TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது

February 15 , 2023 544 days 373 0
  • இருபது ஆண்டுகளுக்கு முன் நான் தொகுத்த ஒரு புத்தகத்தில் பாகிஸ்தானின் புகழ் வாய்ந்த பொருளாதார வல்லுநர் மீகால் அஹம்மது, ‘பொருளாதார நெருக்கடி அரசு’ என்ற தலைப்பில் ஓர் அத்தியாயம் எழுதினார்.
  • அதில் மீகால் அஹம்மது இப்படி எழுதினார்: “பொருளாதார நிர்வாகம் என்பது பாகிஸ்தானில் தொடர்ந்து சீரழிந்துவருகிறது, ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கே அது இட்டுச் செல்கிறது. பிரச்சினையின் ஆணிவேர் எதுவென்றால் பொது நிதியை நிர்வகிப்பதில் உள்ள மிகவும் மோசமான நிர்வாக முறைகள். அத்துடன் பொருளாதாரத்தின் அடித்தளக் கட்டமைப்பிலேயே காலங்காலமாக தீர்க்கப்படாத ஆழமான பிரச்சினைகள் பல இருப்பதால் அரசின் திறனற்ற நிர்வாகம் அவற்றை மேலும் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவுகள் அனைவரும் வெளிப்படையாக அனுபவிக்கும் வகையில் இருக்கின்றன. பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கடன் தருவதற்கு விதிக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள், வேறு வழியில்லாமல் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தத் திட்டங்கள் முடிவடைந்துவிட்டாலோ அல்லது அரசு நிர்வாகமே கடன் போதும் என்று வாங்குவதை நிறுத்திக் கொண்டாலோ அந்தச் சீர்திருத்தங்களும் கைவிடப்படுகின்றன அல்லது பழைய நிலைக்கே நாடு மீண்டும் திரும்பிவிடுகிறது!”
  • இந்தக் கட்டுரை எழுதப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தானின் பொருளாதார நிர்வாகம் மாறவே இல்லை. அன்றைக்கு அவர் எழுதியதை இன்றைக்கு மீண்டும் அப்படியே வார்த்தை மாறாமல் பயன்படுத்தும் அளவுக்கே நிலைமை இருக்கிறது. ‘மிக மோசமான பொருளாதார நிர்வாகம்’ என்பதே இதை விவரிப்பதற்கான சரியான வார்த்தை.
  • அடுத்தடுத்து பல பத்தாண்டுகளாக (தசாப்தம்) ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளும், ராணுவமும் - மிகச் சில விதிவிலக்குகள் தவிர – பாகிஸ்தானின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளை மோசம் ஆக்கும் வகையிலேயே செயல்பட்டுவருகின்றன.
  • அரசின் வெளியுறவுக்கொள்கையும் பொருளாதார நிர்வாகமும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. வெளிநாடுகளின் நிதியுதவி அல்லது கடனுதவி ஆகியவற்றை அதிகம் நம்பியே பாகிஸ்தானின் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. நிரந்தரமான வளர்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும், பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு காண வேண்டும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே ஆட்சியாளர்களுக்கு இல்லை.
  • இப்போதும்கூட நிலைமையைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் உதவி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டப்படுகிறதே தவிர, உள்நாட்டிலேயே இதைப் பெற வழியுண்டா என்று ஆராயப்படுவதில்லை. இது எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் சர்வதேச நிதி அமைப்போ, நட்பு நாடோ கடன் தர முன்வந்தாலும், நன்கொடை அளித்தாலும் அதை அரசு அதிகாரிகள் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்! ஊடகங்களில் ஒரு பகுதியும் இவையெல்லாம் பாகிஸ்தானின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே பூரிக்கின்றன.
  • இன்னொருவர் தரும் பணத்தில் வாழ்வது தேசிய சாதனை இல்லை என்று யாருக்கும்  உறைப்பது இல்லை. நெருக்கடியைத் தீர்க்க எங்கிருந்தோ பணம் வந்துவிட்டது, இனி கவலையில்லை என்று ஆளும் வர்க்கத்துக்கு தவறான நிம்மதியை இந்த உதவிகள் அளித்துவிடுகின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சினைகள் மீது அக்கறை செலுத்தி அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு தோன்றுவது இல்லை.
  • பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்குத் தோற்றுவாயாக இருப்பது அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான நிதிப் பற்றாக்குறை தொடர்ந்துவருவதுதான். தன்னுடைய வருவாய் ஆதார வரம்புக்கும் அப்பால் கடன் வாங்கித்தான் வாழ்கிறது அரசு. உள்நாட்டில் நிதியாதாரத்தைத் திரட்ட விரும்புவதில்லை, கட்டுக்கடங்காத செலவையும் குறைத்துக்கொள்ள முற்படுவதில்லை.
  • இந்த நிதிப் பற்றாக்குறைதான் நாட்டில் ஆண்டுக்கணக்காக தொடர்ந்து நிலவும் பேரியல் பொருளாதார ஸ்திரமற்ற நிலைக்கும், அதிக அளவு பணவீக்கத்துக்கும், பட்ஜெட் பற்றாக்குறைக்கும், வெளிவர்த்தகப் பற்றாக்குறைக்கும் காரணம். பொருளாதாரக் கொள்கைகளை மனம்போன வகையில் கடைப்பிடிப்பதால் இவை உண்டாகின்றன. வெளிநாடுகளுடன் பாகிஸ்தான் அரசு வைத்துக்கொள்ளும் உறவுகள் காரணமாகவே பொருளாதார நிர்வாகத்தில் அக்கறையின்மையும் தொடர்கிறது.
  • நாடு சுதந்திரம் அடைந்த தொடக்கக் காலத்தில், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்தது. அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்ததால், அரசின் வருவாய்க் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து உதவியது அமெரிக்கா. எனவே அடுத்தடுத்து பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்த படித்த நகர்ப்புற மேட்டுக்குடிகளும் - கிராமப்புற மேட்டுக்குடிகளும் பொருளாதார சீர்திருத்தங்களைத் தவிர்த்துவிட்டன. எனவே வரி வருவாயும் அதிகரிக்கவில்லை; வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் பெருகவில்லை. இதன் விளைவாகவே உள்நாட்டில் நிதியாதாரம் திரளவில்லை.
  • அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கென்றாலும் நுகர்வுக்கென்றாலும் வெளிநாட்டு நிதியுதவியை வைத்து ஈடுகட்டுவதே நடைமுறையாகிவிட்டது. அரசின் வெளியுறவுக் கொள்கை – அணி சேர்க்கை காரணமாக இது அப்படியே பல்லாண்டுகளுக்குத் தொடர்ந்தது.
  • அமெரிக்காவுடன் வெறும் நட்புறவாக இருந்தது பிற்காலத்தில் ராணுவ உடன்படிக்கைகளால் கூட்டாகவே வலுப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ரஷ்யாவை வெளியேறச் செய்யவும், சோவியத் ஒன்றியம் மேற்கொண்டு முன்னேறாமல் தடுக்கவும் பாகிஸ்தானைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது அமெரிக்கா. இதற்காகக் கேட்கும்போதெல்லாம் கடன் கொடுத்தது. நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு, தாலிபான்களை ஒழிக்க பாகிஸ்தானின் நட்பு அமெரிக்காவுக்கு மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. எனவே பாகிஸ்தானின் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தானே நேரடியாகக் கடன் தருவதுடன், பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) போன்ற அமைப்புகள் மூலமும் கடனுதவியை அதிகப்படுத்தியது. அது மட்டுமின்றி கடன் சுமை அதிகரித்தபோது பழைய கடன் மீது புதிய கடனைத் தந்து உதவியது.
  • இந்தக் காரணங்களால் ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்திலும் பர்வேஸ் முஷாரஃப் காலத்திலும் வெளிநாட்டு நிதியுதவியிலேயே பாகிஸ்தான் நிர்வாகம் நடந்தது. பொருளாதாரத்தில் பாகிஸ்தான் வளர்ந்துவிட்ட மாயையும் அது ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியது.
