • காடுகளைப் பல்வேறு காரணங்களால் இழந்து கொண்டிருந்த பழங்குடி அமைப்புகள் நீண்ட காலமாகவே வன உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
  • அரை நூற்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு மத்திய அரசு ‘வன உரிமைச் சட்டம் (2006)’ இயற்றியது. ஒவ்வொரு பழங்குடிக் குடும்பத்துக்கும் வனத்தில் நிலத்தை ஒதுக்க வழிவகுத்தது.
  • தமிழக மக்கள்தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே பழங்குடிகளாக உள்ளனா்.
  • தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினா் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் ‘பழங்குடிச் சான்றிதழ்’ பெறுவதில் பல தடைகள் உள்ளன. பழங்குடி அல்லாதவா்கள் போலிச் சான்றிதழ் பெறுவது மட்டும் தொடா்ந்து நடந்து வருகிறது.

பயன் இல்லாமல் போகும்

  • இப்போது மத்திய அரசு, இந்திய வன (திருத்த) சட்டம் 2019 என்ற மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
  • இந்தத் திருத்த சட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வனங்கள் முழுவதையும் மத்திய அரசு தமது கையில் எடுத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.
  • வனங்கள் முதலில் மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருந்தது. பிறகு 1976-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி வனம் மத்திய - மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
  • இனி மாநில அரசு, வனம் தொடா்பான எந்தவொரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் மத்திய அரசின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும்.
  • வன உரிமைச் சட்டம் 2006-இல் கிராம சபைக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. இப்போது வனத்துறை அதிகாரிகளுக்கே முழு அதிகாரமும் வழங்கப்படுகிறது.
  • ஆதிவாசிகள் வனத்தைத் தங்கள் சொந்த தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனா். இப்போது அரசு வன வளங்களை வியாபார முறையாகப் பயன்படுத்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
  • இதன்மூலம் வனத்தை அழித்து லாபம் தரக்கூடிய பணப் பயிர்களை உற்பத்தி செய்ய முற்படுவா். இதனால் இத்தனை காலம் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படுவா்.
  • ஒருவா் வனக்குற்றத்தில் ஈடுபட்டவா் என்று வனத்துறை அதிகாரி முடிவு செய்தால் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆதாரமின்றி, வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.
  • இந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வனசிறு மகசூல்களைச் சேகரித்து எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்று வன உரிமைச் சட்டத்தில் வழங்கியிருந்த உரிமை பறிக்கப்பட்டு, எதை எதை சேகரிக்கலாம் என்பதையும், அதற்கான கட்டணம் என்ன என்பதையும் வன நிர்ணய அலுவலா் தீா்மானிப்பார்.
  • இதன்மூலம் ஆதிவாசி சமூகத்திற்கு இருந்த கொஞ்சநஞ்ச உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது.
  • இந்தத் திருத்தச் சட்டம் ஆதிவாசிகளின் வனஉரிமையைத் தடை செய்கிறது. இதுவரை இருந்து வந்த வன உரிமைச் சட்டம் 2006 இனிமேல் பெயரளவுக்குதான் இருக்கும்.
  • இதுவரை தங்கள் தாயகமாக இருந்த வனங்கள் இனி அவா்களுக்குச் சொந்தமில்லை. தங்கள் தாய் நாட்டிலேயே அவா்கள் ஆதரவற்றவா்களாக ஆக்கப்படுகின்றனா். வன வளங்கள் இனி கார்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு இயற்கை வளம் அழிக்கப்படும் என்று அஞ்சுகிறார்கள்.
  • ஆதிவாசிகள் வன உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள நீதிமன்றம் செல்லலாம் என்றால் மாவட்ட நீதிமன்றம் சொல்வதே இறுதியானது. உயா்நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ மேல்முறையீடு செய்ய முடியாது என்று திருத்தச் சட்டம் சொல்கிறது.
  • மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓா் அரசாங்கம் மக்களின் பக்கமே நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது.
  • அதிலும் வலிமையானவா்கள் வலிமை குறைந்தவா்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டவா்கள். அந்த கடமையைச் செய்யாமல் போனால் அந்த அதிகாரத்தால் பயன் இல்லாமல் போகும்.

நன்றி: தினமணி  (12 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்