- போதுமான ஊடக வெளிச்சம் பெறாமல் கடந்து போயிருக்கிறது கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மட்சோடாகிஸின் இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணம். அந்தப் பயணத்தின் முக்கியத்துவம் ராஜாங்க உறவுக்கும் அப்பால் முக்கியமானது. ஆயிரம் ஆண்டு
- களுக்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே கலாசார, வர்த்தகத் தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படும் நிலையில், அந்த உறவின் நீட்சியாகத்தான் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸின் அரசுமுறைப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும்.
- தனது இந்தியாவுக்கான இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது, தில்லியில் நடைபெற்ற "ரைசீனா உரையாடல்' என்கிற சர்வதேசக் கருத்தரங்கிலும் அவர் கலந்துகொண்டார். அந்தக் கருத்தரங்கில், "சர்வதேச அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதில் முக்கியத்துவம் பெற்ற நட்பு நாடாகத் திகழும் இந்தியாவுடனான கூட்டணியை வலுப்படுத்துவது ஐரோப்பியக் கூட்டமைப்பின் அடித்தளமாக இருக்க வேண்டும்' என்கிற அவரது கருத்தை ஒரு சில ஐரோப்பிய நாடுகள் வழிமொழிந்திருக்கின்றன.
- கிரேக்க சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை வந்திருக்கிறார். அங்கே போரஸ் என்கிற புருஷோத்தமன் உள்பட இரண்டு ராஜபுத்திர மன்னர்களுடன் போரிட்டபின், சிந்து நதியைக் கடந்து இந்திய தீபகற்பத்தில் நுழையாமல் அப்படியே திரும்பி விட்டார் என்பது செவிவழி வரலாறு.
- அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரகுப்த மௌரியர் காலத்தில் மௌரியப் பேரரசுக்கும், கிரேக்கப் பேரரசுக்கும் இடையே ராஜாங்க உறவு இருந்ததாக வரலாறு சொல்கிறது. அவரது அமைச்சரவையில் கிரேக்கத் தூதராக மெகஸ்தனிஸ் என்பவர் இருந்ததாகப் பதிவுகள் இருக்கின்றன.
- இந்தியா விடுதலை பெற்ற மூன்று ஆண்டுகளில், அதாவது 1950-இல், கிரீஸ் நமது நாட்டில் தூதரகம் அமைத்துவிட்டது. ஆனால், கிரீஸின் தலைநகர் ஏதென்ஸில் தூதரகம் நிறுவ நமக்கு 28 ஆண்டுகள் ஆகின. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இந்திரா காந்தி ஆட்சியில்தான் நெருக்கமாக வளர்ந்தது. அதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவுக்கும், அன்றைய சோவியத் யூனியனுக்கும் இடையே காணப்பட்ட பனிப்போர்.
- ரொனால்ட் ரீகன் 1980-இல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பனிப்போர் உச்சம் தொட்டது. கிரீஸில் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு 1974-இல் ஆண்ட்ரியாஸ் பாப்மெண்ட்ரியோ சோஷலிச ஆட்சியை நிறுவியிருந்தார். இந்தியாவின்அணிசாரா நாடுகள் சிந்தனையை ஒட்டியதாக இருந்தது பாப்மெண்ட்ரியோவின் வெளியுறவுக் கொள்கை. இந்தியா, கிரீஸ் உள்ளிட்ட ஆறு நாடுகள் அணு ஆயுதக் குறைப்பை வலியுறுத்தி குரலெழுப்பின.
- இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் (1984), அணு ஆயுதக் குறைப்பு மாநாடு (1985), குடியரசு தின சிறப்பு விருந்தினர் (1986) என்று பாப்மெண்ட்ரியோ மூன்று தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அதன் பிறகு ஏனோ அந்த நெருக்கம் படிப்படியாகக் குறைந்துவிட்டது.
- 1991-இல் சோவியத் யூனியன் பிளவுபட்டதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்பே அற்றுப்போன நிலை.
- 21-ஆம் நூற்றாண்டில் இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சியைக் கண்டபோது, கிரீஸ் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை நோக்கி நகரத் தொடங்கியது. 2015-இல் ஏறத்தாழ திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது கிரீஸ். வேலையில்லாத் திண்டாட்டமும், பண வீக்கமும், தட்டுப்பாடும் உச்சம் தொட்டன. ஒவ்வொரு கிரீஸ் குடிமகனும் 40% வருமானக் குறைவை எதிர்கொண்டனர். 280 பில்லியன் டாலர் அளவிலான மூன்று பிணை எழுப்பு (பெயில் அவுட்)வழங்கப்பட்டது.
- அப்படிப்பட்ட பின்னணியில்தான் கிரியாகோஸ் மட்சோடாகிஸின் "புதிய ஜனநாயகக் கட்சி' கிரீஸ் அரசியலில் களமிறங்குகிறது. 2019-இல் அவர் பிரதமராகப் பொறுப்பேற்கிறார். பாதாளத்தில் விழுந்து கிடந்த கிரீஸ் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டும் வளர்ச்சியை நோக்கி நகரச் செய்த பெருமை மட்சோடாகிûஸத்தான் சாரும். அதனால்தான் கடந்த 2023-இல் அவருக்கு மீண்டும் மிகப்பெரிய வெற்றியை கிரீஸ் மக்கள் அளித்தார்கள்.
- கடந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொண்ட கிரீஸ் அரசுமுறைப் பயணத்தைத் தவிர, முந்தைய 14 ஆண்டுகளில் எந்தவித உயர்நிலை ராஜாங்க பேச்சுவார்த்தைகளோ, தொடர்புகளோ இருக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் கிரீஸ் உறுதியாக இருந்திருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் பிரச்னை, அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு உள்ளிட்ட எல்லா பிரச்னைகளிலும், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்' என்பதுதான் கிரீஸின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.
- காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் கருத்து வேறுபாடுபோல, சைப்ரஸ் பிரச்னையில் கிரீஸும், துருக்கியும் மோதலில் இருக்கின்றன. காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை துருக்கி ஆதரிக்கும் நிலையில், கிரீஸுடனான இந்தியாவின் நெருக்கம், துருக்கியை சற்று கட்டுப்படுத்தி வைக்கும்.
- சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்துவரும் நட்பு நாடு என்கிற முறையில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மட்சோடாகிஸ் மேற்கொண்ட இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் மிகப் பழைமையான இரண்டு நாகரிகங்களுக்கு இடையேயான உறவு என்பதற்கும் மேலாக, மாவீரன் அலெக்ஸாண்டரின் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே நட்புப் பாலம் அமைக்கும் கனவை நனவாக்கும் முயற்சி என்றும்கூட இதைப் பார்க்கலாம்.
நன்றி: தினமணி (14 – 03 – 2024)