  • இப்படி வெளிநாட்டு உதவி மிதமிஞ்சி கிடைத்த காலத்தில், அதையே சீர்திருத்தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் வரி விதிப்புகளை அதிகப்படுத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தியிருந்தால், சொந்தக் காலில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியிருக்கலாம். வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம், வரிவருவாய் இனங்களைப் பெருக்கியிருக்கலாம், நாட்டின் பொருளாதார நிலை குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து சாதகங்களை வலுப்படுத்தியிருக்கலாம் – பாதகங்களைக் குறைத்திருக்கலாம், ஏற்றுமதியை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கலாம்; மக்கள் இடையே சேமிப்பை ஊக்குவித்து உள்நாட்டிலிருந்தே முதலீட்டுக்கான நிதியைப் பெற்று, மக்கள்தொகை வளர்ச்சி வேகத்தைவிட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகும்படி செய்திருக்கலாம். இவற்றில் எதுவுமே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
  • வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்ற பாகிஸ்தானியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய பணம் ஆட்சியாளர்களுக்குத் தவறான பெருமிதத்தை அளித்தது. நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது என்று திருப்தியில் ஆழ்ந்தனர். எனவே எந்தச் சீர்திருத்த யோசனைகளையும் ஒத்திப்போட்டனர். பொருளாதார அடித்தளக் கட்டமைப்புகள் குறித்து கவலையே படாமல் தவறான வகையில் நிர்வாகத்தைத் தொடர்ந்தனர். இப்படிக் கடன் வாங்கி பெற்ற வளர்ச்சி, அப்படியே நீடிப்பதற்குப் பதில் இப்போது மிகப் பெரிய கடன் சுமையாக மென்னியைப் பிடிக்கிறது.
  • பாகிஸ்தானின் வரவு-செலவு நிர்வாகம் (பட்ஜெட் தயாரிப்பு) 1980-களின் மத்தியப் பகுதியில் புதிய வரலாறு படைத்தது! அரசின் நடப்புக் கணக்குச் செலவை ஈடுகட்டுவதற்குக் கூட போதாமல், அரசின் வருவாய் குறைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர்கள் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அன்றாட நுகர்வுக்கேகூட கடன் வாங்கி சமாளித்தனர். இதனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசு வாங்கிய கடன் இப்போது தாங்க முடியாத பெரும் சுமையாக அழுத்துகிறது. இந்தச் சுமைதான் இப்போது பொருளாதாரத்தை முடக்குகிறது.
  • சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்த பாகிஸ்தான் கடனுதவிக்காக சீனா, சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளை இப்போது அதிகம் நாடி வருகிறது. அந்த நாடுகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அன்றாடச் செலவுக்கே நிதி போதாத நெருக்கடியிலிருந்தும் மீட்க தொடர்ந்து உதவுகின்றன. பழைய கடன் பத்திரங்களை உரிய காலத்தில் பணம் தந்து மீட்க முடியாதபோது, அதையே புதிய கடனாக மாற்றிக்கொள்ள இந்த நாடுகள் உதவுகின்றன. ஐக்கிய அரபு சிற்றரசும் சவுதி அரேபியாவும் சில நாள்களுக்கு முன்னால் செய்த அறிவிப்புகள் இந்த வகையிலானவை. கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு வந்த பிறகும்கூட, வெளியிலிருந்து கடன் வாங்கிச் சமாளிப்பதையே அரசு சிந்திப்பதை இவை காட்டுகின்றன.
  • பன்னாட்டுச் செலாவணி அமைப்பிடமிருந்து 23-வது முறையாக இப்படி அவசரக் கடன் வாங்குகிறது பாகிஸ்தான் என்பதே அதன் கடன் நிர்வாகக் கலாச்சாரத்துக்கு சாட்சியம். நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ இப்படிக் கடன் வாங்கியே சமாளிப்பதை மானப் பிரச்சினையாகவே கருதுவதில்லை. இது பொருளாதார நிர்வாகத்தில் நாடு தொடர்ந்து அடைந்துவரும் தோல்வியைத்தான் காட்டுகிறது. ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி நோக்கிச் செல்லும் நாடு, அடுத்த நெருக்கடியைத் தவிர்க்கும் நிலையில் இல்லை.
  • இப்படி அவசரத்துக்கு அல்ல – அன்றாட நிர்வாகத்துக்கே தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருப்பதால் வெளிநாட்டை நம்பியே பிழைப்பு நடத்தும் நாடாகிவிட்டது பாகிஸ்தான்!

நன்றி: அருஞ்சொல் (15 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்